Rohit SHarma | Hardik Pandiya  Mumbai Indians
T20

இந்திய பேட்ஸ்மேன்கள், வெளிநாட்டு பௌலர்கள்... மும்பை இந்தியன்ஸின் புதிய லெவன் எப்படி இருக்கும்?

மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை முதல் சாய்ஸ் பிளேயிங் லெவன் பலமாக இருக்கிறது. ஆனால், அதற்கான பேக் அப் ஆப்ஷன்கள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.

Viyan

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கப்போகிறது. அதற்கு முன்பான மெகா ஏலம் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் நடந்தது. 10 புதிய அணிகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. எல்லோரும் ஒவ்வொரு அணியின் பிளேயிங் லெவனும் எப்படி இருக்கும் என்று விவாதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் நாமும் இணைவோமே... இந்தக் கட்டுரையில் மும்பை இந்தியன்ஸின் சிறந்த பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று அலசுவோம்.

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்

வில் ஜேக்ஸ் (5.25 கோடி), நமன் திர் (5.25 கோடி - RTM), ராபின் மின்ஸ் (65 லட்சம்), மிட்செல் சான்ட்னர் (2 கோடி), டிரெண்ட் போல்ட் (12.5 கோடி), தீபக் சஹார் (9.25 கோடி), அல்லா கசன்ஃபார் (4.8 கோடி), ரயான் ரிக்கில்டன் (1 கோடி), கேஎல் ஶ்ரீஜித் (30 லட்சம்), ராஜ் அங்கத் பவா (30 லட்சம்), லிசாட் வில்லியம்ஸ் (75 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (30 லட்சம்), விக்னேஷ் புத்தூர் (30 லட்சம்), கரன் ஷர்மா (50 லட்சம்), அஷ்வனி குமார் (30 லட்சம்), ரீஸ் டாப்லி (75 லட்சம்), பி சத்யநாராயணா (30 லட்சம்), பெவன் ஜேக்கப்ஸ் (30 லட்சம்).

ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:

ஜஸ்ப்ரித் பும்ரா (18 கோடி), சூர்யகுமார் யாதவ் (16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (16.35 கோடி), ரோஹித் ஷர்மா (16.3 கோடி), திலக் வர்மா (8 கோடி)

கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பௌலிங் தான் சிக்கலாக இருந்தது. இந்த முறை அதை அவர்கள் சிறப்பாக சரிசெய்திருக்கிறார்கள். தீபக் சஹார், டிரென்ட் போல்ட் ஆகியோரை வாங்கி வேகப்பந்துவீச்சை பலப்படுத்தியிருக்கிறார்கள். மிட்செல் சாண்ட்னர், அல்லா கசன்ஃபார் போன்ற வெளிநாட்டு ஸ்பின்னர்களை வாங்கி அந்த ஏரியாவையும் சரி செய்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே பலமாக இருந்த பேட்டிங் யூனிட்டை, வில் ஜேக்ஸ் வருகையின் மூலம் இன்னும் பலப்படுத்தியிருக்கிறார்கள். நியூசிலாந்து கிரிக்கெட்டின் இளம் சென்ஷேனாகக் கருதப்படும் பெவன் ஜேக்கப்ஸை அடிப்படை விலையான 75 லட்சத்துக்கு வாங்கியிருக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் சிறந்த பிளேயிங் லெவன்

1) ரோஹித் ஷர்மா
2) வில் ஜேக்ஸ்
3) திலக் வர்மா
4) சூர்யகுமார் யாதவ்
5) ஹர்திக் பாண்டியா (கேப்டன்)
6) ராபின் மின்ஸ் (விக்கெட் கீப்பர்)
7) மிட்செல் சேண்ட்னர்
8) தீபக் சஹார்
9) டிரெண்ட் போல்ட்
10) ஜஸ்ப்ரித் பும்ரா
11) அல்லா கசன்ஃபார்

இம்பேக்ட் வீரர்: நமன் திர்

இந்த அணியில் என்ன ஒரே பிரச்சனை என்றால், பிளேயிங் லெவனில் சரியான விக்கெட் கீப்பரை களமிறக்க முடியாதது. வில் ஜேக்ஸை ஓப்பனராக இறக்கவேண்டுமென்றால், ரிக்கில்டனை பயன்படுத்த முடியாது. ரிக்கில்டனை பயன்படுத்தினால், எல்லோரையும் கீழே இறக்கவேண்டும். ஜேக்ஸ் மூன்றாவது இடத்தில் ஆடுவதும், திலக் வர்மா நான்காவது இடத்தில் ஆடுவதும் பிரச்சனை இல்லை. ஆனால், சூர்யா ஐந்தில் ஆடுவது சரியாகாது. போக, வெளிநாட்டு ஸ்பின்னர் ஒருவரை ஆடவைக்காமல் கரன் ஷர்மாவை ஆடவைக்கவேண்டும். டி20 அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கசன்ஃபரையோ, ஆல்ரவுண்டராக பங்களிக்ககூடிய சாண்ட்னரையோ அவர்கள் நிச்சயம் களமிறக்கவே விரும்புவார்கள். பலமான டாப் 6 இருப்பதால், கீழே சாண்ட்னர், தீபக் சஹார் ஓரளவு பேட்டிங்கில் பங்களிக்ககூடியவர்கள் என்பதால், அவர்கள் ராபின் மின்ஸை வெறும் கீப்பராக மட்டும் பயன்படுத்தலாம்.

அதே போல் தீபக் சஹாரோ, ஜஸ்ப்ரித் பும்ராவோ காயமடைந்துவிட்டால் அவர்களுக்கு சரியான மாற்று வீரர் இல்லை. பேக் அப் வீரர்கள் அனைவரும் பெரும்பாலும் அடிப்படை விலையில் எடுக்கப்பட்ட இளம் வீரர்கள் தான். அப்படியேனும் அவர்கள் இருவருள் ஒருவர் காயம் அடைந்தால் அவர்கள் பல காம்பினேஷன்களை மாற்றவேண்டும். ஒரு வெளிநாட்டு ஸ்பின்னருக்குப் பதில் கரன் ஷர்மாவைக் களமிறக்கிவிட்டு, காயமடைந்தவர் இடத்தில் லிசாட் வில்லியம்ஸை இறக்கவேண்டும்.

மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை முதல் சாய்ஸ் பிளேயிங் லெவன் பலமாக இருக்கிறது. ஆனால், அதற்கான பேக் அப் ஆப்ஷன்கள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.