ஆர்சிபி அணியின் ஏல செயல்பாட்டை ஒவ்வொருவரும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். பல முன்னணி வீரர்களுக்கு அவர்கள் போட்டி போடாதது பெரிதாக விமர்சிக்கப்படுகிறது. அதேசமயம் அவர்கள் அவ்வளவு மோசமான அணியையும் கட்டமைத்துவிடவில்லை. புவனேஷ்வர் குமார், லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா, ஹேசில்வுட், குருனால் பாண்டியா, ஃபில் சால்ட் என சர்வதேச அனுபவம் கொண்ட பல வீரர்களை வாங்கியிருக்கிறார்கள். முன்பு இருந்ததை விட அவர்களது வேகப்பந்துவீச்சு மிகச் சிறப்பாகத் தெரிகிறது. மிடில் ஆர்டரும் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு வழக்கம்போல் சிறந்த லெவனைத் தேர்வு செய்யும் தலைவலி இருக்கவே போகிறது.
மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள்:
ஃபில் சால்ட் (11.5 கோடி), லியாம் லிவிங்ஸ்டன் (8.75 கோடி), ஜித்தேஷ் ஷர்மா (11 கோடி), டிம் டேவிட் (3 கோடி), குருனால் பாண்டியா (5.75 கோடி), ராஷிக் தார் (6 கோடி), ஸ்வப்னில் சிங் (50 லட்சம்), புவனேஷ்வர் குமார் (10.75 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (12.5 கோடி), தேவ்தத் படிக்கல் (2 கோடி), ஸ்வஸ்திக் சிகாரா (30 லட்சம்), ஜேக்கப் பெதல் (2.6 கோடி), மனோஜ் பாண்டகே (30 லட்சம்), ரொமாரியோ ஷெபர்ட் (1.5 கோடி), சூயாஷ் ஷர்மா (2.6 கோடி), மோஹித் ராதீ (30 லட்சம்), நுவான் துசாரா (1.6 கோடி), லுங்கி எங்கிடி (1 கோடி), அபினந்தன் சிங் (30 லட்சம்)
ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:
விராட் கோலி (21 கோடி), ரஜத் பட்டிதார் (11 கோடி), யஷ் தயால் (5 கோடி)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் சிறந்த பிளேயிங் லெவன்
1) விராட் கோலி
2) ஃபில் சால்ட் (விக்கெட் கீப்பர்)
3) ஜேக்கப் பெதல்
4) ரஜத் பட்டிதார்
5) லியாம் லிவிங்ஸ்டன்
6) ஜித்தேஷ் ஷர்மா
7) குருனால் பாண்டியா
8) புவனேஷ்வர் குமார்
9) ஜோஷ் ஹேசில்வுட்
10) சூயாஷ் ஷர்மா
11) யஷ் தயால்
இம்பேக்ட் ஆப்ஷன்கள்: ஸ்வப்னில் சிங், தேவ்தத் படிக்கல், ராஷிக் தார்
மேலே இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பலருக்கும் சிறந்த அணியாகத் தெரியாது. டிம் டேவிட் இல்லாததை பலரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அதற்கு முன் பல்வேறு விஷயங்களை பரிசீலிக்கவேண்டும். பெதலுக்குப் பதில் டிம் டேவிட் இருந்தால், டாப் 6 முழுவதும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். அது எதிரணிகள் லெக் ஸ்பின்னையோ இடது கை ஸ்பின்னையோ எளிதாகப் பயன்படுத்த உதவிடும். லெவனில் ஆடக்கூடிய ஒரு இந்திய இடது கை பேட்ஸ்மேன் என்றால் தேவ்தத் படிக்கல் இருக்கிறார். ஆனால், அவரை முக்கிய லெவனில் சேர்க்கும்பட்சத்தில் டிம் டேவிடை யாருக்குப் பதிலாகக் கொண்டுவருவது?
டிம் டேவிட் என்னதான் மிகச் சிறந்த ஃபினிஷராக இருந்தாலும், அவருடைய ஃபார்ம் சமீபத்தில் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதேசமயம் இளம் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெதல் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார். தன் சர்வதேச கரியரின் தொடக்கத்திலேயே அசத்திக்கொண்டிருக்கிறார். தொடர்ச்சியான வலது கை பேட்ஸ்மேன்களுக்கு நடுவே இவர் ஒரு மாற்றமாக இருப்பார். மேலும், சக இங்கிலாந்து வீரர்களான சால்ட் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரு ஆடும்போது அது அவர் சீக்கிரம் செட் ஆகவும் உதவி செய்யும்.
இதைத் தவிர்த்துப் பார்த்தால் ஆர்சிபி அணிக்கு நிறைய நல்ல பேக் அப் ஆப்ஷன்களும் இருக்கின்றன. பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல், வேகப்பந்துவீச்சுக்கு ராஷிக் தார், வெளிநாட்டு வீரர்களில் எங்கிடி, ரொமாரியோ ஷெபர்ட், நுவான் துஷாரா என பெரும் படையே இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அவர்களது ஸ்பின் யூனிட். சூயாஷ் ஷர்மாவுக்கு கடந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. அவர்தான் அணியின் பிரதான ஸ்பின்னராக இருப்பார். அவர் போக, ஸ்வப்னில் சிங் மட்டுமே இருக்கிறார். குருனால், லியாம் லிவிங்ஸ்டன் போன்றவர்களுக்கு அதனால் கூடுதல் பொறுப்பு ஏற்படுகிறது. சொல்லப்போனால் ஜேக்கப் பெதல் இந்த இடத்திலும் கூட உதவிகரமாக இருப்பார்.