விராட் கோலி எக்ஸ் தளம்
T20

டெஸ்ட் போட்டி | ரோகித்தைத் தொடர்ந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி

இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

Prakash J

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பிசிசிஐயிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்ததாகவும், இந்த ஓய்வு முடிவை அவர் பரிசீலிக்க வேண்டும் எனவும் அது கேட்டுக் கொண்டதாகவும் கடந்த சில நாள்களாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில்தான், விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஓர் உணர்ச்சிபூர்வமான பதிவில் தனது ஓய்வு முடிவை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பதிவில், ”நான் இந்த வடிவத்தில் இருந்து விலகுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இது சரியானது என நினைக்கிறேன். நான், அதற்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக அது எனக்கு திருப்பித் தந்துள்ளது. விளையாட்டுக்காக, நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட மக்களுக்காக, வழியில் என்னைப் பார்த்ததாக உணரவைத்த ஒவ்வொரு நபருக்காகவும் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் நான் நடந்து செல்கிறேன். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி இந்தியாவுக்காக மொத்தம் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 7 இரட்டைச் சதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 254 ஆகும்.

முன்னதாக, 2024 டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தபிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதேபோல், இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.