ரஜத் பட்டிதார் x
T20

RCB அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு.. ”நீங்கள் தகுதியானவர்” - விராட் கோலி வெளியிட்ட வாழ்த்து செய்தி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 21-ம் தேதி முதல் தொடங்கி மே 25-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பரபரப்பாக நடந்துமுடிந்தது. அதில் பல்வேறு அணிகளில் கேப்டனாக இருந்த வீரர்கள் கூட விடுவிக்கப்பட்டு, புதிய வீரர்கள் அணிக்குள் எடுக்கப்பட்டனர்.

அந்தவகையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த ஃபேஃப் டூபிளெசிஸ், அதிரடி வீரர்கள் க்ளென் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ், முகமது சிராஜ் முதலிய ஸ்டார்கள் வீரர்கள் ஆர்சிபி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

Faf du Plessis - Virat Kohli

முன்னாள் கேப்டன் டூபிளெசிஸை அணியிலிருந்து நீக்கிய பின்னர் யார் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக இருக்கப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஒருவேளை விராட் கோலி தான் மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்ப போகிறார் என்ற பேச்சு நீடித்த நிலையில், தற்போது புதிய கேப்டனாக ரஜத் பட்டிதாரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜத் பட்டிதாருக்கு விராட் கோலி வாழ்த்து!

ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதாரை அறிவிப்பதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ரஜத் பட்டிதார் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் விராட் கோலி, “அணிக்குள் ஒரு இளம்வீரராக வந்து உங்கள் திறைமையால் நிலையான இடத்தை பிடித்தீர்கள். கேப்டன் பொறுப்பிற்கு நீங்கள் தகுதியானவர், நானும், அணியின் மற்ற உறுப்பினர்களும் எப்போதும் உங்களுக்கு பின்னால் இருப்போம்” என்று வாழ்த்தியுள்ளார்.

கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் ரஜத் பட்டிதார், “என்னுடைய கேப்டன்சி வித்தியாசமானதாக இருக்கும், நான் மிகவும் அமைதியாகவும், அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை, எது தேவையற்றது என்பதை தேர்ந்தெடுப்பதில் எப்போதும் கவனம் செலுத்துவேன். அழுத்தமான நேரத்தில் பயப்படாமல் முடிவுகளை எடுப்பேன், இதுதான் என்னுடைய கேப்டன்சியின் பலமாக பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு முன்னாள் கேப்டன் ஃபேஃப் டூ பிளெசிஸ், பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் முதலியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2024 சையத் முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப் போட்டிக்கு மத்தியப் பிரதேசத்தை வழிநடத்திய படிதார், RCB ஐ வழிநடத்தும் எட்டாவது வீரர் ஆவார்.