நாமக்கல் | தீ மிதி திருவிழா - 6 மாத குழந்தையுடன் அக்னி குண்டத்தின் அருகே விழுந்த நபரால் பரபரப்பு
செய்தியாளர்: மனோஜ் கண்ணா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழா நடைபெற்ற நிலையில், இதன் ஒரு பகுதியாக இன்று கோயில் வளாகப் பகுதியில் குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவர் சிறுமியர் இளம் பெண்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் தீ மிதி திருவிழாவில் பங்கேற்று தீயை மிதித்தனர்.
இந்நிலையில் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்ற பக்தர் தனது ஆறுமாத பெண் குழந்தையுடன் தீ மிதிப்பதற்காக வந்தார். அப்போது அக்னி குண்டத்தில் நடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அக்னி குண்டத்தின் மிக அருகிலேயே தன் குழந்தையுடன் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பயத்தில் கூச்சலிட்டனர்.
இதனையடுத்து அங்கிருந்த கோயில் ஊழியர்கள் உடனடியாக குழந்தையையும், பக்தர் குமாரையும் பத்திரமாக அங்கிருந்து மீட்டனர். மேலும் அக்னி குண்டத்தின் வெளியே விழுந்ததால் இருவரும் விழுந்ததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது . இதன் காரணமாக கோயில் வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.