2025 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரைவல்ரி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்தின.
2024 ஐபிஎல்லில் மே 18-ம் தேதி நடந்த லீக் போட்டிக்கு பிறகு ஆர்சிபி அணியின் தோல்விக்காகவே ஒட்டுமொத்த மஞ்சள் படை ரசிகர்களும் காத்திருந்தனர், அதேபோல 17 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் ஆர்சிபி ரசிகர்களும் காத்திருந்தனர்.
இரண்டு அணி ரசிகர்களின் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பில் தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது ஆர்சிபி அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி வென்று 17 வருடங்கள் ஆகிறது. 9 முறை இவ்விரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியிருக்கும் நிலையில், ஆர்சிபி அணி கடைசியாக 2008 ஐபிஎல்லில் நடந்த போட்டியில் மட்டுமே சிஎஸ்கே அணியை வீழ்த்தியுள்ளது.
அதற்குபிறகு ஒருமுறை கூட சேப்பாக்கத்தில் வைத்து ஆர்சிபி அணியால் சிஎஸ்கேவை வீழ்த்தவே முடியவில்லை. சிஎஸ்கே அணியின் கோட்டையாக சேப்பாக்கம் விளங்கிவரும் நிலையில், சென்னையை வீழ்த்தி வரலாறு படைக்க வேண்டுமென்ற முயற்சியில் களம்கண்டது ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ரஜத் பட்டிதார் 51 ரன்களும், பிலிப் சால்ட் 32 ரன்களும் அடிக்க, கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட டிம் டேவிட் நல்ல டோட்டலை குவிக்க உதவினர்.
197 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு 2வது ஓவரிலேயே திரிப்பாத்தி, ருதுராஜ் இருவரையும் வெளியேற்றிய ஹசல்வுட் பேரடியை கொடுத்தார். கேப்டன் ருதுராஜ் 0 ரன்னில் நடையை கட்ட, அடுத்துவந்த தீபக் ஹுடா 4 ரன், சாம் கரன் 8 ரன்னும் அடித்து வெளியேற சீட்டு கட்டு போல விக்கெட்டுகள் சரிந்தது.
ஒரே நம்பிக்கையாக ரச்சின் மற்றும் ஷிவம் துபே இருந்த நிலையில், ஒரே ஓவரில் அவர்கள் இருவரையும் வெளியேற்றிய யஷ் தயாள் சிஎஸ்கே அணியின் தோல்வியை உறுதிசெய்தார்.
கடைசியாக களத்திற்கு வந்த மகேந்திர சிங் தோனி 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே அடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி.
17 வருடங்களாக தோல்வியை மட்டுமே சந்தித்துவந்த ஆர்சிபி அணி சென்னை சேப்பாக்கத்தில் தங்களுடைய வெற்றிக்கொடியை பறக்கவிட்டுள்ளது.