RCBvsPBKS| ஒரே போட்டி... 3 மகத்தான சாதனைகளைப் படைத்த விராட் கோலி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 59 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 முத்தான சாதனைகளைப் படைத்துள்ளார்.
Virat Kohli | RCB
Virat Kohli | RCB Swapan Mahapatra

’இந்தியாவின் ரன் மெஷின்’ என அழைக்கப்படும் விராட் கோலி, கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். அதிலும் ஐபிஎல்லில் சொல்லவே வேண்டாம். இந்த சீசனிலும் அவருடைய ரன் வேட்டை தொடர்கிறது; சாதனைப் பயணம் விரிகிறது.

இன்று நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இன்றைய போட்டியில் இரு அணியிலும் கேப்டன்கள் மாற்றப்பட்டிருந்தனர். பெங்களூரு அணிக்கு விராட் கோலியும், பஞ்சாப் அணிக்கு சாம் கரணும் கேப்டனாகப் பொறுப்பேற்றனர்.

விராட் கோலி
விராட் கோலிfile image

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் விராட் கோலி 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடக்கம். இதன்மூலம் விராட் கோலி ஐபிஎல் சீசனில் 30+ ரன்களை அதிகம் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் அவர், இன்றைய போட்டியில் 59 ரன்கள் எடுத்ததன் மூலம் 100 தடவை 30+ ரன்களைக் கடந்துள்ளார். இந்தப் பட்டியலில் ஷிகார் தவான் (91 தடவை) 2வது இடத்திலும், டேவிட் வார்னர் (90 தடவை) 3வது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்த சீசனில் விராட் கோலி 4 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli
Virat Kohli Twitter

தவிர, இன்றைய போட்டியில் 5 பவுண்டரிகளை அடித்திருந்தார். இதன்மூலம் ஐபிஎல்லில் 600 பவுண்டரிகள் அடித்த 3வது வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். இந்தப் பட்டியலில் ஷிகார் தவான் 730 பவுண்டரிகளுடன் முதல் இடத்திலும், டேவிட் வார்னர் 608 பவுண்டரிகளுடன் 2வது இடத்திலும் உள்ளார். இன்றைய போட்டிக்கு முன்பு விராட் கோலி, 598 பவுண்டரிகள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்றைய போட்டியில் கேப்டனாக செயல்பட்டு 59 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 6,500 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதை கோலி, 186 இன்னிங்ஸில் செய்துள்ளார். இந்த பட்டியலில் தோனி 6,176 ரன்களுடன் 2வது இடத்திலும், ரோகித் சர்மா 5,489 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com