RCB pt desk
T20

பேட்டிங் பந்து வீச்சு இரண்டிலும் சொதப்பல்... ஹாட்ரிக் வெற்றியை கோட்டைவிட்ட RCB...

ஹாட்ரிக் வெற்றி நிச்சயம் என்ற உற்சாகத்தில் சின்னசாமி மைதானத்திற்கு வந்த ஆர்சிபி ரசிகர்களின் நெஞ்சில் இடியை இறக்கியது.

Rajakannan K

வெற்றியுடன் தொடரை தொடங்கிய RCB அணி

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு ஆர்சிபி அணி கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை முதல் போட்டியிலேயே ஆர்சிபி துவம்சம் செய்தது. கொல்கத்தாவை துவம்சம் செய்த கையோடு சென்னை வந்த அந்த அணி சொந்த மண்ணிலேயே சிஎஸ்கேவை சம்பவம் செய்தது. கதற கதற சென்னையை வெளுத்து வாங்கிய கையோடு குஜராத் அணியை எதிர்கொள்ள பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் காத்திருந்தது ஆர்சிபி அணி.

ஹாட்ரிக் வெற்றியை கோட்டைவிட்ட RCB - ரசிகர்கள் ஏமாற்றம்:

ஹாட்ரிக் வெற்றி நிச்சயம் என்ற உற்சாகத்தில் சின்னசாமி மைதானத்திற்கு வந்த ஆர்சிபி ரசிகர்களின் நெஞ்சில் இடியை இறக்கியது. சுப்மன் கில்லின் படை. ஆம், கொல்கத்தா, சென்னை அணிகளை சம்பவம் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அவர்களின் மண்ணிலேயே வைத்து தரமான சம்பவம் செய்தது குஜராத் டைட்டன்ஸ். கொஞ்சம் கூட போராட்டமே இல்லாமல் 170 ரன்கள் என்ற இலக்கை 17.5 ஓவர்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அசத்தல் வெற்றியை பெற்றது குஜராத் அணி.

பெங்களூரு தோற்பதற்கும், குஜராத் வெற்றி பெறுவதற்கும் என்ன காரணங்கள் என்பதை இனி பார்க்கலாம்.

பெங்களூர் அணிக்கு இந்தப் போட்டியில் மிகப்பெரிய சிக்கலாக அமைந்ததே அவர்களின் பேட்டிங் தான். கோலி 7, பிலிப் சால்ட் 14, படிக்கல் 4 ரன்கள் என டாப் ஆர்டர் வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக்கட்ட கேப்டன் ரஜத் பட்டிதாரும் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஒரு கட்டத்தில் 150 ரன்களே வருமா என்ற நிலை ஏற்பட்ட நிலையில், லிவிங்ஸ்டன் 54, ஜிதேஷ் சர்மா 33, டிம் டேவிட் 32 ரன்கள் எடுத்ததால் 169 ரன்கள் என்ற கவுரவமான ரன்களை எடுத்தது ஆர்சிபி.

பேட்டிங் பந்து வீச்சு இரண்டிலும் சொதப்பிய RCB வீரர்கள்:

பேட்டிங்கில் தான் சொதப்பினார்கள் என்றால் பந்துவீச்சிலும் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார்கள் ஆர்சிபி வீரர்கள். சுப்மன் கில் மட்டுமே 14 ரன்களில் சீக்கிரமாக ஆட்டமிழந்தார். மற்றபடி ஆர்சிபி பவுலர்களால் எந்த நெருக்கடியையும் குஜராத் அணிக்கு கொடுக்க முடியவில்லை. பந்துவீச்சிலும் ஆர்சிபி வீரர்கள் நிறையை மிஸ் பீல்டிங் செய்தார்கள். விராட் கோலி மிஸ் பீல்ட் செய்தார் என்றால் நம்பவா முடிகிறது. ஆனால் களத்தில் நடந்தது.

சிராஜ், ஜாஸ் பட்லர் அபாரம்:

குஜராத் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் சிராஜ் செம்ம மேஜிக் செய்தார். சால்ட் மற்றும் படிக்கல் விக்கெட்டுகளை க்ளீன் போல்டு மூலம் தூக்கிய அவர் லிவிங்ஸ்டன் விக்கெட்டையும் முக்கியமான நேரத்தில் எடுத்தார். அவரோடு சேர்த்து சாய் கிஷோர் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினார்.

பேட்டிங்கில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசியிருந்த சாய் சுதர்சன் இந்தப் போட்டில் ஒரு ரன்னில் அரைசதத்தை கோட்டைவிட்டு 49 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜாஸ் பட்லர் 39 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இறுதிவரை இருந்து முடித்து வைத்தார். ருதெர்போர்டும் 18 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்று குஜராத் அணி 4வது இடத்திலும், ஆர்சிபி அணியும் மூன்றில் இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்திலும் தற்போது இருக்கிறார்கள். இனி வரும் போட்டியில் எப்படி களம் மாறப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.