ஒரு பொருள் நம்மிடம் இருப்பது வரை அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. ஆனால், அதேபொருளை வேறு ஒருவர் கைகளில் பார்க்கும்போது, நமக்குள் பொங்கும் ஆத்திரங்களுக்கு நம்மால் காரணங்களைச் சொல்லித் தேற்றவே முடியாது. அப்படித்தான் ஆகியிருக்கிறார்கள், ஆர்சிபி ரசிகர்கள்.
2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 5ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய களத்தில் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக ஆடியது. ராக்கெட் கூட சற்றே மெதுவாகத்தான் மேலேறும், ஆனால் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் விட்ட ராக்கெட்கள் ஏழேலு உலகத்தைத் தாண்டிப்போயிருக்கும். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 243 ரன்களை எடுத்தது.
244 எனும் Eiffel இலக்கைக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி சற்றொப்ப அருகில் வந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பஞ்சாப் அணியின் இந்த வெற்றிக்கு மூன்று வீரர்களைக் காரணமாகச் சொல்லலாம். முதலில், சாத்சாத் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்; அடுத்தது ஷ்ஷாங் சிங் மற்றும் விஜய்குமார் வைஷாக்.
இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போவது ஒருவரைத்தான். அது விஜயகுமார் வைஷாக். போட்டி மெல்ல மெல்ல குஜராத் டைட்டன்ஸ் அணியின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு சற்றும் கைகொடுக்கவில்லை. 14 ஓவர்கள் முடிந்துவிட்டது. 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 169 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. கடைசி 6 ஓவர்களில் 74 ரன்கள் தேவை. குறிப்பாக கைகளில் 8 விக்கெட்கள் இருக்கின்றன. கண்டிப்பாக வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் குஜராத் இருந்தது. அத்தகைய சூழலில்தான் களத்திற்கு வந்தார் விஜயகுமார் வைஷாக். பெஞ்சில் காற்றாட உட்கார்ந்து கொண்டிருந்த அவரை இம்பேக்ட் ப்ளேயராக கொண்டு வந்திருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். கைமேல் பலன் கிடைத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோரிங் வேகம் மெல்ல மெல்ல பஞ்சாப் கிங்ஸ் கைகளில் வந்தது. விஜயகுமார் வைஷாக்கிற்கு ஒரே திட்டம்தான் வைட் ஆஃப் ஸ்டெம்ப் வீசுவது. முதல்பந்திலிருந்தே தனது திட்டத்தினைக் கச்சிதமாக செயல்படுத்தத் தொடங்கினார் வைஷாக். அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. முக்கியமாக 2 டாட் பால்கள் கிடைத்தன. வைஷாக்கின் திட்டம் எல்லோருக்கும் புரிந்தது. அதையே மற்ற பந்துவீச்சாளர்களும் செயல்படுத்தத் தொடங்கினர்,. பின் வந்த மார்கோ யன்சன் அதையே செயல்படுத்தினார். 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கப்பட்டன. பின் மீண்டும் விஜயகுமார்.. 5 ரன்களை மட்டுமே கொடுத்தார். தொடர்ச்சியாக 20 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது பஞ்சாப் அணி. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வைஷாக் விக்கெட் எடுக்கவில்லை சரி. ஆனால், அவர் ஏற்படுத்திய தாக்கம் பஞ்சாப்பை வெற்றியை நோக்கித் தள்ளியது.
சரி, இதற்கும் ஆர்சிபி ரசிகர்கள் டென்சன் ஆவதற்கும் என்ன காரணம் என்றால்., 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் ஆர்சிபி அணியிலிருந்து விலகிய பின், ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்த வீரர்தான் வைஷாக் விஜயகுமார். முதல் சீசனில் வைஷாக் 9 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 2024 ஆம் ஆண்டு நடந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது என்றாலும் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆர்சிபி அணிக்காக 2 சீசன்கள் ஆடிய நிலையில், நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தின்போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.1.80 கோடிக்கு வாங்கப்பட்டார்.
களத்தில் சாதித்தும் காட்டியுள்ளார். போட்டி முடிந்து பேசிய அர்ஷ்தீப் சிங்,, “வைஷாக் கடினமான களங்களில் பயிற்சி பெற்றதன் விளைவு ஆட்டத்தில் வெளிப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார். எதிரணி கேப்டன் கில் கூட, “15 ஓவர்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தபின், இம்பேக்ட் வீரராக வந்து யார்க்கர்களை வீசுவது எளிதான காரியம் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இப்போது புரிகிறதா, ஆர்சிபி ரசிகர்களின் டென்சனுக்கு காரணம் என்னவென்று. விஜயகுமார் வைஷாக்கை விடுவித்தது குறித்து ரசிகர்கள் பலரும் ஆர்சிபி அணி நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர். எக்ஸ் தளம் முழுவதும் பஞ்சாப் கிங்ஸ் பெற்ற வெற்றியைத் தாண்டி, ஆர்சிபி ரசிகர்களின் கொந்தளிப்புதான் அதிகமாகக் காணப்படுகிறது. மீண்டும் ஒரு உள்நாட்டுத் திறமையான வீரரை ஆர்சிபி கண்டுகொள்ள தவறவிட்டது எனத் தெரிவித்து வருகின்றனர்..