சேவாக்
சேவாக் கோப்புப் படம்
T20

‘18 கோடி ரூபாயை வைத்து அனுபவத்தை வாங்க முடியாது’ - சாம் கரனை விளாசிய சேவாக்; பின்னணி காரணம் இதுதான்!

சங்கீதா

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் கொச்சியில் நடந்தபோது, இங்கிலாந்து ஆல் ரவுண்டரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி கடும் போட்டிகளுக்கிடையே வாங்கியது. ஏனெனில், ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ஆல் ரவுண்டர் சாம் கரன்.

இதனால், அவருக்கான டிமாண்ட் அதிகரித்தநிலையில், அவரது அடிப்படை விலையே ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது. 24 வயதான சாம் கரணை எடுக்க மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகள் மோதின. சென்னை அணி 15.25 கோடி ரூபாய் வரை அவரை எடுக்க ஏலம் கேட்டது. எனினும், இதுவரை கோப்பை வெல்லாத பஞ்சாப் அணி, அவரை ரூ. 18.50 கோடிக்கு வாங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்டவர் என்ற பெருமையை சாம் கரன் பெற்றார்.

நடப்புத் தொடரில் இதுவரையில் 6 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக நேற்றையப் போட்டியில் களம் கண்ட பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ப்ராப்சிம்ரன் சிங்கை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சாம் கரன்

நேற்று கேப்டன் பொறுப்பை ஏற்ற சாம் கரனும், பொறுப்பாக நின்று அடிக்காமல் 10-வது ஓவரில் ரன் அவுட்டானார். 10 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்த நிலையில், மெதுவாக ஓடி அவர் ரன் அவுட் ஆனது ஆட்டத்தின் தோல்விக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் பேசியுள்ள சேவாக், “அவர் ஒரு சர்வதேச வீரர். ஆனால், அதற்காக 18 கோடி ரூபாய் ஏலத் தொகை கொடுத்து உங்களால் அனுபவத்தை விலைக்கு வாங்கிவிட முடியாது. கடும் வெயிலுக்கு மத்தியில், நீங்கள் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் விளையாடி தலைமுடி நரைக்கும்போது மட்டுமே அந்த அனுபவத்தை பெறமுடியும்.

18 கோடி ரூபாயை கொடுத்து வாங்கி விட்டோம் என்பதற்காக, நமக்கு அவர் போட்டிகளை வென்று கொடுப்பார் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அவருக்கு அந்த அளவுக்கு போதிய அனுபவம் இன்னும் வரவில்லை. மோசமான ஓட்டம் அது. அந்த பந்தில் ரன் எடுக்க ஓடியது தேவையில்லாதது. நீங்கள் கேப்டனாக இருக்கும்போது களத்தில் நின்று விளையாடி, கடைசி ஓவர் வரை விளையாட்டை எடுத்துச் சென்று இருக்க வேண்டும். ஆனால், விரைவில் ரன் அவுட் ஆனது அவருக்கு போதிய அனுபவம் இல்லாததையே மீண்டும் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.