மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அணி, பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. எனினும் பும்ரா ஓரங்கட்டப்பட்டு, ஷுப்மன் கில்லுக்கு கேப்டன் ஷிப் அளித்த விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதுதொடர்பாக பலரும் இன்னும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ”கடந்த இரண்டு வருடங்களாக பும்ராவின் காயம் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. ஒரு கேப்டனாக நியமிக்கப்படும்போது அந்த விஷயங்கள் புறம்தள்ளி வைக்க வேண்டியவை. ஒரு கேப்டனாக, நீங்கள் ஆட்டங்களை தவற விடக்கூடாது. எனவே பும்ரா விஷயத்தில் இந்திய அணி செய்தது சரியான விஷயம் என்றுதான் நினைக்கிறேன். அதேநேரத்தில், சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமித்தது சரியான நகர்வு என நினைக்கிறேன். ஐபிஎல் தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதை பார்க்க வேண்டும். அவருடைய தலைமைத்துவம் சிறப்பானதாக உள்ளது. பேட்டராகவும், கேப்டனாகவும் இருந்தால் தலைமைத்துவம் நன்றாக இருக்கும் என்பது என்னை பொறுத்தவரையில் முக்கியமான விசயம்” எனத் தெரிவித்துள்ளார்.