மேற்கத்திய தீவுகள் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலிப்பவர் ஆண்ட்ரே ரஸ்ஸல். அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி முழுவதுமாக இழந்தது. அதிலும், மூன்றாவது போட்டியின் 2வது இன்னிங்ஸில் 27 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது விமர்சனத்திற்குள்ளானது. இதைத் தொடர்ந்து, அந்த அணிக்கு ஆலோசனை வழங்க ரிச்சர்ட்ஸ், லாரா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் ஜூலை 20 முதல் தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு டி-20 போட்டிகளுக்குப் பிறகு மேற்கத்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரும் மூத்த வீரருமான ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “மேற்கத்திய தீவுகள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என் வாழ்க்கையில் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாட விரும்புகிறேன். கரீபிய மண்ணில் இருந்து வரும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் அதேவேளையில், எனது சர்வதேச வாழ்க்கையை உயர்வாக முடிக்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2026இல் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவிருக்கும் அடுத்த டி-20 உலகக் கோப்பைக்கு முன்னதாகவே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவது அந்த அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் போன்ற லீக் தொடர்களில் ரஸ்ஸல் தொடர்ந்து விளையாடவுள்ளார்.
37 வயதான ரஸ்ஸல், 84 போட்டி 84 டி20யில் விளையாடி1,078 ரன்களையும் 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில், 2012 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தார். அனைத்துவிதமான 561 டி20 போட்டிகளில் பங்கேற்ற அவர், 168.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 9,316 ரன்களைக் குவித்துள்ளார் மற்றும் 485 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1034 ரன்களையும் 70 விக்கெட்களையும் எடுத்துள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா இரண்டு முறை சாம்பியன் ஆன அணியிலும் ரஸ்ஸல் இடம்பெற்றிருந்தார்.
ரஸ்ஸலின் ஓய்வு குறித்து பயிற்சியாளர் டேரன் சமி, "ஆண்ட்ரே எப்போதும் ஒரு முழுமையான, கடுமையான வீரராக இருந்து வருகிறார். மேற்கிந்தியத் தீவுகளுக்காக சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு. அவரது அடுத்த அத்தியாயத்திற்கு நல்வாழ்த்துகள். மேலும் அவர் தொடர்ந்து வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பார் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.