
பேட்டிங் - பேட்டிங் - பேட்டிங். தனக்கு எது வருமோ அதை அப்படியே தனது தாரக மந்திரம் ஆக்கி எலிமினேட்டர் போட்டியை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். இதுவரை வெற்றியே பெறாத லக்னோ அணியை சரியான நேரம் பார்த்து தட்டி தூக்கி வெளியே அனுப்பி உள்ளது மும்பை. பெரிதாக அடித்து ஆட பலரும் பயப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் பெரிய ஸ்கோரை அடித்தது மும்பை. அந்த அழுத்தத்திலேயே ஆட்டத்தை இழந்துள்ளது லக்னோ. இன்னும் சொல்லப்போனால் லக்னோவை மும்பை தோற்கடிக்கவில்லை. லக்னோவைத் தோற்கடித்தது லக்னோ தான். கடந்த நான்கு போட்டிகளில் , நான்கு முறை ஓப்பனிங் பார்டனர்களை மாற்றியுள்ளது லக்னோ. கடந்த போட்டியில் ஓப்பனர்களாக இருந்தவர்களை, இந்த போட்டியில் இம்பாக்ட் பிளேயர்களாகக்கூட களம் இறக்க லக்னோ நிர்வாகத்துக்கு மனம் வரவில்லை.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் மும்பை பக்கம் விழ எல்லாரும் எதிர்பார்த்தபடி பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை கேப்டன் ரோஹித். மும்பை விளையாடுவதால் ஒரு மாற்றத்திற்கு சேப்பாக்கம் மைதானம் இம்முறை மஞ்சளாக இல்லாமல் நீல நிறமாக காட்சியளித்தது. ரோகித் மற்றும் கிஷன் களத்திற்கு வந்தனர். கேப்டன் க்ரூணல் பாண்டியாவிடம் யாரோ இந்த பிட்ச்சில் ஸ்பின் பவுலிங் மட்டும் தான் எடுக்கும் என்று அழுத்தமாக பதித்து விட்டார்கள். விசித்திரமாக முதல் மூன்று ஓவர்களிலும் ஸ்பின் வீசியது லக்னோ. இதை பயன்படுத்திய மும்பை முதல் 3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்தது. மும்பையின் அசுரபலமே அதன் பேட்டிங் நான். அதை ஆரம்பத்திலேயே பயன்படுத்தவிட்டு அழகு பார்த்தது லக்னோ. ரோகித் இறங்கி வந்து வானுயர சிக்சர் ஒன்று அடித்ததை பார்த்து இந்தப் பிட்ச்சில் ஸ்பின்னுக்கு முதலில் பெரிதாக வேலை இல்லை என உணர்ந்தார் கேப்டன் க்ரூணல்.
வேகப்பந்துவீச்சாளர் நவீன் வீசிய இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார் ரோகித். யஷ் தாகூர் வீசிய அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் இஷன் கிஷன் அவுட் ஆனார். 5 ஓவர்கள் முடிவதற்குள்ளேயே 40 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தது மும்பை.
சென்னை மைதானத்தில் விக்கெட்டுகள் மிக மிக முக்கியம். எந்த அணியாக இருந்தாலும் இரண்டு விக்கெட் இழந்த பிறகு பொறுமையாக ஆட தான் நினைக்கும். ஆனால் மும்பை தனக்கு அதிரடி தான் வரும்...அதில் தான் நிறைய வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பதை உணர்ந்திருந்தது. அதனால் கிஷன் அவுட் ஆன அதே ஓவரிலேயே தனது டிரேட் மார்க் ஷாட் மூலம் தலைக்கு மேல் ஒரு சிக்சரை பறக்க விட்டார் சூர்யகுமார். மறுபுறம் கிரீனும் சேர்ந்து கொள்ள இருவரும் லக்னோ பந்துவீச்சை பதம் பார்க்கத் தொடங்கினர். "எனக்கு டொக்கு வைக்கலாம் வராது மச்சான்" என்று நம் சீக்கா சொல்வது போல் ஆடினார் கிரீன். கிரீனும், சூர்யாவும் மாறி மாறி பவுண்டரிகளை விளாச, ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானம் என்று கூறியவரை தேடிக் கொண்டிருந்தார் க்ரூணல். இத்தனைக்கும் அவர் வீசிய நான்கு ஓவர்களிலேயே விக்கெட் எடுக்க முடியவில்லை பாவம்.
சர்வமும் மும்பை மயம் இன்று என கொண்டிருந்தபோது 11வது ஓவரை வீசிய நவீன் இரட்டை அடி கொடுத்தார். ஒரே ஓவரில் கிரீன் மற்றும் சூர்யா என இருவரையும் அவுட் ஆக்கினார். அவுட் ஆக்கியதோடு இல்லாமல் பெங்களூரு ரசிகர்களின் அர்ச்சனைகளை கேட்க வேண்டுமென்றே இரண்டு காதுகளிலும் கை வைத்து தன்னுடைய வழக்கமான கொண்டாட்டத்தையும் காட்டினார். 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை ஆட்டத்தின் நடுவே இருந்த போது, திலக் களமிறங்கினார். தேவையான ரன்கள் வந்தாயிற்று இனிமேல் கடைசி வரை விக்கெட்டுகளை காப்பதே அவசியம் என்று உணர்ந்த திலக் பொறுமையாக ஆடினார். கூட டிம் டேவிடும் பொறுப்பாக ஆட ஸ்பின்னர்களின் ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் டெத் ஓவர்களுக்குள் நுழைந்தது மும்பை.
இடுப்பு உயரத்துக்கு நேராக வந்த பந்தை அடித்து அவுட் ஆனார் டிம் டேவிட். அதற்கு நோ பால் என நம்பி ரிவீயு கேட்க, மூன்றாவது அம்பயர் மறுத்து விட்டார். "என்ன... பழைய தாஸ மறந்துட்டியா" என்று மும்பை ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டனர். திலக்கும் அவுட் ஆக, சரியான நேரத்தில் சரியான முடிவு ஒன்றை எடுத்தார் கேப்டன் ரோஹித். சேப்பாக்கம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானம் என்றாலும் பரவாயில்லை. எனக்கு ரன்கள் தான் முக்கியம் என்று இம்பாக்ட் வீரராக குமார் கார்த்திகேயாவை இறக்குவதற்கு பதில் நெஹல் வதீராவை இறக்கினார். 12 பந்துகளில் 23 ரன்கள் அவர் எடுத்துக் கொடுக்க மும்பை 182 ரன்கள் எடுத்தது. எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. கூட்டு முயற்சியில் வந்த ஸ்கோர் இது. நவீன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்த ஸ்கோரை எப்படி அடிக்கப் போகிறோம் என்று லக்னோ ஒரு பக்கம் கலங்க, நோ பால் தராததற்கு எதுவும் பிரச்சனை வருமா என்று அம்பயர் மறுபுறம் பயப்பட, ஜோர்டனை வைத்துக்கொண்டு பந்து வீச வரும் மும்பையைக் கண்டே ரசிகர்கள் ஒருபுறம் பயப்பட என்று ஆரம்பித்தது இரண்டாம் இன்னிங்ஸ். டீகாக்குக்கு பதில் மேயர்ஸ் வந்திருந்தார் ஆட்டத்தில். மாத்வால் வீசிய இரண்டாவது ஓவரிலேயே மான்கட் எனும் ஓப்பனர் அவுட் ஆனார். மூன்று பவுண்டரிகள் அடித்து பயம் காட்டிய மேயர்ஸ் ஜோர்டன் பந்தில் அவுட் ஆனார். ஜோர்டனின் பவரா அல்ல மேயர்சின் தவறா என்று ரசிகர்கள் யோசிக்கும் முன்பே ஷோக்கின் வீசிய ஆறாவது ஓவரை 18 ரன்களுக்கு பறக்க விட்டார் ஸ்டோனிஸ்.
ஸ்டோனிஸ் மற்றும் பாண்டியா சிறப்பாக ஆடினர். இவர்களே கடைசி வரை நிற்பார்கள் போல என்று நினைத்த போது, தேவையற்ற ஷாட் ஒன்று அடித்து அவுட் ஆனார் க்ரூணல். அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக்கட்டில் இருந்து ஒரே ஒரு சீட்டை உருவினால் என்ன நடக்கும் என்பதை இதன் பிறகு லக்னோ அணி காட்டியது. பத்தாவது ஓவரை வீச வந்தார் மாத்வால். முதல் பந்தே lbw அவுட் அம்பயரால் தடை பட்டது. ஆனால் நான்காவது பதிலையே பதோனியை போல்டாக்கினார் மாத்வால். அடுத்து வந்த பூரன் ஏற்கெனவே வாங்கிய காசுக்கு மூன்று மேட்ச் அடித்து விட்டதால் இந்த முறை டக் அவுட் ஆகி வெளியேறினார். இருந்தாலும் ஸ்டோனிஸ் களத்தில் இருந்தது மும்பை ரசிகர்களுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.
அப்போதுதான் அந்த சுவையான சம்பவம் அரங்கேறியது. ஹூடா மற்றும் க்ரூணல் இருவருக்கும் பிரச்னை என்பது பலருக்கும் தெரியும். க்ரூணல் கேப்டனாகிவிட்டார் ஆனால் ஹூடாவோ ரன்கள் எடுக்க முடியாமல் ட்ரோல் மெட்டீரியல் ஆகி விட்டார். க்ரூணலை வேறு வழியில் பழி வாங்க ஹூடா முடிவெடுத்தார். தமிழ் படங்களில் ஹீரோயின் introduction காட்சியில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டே வரும் ஹீரோ ஹீரோயின் மேல் மோதி சுற்றி விடுவது போல ஒரு மோது மோத, நிலைகுலைந்த ஸ்டோனிஸ் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட்டை பார்த்துக் கொண்டே களத்திற்கு வந்த கௌதமும் ரன் அவுட் ஆகி வெளியேறினார். எல்லாரையும் வெற்றிகரமாக வெளியேற்றி வைத்த திருப்தியுடன் ஹூடாவும் ரன் அவுட் ஆனார். இந்த முறை ஹூடாவை ரன் அவுட்டாக்கியது நவீன். 'அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்டா' என்பதாக இரண்டு ரன் அவுட்கள் செய்த ஹூடாவையே ரன் அவுட் செய்தார் ' மாம்பழ புகழ்' நவீன். ' இந்த டீம் என்னடா இவங்களுக்குள்ளயே அடிச்சுக்குது' என ரோஹித் கேசுவல் மோடுக்கு போயிருப்பார். அதிலும் ஜோர்டன் வீசிய 16வது ஓவரில் ஒரு ரன் கூட இல்லை. நவீனும் , மொஹ்சின் கானும் அப்படியே இருபது ஓவர் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டால் டிரா கொடுத்துவிடுவார்கள் என்கிற ரீதியில் உருட்டிக் கொண்டிருந்தார்கள். 'இது சரிப்பட்டு வராது' என பந்தை வாங்கிய ஆகாஷ் மாத்வால் ஒரு யார்க்கரை வீச போல்டானார் மொஹ்சின் கான். மாத்வால் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதும் வென்றார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக எலிமினேட்டரில் எலிமினேட் ஆகிறது லக்னோ. ஆனாலும், இந்த முறை பிளே ஆஃப் போட்டி என்ற மனநிலையில்கூட லக்னோ ஆடவில்லை. தான் தவறாக ஆடிய ஷாட் தான் தோல்விக்குக் காரணம் என முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பேசினார் க்ரூணல் பாண்டியா. 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாம் குவாலிபையர் ஆட குஜராத் செல்கிறது மும்பை. "மும்பை ஸ்டார் ப்ளேயர்களை மட்டுமே நம்பும்" என்று பாண்டியா கூறியதற்கு ரோகித் பழி வாங்குவாரா இல்லை தனது அண்ணனை அடித்ததற்கு தம்பி கணக்கு தீர்ப்பாரா என்பதை வெள்ளிக்கிழமை பார்க்கலாம்.