Mohammed Siraj
Mohammed Siraj  Atul Yadav
T20

PBKSvRCB | கடைசி வரைக்கும் டென்சன்லயே வச்சிருக்கீங்க பெங்களூரு பாய்ஸ்..!

ப.சூரியராஜ்

ராயல் சேலஞ்சர்ஸின் கேப்டன் டூப்ளெஸ்ஸி காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், நேற்று மதியம் மொகாலியில் நடைபெற்ற மேட்சில் கேப்டனாக செயல்பட்டார் விராட் கோலி. `வரணும் பழைய பன்னீர் செல்வமா திரும்பி வரணும்' என கத்திக்கொண்டிருந்தார்கள் ஆர்.சி.பி ரசிகர்கள். `சரி, பழைய பன்னீர் செல்வம் அப்படி என்னதான் பண்ணியிருக்கார்' எனக் கேட்டால், `ஒன்னும் பண்ணல' என்றார்கள். டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் தற்காலிக கேப்டன் சாம் கரண், பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

Virat Kohli

கோலியும் டூப்ளெஸ்ஸியும் பெங்களூரின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் சிறுவன் சிங் அர்ஷ்தீப். வெறும் 5 ரன்கள் மட்டுமே சிறுவனிடமிருந்து பிடுங்கி தின்ன முடிந்தது. விடலை சிங் ப்ரார், 2வது ஓவரை வீசினார். ஓவரின் 4வது பந்தில், ஒரு பவுண்டரியைத் தட்டினார் கோலி. அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில், ஷார்ட் ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி, பேக்வார்டு பாயின்ட்டில் ஒரு பவுண்டரி என இரண்டு பவுண்டரிகளைத் தட்டினார் பன்னீர் செல்வம். இன்னொரு பக்கம் விடலை சிங்கை விட்டு விளாசினார் டூப்ளெஸ்ஸி. ஓவரின் 3வது பந்து பவுலரின் தலைக்கு மேல் சிக்ஸருக்குப் பறந்தது. 5வது பந்து, லாங் ஆனில் இன்னொரு சிக்ஸருக்கு பறந்தது. 5வது ஓவரை வீசவந்தார் எல்லீஸ். ஓவரின் 3வது பந்து, கோலி ஒரு பவுண்டரி அடித்தார். கடைசிப் பந்தில் டூப்ளெஸ்ஸி ஒரு பவுண்டரி அடித்தார். கேப்டன் சாம் வீசிய 6வது ஓவரில், டூப்ளெஸ்ஸி இன்னொரு பவுண்டரியைத் தட்டினார். பவர்ப்ளே முடிவில் 59/0 என அழகாக ஆடிக்கொண்டிருந்தது ஆர்.சி.பி.

பாம்பு சாஹரின் 7வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மீண்டும் வந்த எல்லீஸை, ஒரு சிக்ஸர் அடித்து துரத்திவிட்டார் டூப்ளெஸ்ஸி. தனது முந்தைய ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்திய கட்டுவிரியன் சாஹர், 9வது ஓவரில் ஒரு பவுண்டரி கொடுத்தார். இங்கிலாந்தின் வாழும்கால் லிவிங்ஸ்டோனை களமிறக்கினார் கரண். முதல் பந்தே பவுண்டரி அடித்த டூப்ளெஸ்ஸி, சாஹர் வீசிய 11வது ஓவரிலும் ஒரு பவுண்டரியை விளசினார். 31 பந்துகளில் தனது அரைசதத்தையும் கடந்தார் ஃபாஃப். 11 ஓவர் முடிவில் 98/0 என நன்றாகவே ஆடியது ஆர்.சி.பி. நங்கூரம் போடும் பணியை நச்சென செய்துவிட்டதால் இனி அடித்து ஆட வேண்டிய நிலைக்கு வந்தார் கோலி. சாம் கரண் வீசிய 12வது ஓவரில், வெறும் 5 ரன்கள் மட்டுமே. பாம்பின் 13வது ஓவரிலும் 5 ரன்கள் மட்டுமே. அர்ஷ்தீப் வீசிய 14வது ஓவரின், கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரி எடுத்து ஆசுவாசம் கொடுத்தார் கோலி. 40 பந்துகளில் அரைசதம் அடித்து `பழைய பன்னீர் செல்வமா வந்துட்டேன்' என பேட்டைக் காட்டினார் கோலி.

Virat Kohli | Faf du Plessis

`ஒண்ணு அடிங்க, இல்ல அவுட் ஆவுங்க' என ஆர்.சி.பி ரசிகர்களே கடுப்பானார்கள். எல்லீஸின் 15வது ஓவரில், லாங் ஆஃபில் ஒரு சிக்ஸர் அடித்தார் கோலி. 16வது ஓவரில், டூப்ளெஸ்ஸி ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதையும் தவறவிட்டார் கீப்பர் ஜித்தேஷ். ஒரு வழியாக, ப்ராரின் 17வது ஓவரில் கோலியின் விக்கெட் காலியானது. இம்முறை கேட்ச் பிடித்தது அதே ஜித்தேஷ்தான். சுழன்று வந்த பந்தை, கோலி பேடல் ஸ்வீப் ஆட முயன்றார். கோலி ஆடப்போவது பேடல் ஸ்வீப்தான் என்பதை கண்டறிந்து விட்ட ஜித்தேஷ், முன்கூட்டியே இந்தப் பக்கம் வந்துவிட்டார். கடைசியில், பந்து கோலியில் பேட்டில் பட்டு தெறித்து, ஜித்தேஷின் கையில் அகப்பட்டது! அற்புதமான கேட்ச். அடுத்து வந்த மேக்ஸ்வெல், முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். நல்ல வேளையாக அதில் சிங்கிள் தட்டினார் டி.கே. அதே ஓவரில், ஒரு சிக்ஸரை கொளுத்திவிட்டு சாந்தப்படுத்தினார் டூப்ளெஸ்ஸி. எல்லீஸ் வீசிய 18வது ஓவரில், லாங் ஆனில் மற்றுமொரு சிக்ஸரைப் பறக்கவிட்ட டூப்ளெஸ்ஸி, அடுத்த பந்திலேயே லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். 56 பந்துகளில் 84 ரன்கள்.

19வது ஓவரை வீசவந்தார் சிறுவர். 3வது பந்தில் லோம்ரோர் ஒரு பவுண்டரி தட்டினார். 5வது பந்தில், டி.கே ஒரு பவுண்டரி தட்டினார். டி.கேவும் பழைய பன்னீர் செல்வமா வந்துட்டாரோ என ஆர்.சி.பி ரசிகர்கள் நினைக்கையில், `ச்சேசே' என அடுத்த பந்தே அவுட்டானார் டி.கே. இம்முறை டீம் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். சாம் கரண் வீசிய கடைசி ஓவரில், 11 ரன்கள் கிடைத்தது. 20 ஓவர் முடிவில் 174/4 என சுமாரான ஸ்கோரையே எட்டியிருந்தது ஆர்.சி.பி.

Mohammed Siraj | Atharva Taide

டூப்ளெஸ்ஸிக்கு பதிலாக வைசாக் விஜயக்குமாரை இம்பாக்ட் வீரராக உள்ளே கொண்டு வந்தார் கோலி. 175 ரன்களை எட்டிப்பிடிக்க களமிறங்கியது டெய்டே - ப்ரப்சிம்ரன் ஜோடி. சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி அடித்து தொடங்கினார் டெய்டே. பஞ்சாப் ரசிகர்களுக்கே ஒன்றும் புரியவில்லை. பிறகு, அடுத்த பந்திலேயே எல்.பி.டபிள்யு ஆனதும்தான் இயல்பு நிலைக்கு வந்தார்கள். `சிராஜ், பழைய பன்னீர் செல்வமா வந்துட்டார்' என பெங்களூர் ரசிகர்கள் அவசரத்தில் அலறிவிட்டார்கள். பிறகு, `பழைய சிராஜ் வேண்டவே வேண்டாம். இந்த சிராஜே இருக்கட்டும்' என பல்லைக் காட்டினார்கள். அதே ஓவரின், 5வது பந்தில் ப்ரப்சிம்ரன் ஒரு பவுண்டரி தட்டினார். 2வது ஓவரை வீசவந்தார் பார்னெல். 4வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஷார்ட். கடைசிப்பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ப்ரப்சிம்ரன்.

3வது ஓவரிலேயே ஹசரங்காவை அழைத்து வந்தார் கோலி. முதல் பந்திலேயே, ஷார்ட்டின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் ஹசரங்கா. ஸ்டெம்ப் தெறித்தது. ஓவரின், கடைசிப் பந்தில் ப்ரப்சிம்ரன் ஒரு பவுண்டரி அடித்தார். 4வது ஓவரை வீசிய சிராஜ், லிவிங்ஸ்டோன் விக்கெட்டைத் தூக்கினார். மேல் முறையீடுக்குச் சென்று எல்.பி.டபுள்யூ வாங்கினார் கேப்டன் கோலி. அதே ஓவரில், இளைஞர் சிங் ஹர்ப்ரீத் ஒரு பவுண்டரி அடித்தார். பார்னெலின் 5வது ஓவரில், டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸரும் அடித்தார். வைசாக் விஜயக்குமார் வீசிய 6வது ஓவரில், இளைஞர் சிங் ஹர்ப்ரீத், ரன் அவுட் ஆனார். பந்தைப் பிடித்து வ்ரூட்டென எறிந்துவிட்டார் சிராஜ். மீண்டும் அதே ஒவரின் கடைசிப்பந்தில் ஒரு சிக்ஸரை அடித்துவிட்டார் ப்ரப்சிம்ரன். பவர்ப்ளேயின் முடிவில் 49/4 என பஞ்சாப் கிங்ஸ் பாய் விரித்து படுத்துவிட்டது.

Vyshak Vijayakumar

மேக்ஸ்வெல் வீசிய 7வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே. ஹர்ஷல் படேலின் 8வது ஓவரில், 2 ரன்கள் மட்டுமே. ஹசரங்கா வீசிய 9வது ஓவரின் முதல் பந்து, லாங் ஆனில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ப்ரப்சிம்ரன். மீண்டும் கடைசிப்பந்தில் இன்னொரு சிக்ஸரை தெறிக்கவிட்டார். ப்ரப்சிம்ரன் எனும் பெயரை கடைசிப்பந்து சிம்ரன் என மாற்றிவிடலாம் போல. ஓவரின் கடைசிப்பந்துகளை மட்டும் வெறியாக வெளுத்துவிடுகிறார். விஜய்குமாரின் 10வது ஓவரில், சாம் கரணும் ரன் அவுட் ஆனார். பிட்சில் `வேதம்' அர்ஜூனைப் போல் வேகமாய் ஓடாமல், `நெஞ்சத்தைக் கிள்ளாதே' மோகனைப் போல் ஜாக்கிங் செய்துகொண்டிருந்தால் இப்படித்தான் ரன் அவுட் அடிப்பார்கள். 10 ஓவர் முடிவில், 77/5 என குறட்டை விட்டது பஞ்சாப்.

ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கும் நோக்கத்துடன் வந்தார் ஹர்ஷல். ஓவரின் 4வது பந்து, பவுண்டரிக்கு விரைந்தது. கடைசிப்பந்து, நோ பாலில் ஒரு சிக்ஸர். கல்லா கட்டினார் ஜித்தேஷ். பார்னெலின் 11வது ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்த ப்ரப்சிம்ரனை, `நீங்களும் பழைய பன்னீர் செல்வமா வாங்க' என்றார்கள் பஞ்சாப் ரசிகர்கள். `நான் இந்த சீசன்தான் ஆடவே வந்திருக்கேன்' என அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். 30 பந்துகளில் 46 ரன்கள்! அடுத்து வந்த ஷாரூக்கான், ப்ரப்சிம்ரனின் இடத்திலிருந்து கடைசிப்பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஹசரங்கா வீசிய 13வது ஓவரில், ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார் ஹசரங்கா. அடுத்து களமிறங்கிய ப்ரார், ஷாரூக்கானின் இடத்திலிருந்து மீண்டும் கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார்.

Wanindu Hasaranga

சிராஜின் 14வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 15வது ஓவரை வீசிய ஹசரங்கா, ஜித்தேஷிடம் ஒரு சிக்ஸரைப் பெற்றுக்கொண்டார். 15 ஓவர் முடிவில் 125/7 எனும் நிலையில் புரண்டு படுத்தது பஞ்சாப் அணி. 30 பந்துகளில் 50 ரன்கள்தான் தேவை என்றாலும், கைவசம் விக்கெட்கள் இல்லாமல் தவித்தது. விஜய்க்குமாரின் 16வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கடாசினார் ஜித்தேஷ் சர்மா. 24 பந்துகளில் 37 ரன்கள். 17வது ஓவரை வீசிய ஹர்ஷல், 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கூடுதலாக, இந்த ஓவரில் ஜித்தேஷ் சர்மாவின் கேட்சை மிஸ் செய்தார் கோலி. 18வது ஓவரை வீசவந்தார் சிராஜ். 18 பந்துகளில் 30 ரன்கள் தேவை. 3வது பந்து, க்ளீன் போல்டானார் ப்ரார். கடைசிப்பந்தில், எல்லீஸும் போல்டானார். 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டைத் தூக்கிவிட்டார் சிராஜ். 12 பந்துகளில் 26 ரன்கள் தேவை. ஹர்ஷலின் அடுத்த ஓவரில், ஜித்தேஷும் கேட்ச் கொடுத்து அவுட்டாக 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்.சி.பி அணி. 4/21 என சிறப்பாக பந்து வீசிய சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.