Akash Madhwal
Akash Madhwal  R Senthil Kumar
T20

மும்பை இந்தியன்ஸின் 'காப்பான்' ஆகாஷ் மத்வால் - யார் இவர்? பின்னணி என்ன?

Jagadeesh Rg

சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி Qualifier 2-க்கு தகுதிப்பெற்றது. மும்பை அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் மத்வால். இவர் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரமாக வந்துள்ள ஆகாஷ் மத்வால் யார், அவர் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம். இப்போது 29 வயதாகும் ஆகாஷ் மத்வால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை டென்னிஸ் பந்தில்தான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார் என்ற விஷயமே பெரும் ஆச்சரியத்தை தருகிறது. உத்தராகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஆகாஷ் மத்வால் ரிஷப் பந்தின் வீடு அருகே வசித்து வந்தார். இதனால் அவர் உதவியால் கிரிக்கெட்டுக்குள் வந்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சையது முஸ்தாக் கோப்பையில் அறிமுகமான ஆகாஷ் மத்வால் அதே ஆண்டு ரஞ்சிக்கோப்பையிலும் அதற்கு அடுத்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையிலும் அறிமுகமானார்.

Akash Madhwal

பின்பு பெங்களூர் ராயல் சாலஞ்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகவும் இருந்து வந்தார். பின்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சீசனில்தான் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார். பின்பு சிஎஸ்கே அணிமக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட், குஜராத் அணிக்கு எதிராக 3 விக்கெட், ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட் என படிப்படியாக வந்த ஆகாஷ் மத்வால் நேற்று லக்னோ அணிக்கு எதிராக 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரது உருவங்களை உயர்த்தியுள்ளது. மேலும் அணில் கும்பலேவின் சாதனையை சமன் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பின்பு பேசிய ஆகாஷ் மத்வால் "நான் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தேன். எப்போதும் அதை நிறுத்தியதில்லை. எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன். கிரிக்கெட் மீது எனக்கு எப்போதும் காதல் உண்டு. தொடக்கத்தில் இருந்தே நான் டென்னிஸ் பந்தில்தான் பந்துவீசி வந்தேன். நான் இன்னும் சிறப்பாக பந்து வீசுவேன் என நினைக்கிறேன். பும்ராவுடன் என்னை ஒப்பிடாதீர்கள். நான் இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும் . "என பேசியுள்ளார்.

Akash Madhwal

இந்த சீசனுக்கு முன்பு 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆகாஷ் மத்வால் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதேபோன்று உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை ஆகாஷ் மத்வால் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்வதற்கு முன்பு , ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் நெட் பவுலராக இருந்தவர் ஆகாஷ் மத்வால் என்பது குறிப்பிடத்தக்கது.