LSG vs RR
LSG vs RR X
T20

துருப்புசீட்டாக மாறிய '2 Bouncer Rule'.. பூரனை நிற்கவைத்து கெத்துகாட்டிய சந்தீப்! RR அசத்தல் வெற்றி!

Rishan Vengai

டி20 ரசிகர்களை சீட் நுனியில் அமரவைத்து வேடிக்கை காட்டுவதிலும், விரல் நகங்களை கடிக்கவைக்கும் சுவாரசியத்தை கூட்டுவதிலும் ஐபிஎல் தொடரை அடித்துக்கொள்ள வேறு எந்த டி20 தொடர்களும் இல்லை. அதனால் தான் ஐபிஎல் தொடரானது உலகளவில் நம்பர் 1 டி20 லீக்காக இன்றளவும் இருந்துவருகிறது. அதற்கு மிகப்பெரிய காரணமாக ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் புதுப்புது அப்டேட்களும், புதிய விதிமுறை மாற்றங்களும் பெரிய கரணமாக இருந்துவருகின்றன.

Impact Player Rule

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் அறிமுகமான ”இம்பேக்ட் வீரர்” விதிமுறை பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், வெற்றிதோல்விகளில் பெரிய பங்காற்றி அதிகளவில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் கொண்டுவரப்பட்ட கவனிக்கப்பட கூடிய மாற்றமாக ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதிக்கும் “2 பவுன்சர்கள் ரூல்” பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. 2024 ஐபிஎல் தொடங்கி 4 போட்டிகளை மட்டுமே கடந்திருக்கும் நிலையில், இந்த பவுன்சர் விதிமுறையை வேகப்பந்துவீச்சாளர்கள் பெரிய துருப்புச்சீட்டாக பயன்படுத்திவருகின்றனர்.

Bouncer Rule

அந்தவகையில் இன்றைய போட்டியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் ”2 பவுன்சர் விதிமுறை” ஹிட்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பெரிய ஸ்பீட்-பிரேக்கராக மாறி முடிவை தலைகீழாக மாற்றியது.

82 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன்!

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. பலமான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய ஜோஸ் பட்லர் நல்ல தொடக்கத்தை கொடுக்க, சிறந்த ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி மிரட்டிவிட்டார். ஆனால் அதிகநேரம் இவர்களை நிலைக்கவிடாத லக்னோ பவுலர்கள் பட்லரை 11 ரன்னிலும், ஜெய்ஸ்வாலை 24 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டனர்.

sanju samson

தொடக்க வீரர்கள் வெளியேறினாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 சிக்சர்கள் 1 பவுண்டரி என கிரவுண்டின் நாலாபுறமும் சிதறடித்த ரியான் பராக், 43 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால் பராக் மூட்டிய தீயில் பெட்ரோலை ஊற்றிய சஞ்சு சாம்சன், அடுத்தடுத்து 6 சிக்சர்களை பறக்கவிட்டு கெத்துக்காட்டினார். 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உட்பட 82 ரன்களை சஞ்சு சாம்சன் குவிக்க, 20 ஓவர் முடிவில் 193 ரன்களை எட்டியது RR அணி.

சிக்சர்களால் டீல் செய்த நிக்கோலஸ் பூரன்!

194 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு எதிராக தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரெண்ட் போல்ட், புதிய பந்தில் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தினார். 11 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து லக்னோ தடுமாற, அணியை சரிவிலிருந்து மீட்டுவர கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா இருவரும் போராடினர். இறங்கியதிலிருந்தே 2பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய தீபக் ஹூடா ரன்களை எடுத்துவர, சரியான நேரத்தில் பந்துவீச வந்த யஸ்வேந்திர சாஹல் 26 ரன்னில் ஹூடாவை வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

kl rahul

இக்கட்டான நிலையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பினார். ஒருபுறம் கேஎல் ராகுல் நிலைத்துநிற்க, பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திரும்பிய பக்கமெல்லாம் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்ட பூரன் மிரட்டிவிட்டார். மறுபுறம் கேஎல் ராகுலும் அதிரடிக்கு திரும்ப, அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்த இந்த ஜோடி 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றது. ஆனால் 58 ரன்களுக்கு கேஎல் ராகுலை வெளியேற்றிய சந்தீப் சர்மா லக்னோ அணியின் ரன்வேகத்தை தடுத்துநிறுத்தினார்.

pooran

உடன் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸை 3 ரன்னில் வெளியேற்றி பெவிலியன் அனுப்பிவைத்த ரவிச்சந்திரன் அஸ்வின், 18வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பிவிட்டார்.

துருப்புச்சீட்டாக மாறிய "2 Bouncer Rule"!

கடைசி 12 பந்துகளுக்கு 38 ரன்கள் தேவை என போட்டி மாற, பரபரப்பான சூழலில் நிக்கோலஸ் பூரனுக்கு எதிராக பந்துவீசிய சந்தீப் சர்மா “2 பவுன்சர்கள் விதிமுறை” என்ற துருப்புச்சீட்டை கச்சிதமாக பயன்படுத்தினார். எப்படியும் இரண்டு மூன்று சிக்சர்கள் வரப்போகிறது என்ற நிலைமையில், பவுன்சர்களை சிறப்பாக பயன்படுத்திய சந்தீப் சர்மா 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து RR அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். கடைசி ஓவருக்கு 27 ரன்கள் தேவையிருக்க அற்புதமான யார்க்கர்களை வீசிய ஆவேஷ் கான், தன்னுடைய பழைய அணிக்கு எதிராக சம்பவம் செய்து கலக்கிப்போட்டார். முடிவில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி.

sandeep sharma

ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் வீச அனுமதிக்கும் புதிய விதிமுறை, பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச்சாளர்களுக்கு சமபலத்தை வழங்கியதை போல மாறியுள்ளது. போகப்போக இந்த விதிமுறை பேட்ஸ்மேன்களுக்கு நைட்மேராக மாறப்போகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய முதல்வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது.