பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 ரசிகர்கள் உயிரிழந்தது நாடு முழுவதும் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவிர, கர்நாடக உயர்நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று விசாரித்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தடை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 11 பேர் உயிரிழப்பு தொடர்பாக, ஆர்சிபி அணி முழு தவறிழைத்திருந்தால், பிசிசிஐ பெரிய நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. BCCI ஏற்கெனவே இந்த வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து விலகி, அதை ஒரு உரிமையாளர் திட்டம் என்று முத்திரை குத்தியுள்ளது. BCCI செயலாளர் தேவஜித் சைகியாவும் இதை 'ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்' என்று தெரிவித்துள்ளார்.
ஆகையால், இந்த விஷயத்தில் பெங்களூரு அணி மீது தவறு இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதற்கு அடுத்த ஆண்டு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக ஐபிஎல் அணிகள் வணிக நிறுவனங்களாக இயங்கினாலும், அவற்றின் பங்கேற்பு பிசிசிஐ ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் அந்த ஒப்பந்தங்களில் நடத்தை மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளும் அடங்கும். அதன்படி, விசாரணையில் ஆர்சிபி நிர்வாகம் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டால், நீதியை நிலைநிறுத்தும் பொருட்டும், லீக்கின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது பொருட்டும் பிசிசிஐ செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஐபிஎல் வரலாற்றில், ஓர் அணியை தடை செய்வது புதிதல்ல. 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு சீசன்களுக்கு தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.