Mohit Sharma
Mohit Sharma  PTI
T20

PBKSvGT | 2003 காலகட்ட ஆஸ்திரேலியா மாதிரி இருக்குப்பா இந்த குஜராத் டைட்டன்ஸ்

ப.சூரியராஜ்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 18வது போட்டியில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸும் அணியும் மொகாலியில் மோதின. கடந்த மேட்சில், ரிங்கு ஒற்றை ஆளாக நின்று குஜராத்துக்கு சங்கு ஊதினார். அந்த துர்கனவை இந்த மேட்சில் துடைத்து அழிக்கும் முயற்சியோடு களமிறங்கியது டைட்டன்ஸ். கடந்த மேட்சில், ஒற்றை ஆளாக நின்று ஆடிகொண்டிருந்தார் தவான். அந்த கலங்கத்தை துடைத்தெறியும் முயற்சியோடு களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ். ஹர்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக வந்த மகிழ்ச்சியில் குஜராத் ரசிகர்களும், தங்கள் கேப்டன் பழைய தவானாக மீண்டு வந்திருக்கும் மகிழ்ச்சியில் பஞ்சாப் அணி ரசிகர்களும் மேட்ச் பார்க்க லஸ்ஸியோடு அமர்ந்தனர். டாஸ் வென்ற குஜராத் அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. ப்ரப்சிம்ரனும் தவானும் ஓபன் செய்ய, முகமது ஷமி முதல் ஓவரை வீசினார்.

Rashid Kha

முதல் மேட்சில் ஆல்தோட்ட பூபதி சிம்ரனைப் போல் ஆடிய ப்ரப்சிம்ரன், அடுத்தடுத்த மேட்ச்களில் `வாரணம் ஆயிரம்' சிம்ரனைப் போல் அமைதியாகிவிட்டார். இந்த மேட்சாவது மீண்டும் சலங்கை கட்டி ஆடுவார் என எதிர்பார்த்தால், இரண்டாவது பந்தே ரஷீத் கானிடம் கேட்சை கொடுத்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டார். அடுத்து களமிறங்கிய ஷார்ட், பாயின்ட்டில் ஒரு பவுண்டரி, ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை வெளுத்தார். 2வது ஓவரை வீசினார் லிட்டில். கவர் திசையில் ஒன்று, மிட்-ஆஃபில் ஒன்று என இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் தவான். மீண்டும் 3வது ஓவரை வீசிய ஷமி, மீண்டும் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார் ஷார்ட். 4வது ஓவரின் 2வது பந்தில், ஆரஞ்சு கேப் ஆட்டக்காரர் தவானின் விக்கெட்டைக் கழற்றினார் தவான். மிட் ஆன் திசையில் தவான் தூக்கியடிக்கப் பார்க்க, பந்து மேலே கொடியேறி அல்ஸாரியின் கைகளுக்குள் தஞ்சமடைந்தது. அடுத்த ஓவரை அல்ஸாரியே வீசவந்தார். ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரியைத் தட்டினார் ஷார்ட். ஓவரின் கடைசிப்பந்தில், டீப் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸரை வெளுத்தார். லிட்டில் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில், இன்னொரு பவுண்டரியும் அடித்தார் ஷார்ட். பவர்ப்ளேயின் முடிவில் 52/2 என திடகாத்திரமான நிலையில் இருந்தது பஞ்சாப்.

`அப்படியெல்லாம் இருக்கக்கூடாதே, தப்பாச்சே' என ரஷீத்கானை அழைத்து வந்தார் ஹர்திக். 7வது ஓவரின் 4வது பந்து, க்ளீன் பவுல்டானார் ஷார்ட். அடுத்து களமிறங்கிய ஜித்தேஷ் ஷர்மா, ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரியை ரஷீத்துக்கு பரிசளித்தார். அல்ஸாரி வீசிய 8வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. 9வது ஓவரை வீசிய ரஷீத் கானை, பவுண்டரியுடன் வரவேற்றார் ஜித்தேஷ். 4வது பந்தில், இன்னொரு பவுண்டரி. ஜோசப் வீசிய 10வது ஓவரில், மீண்டும் 4 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில் 75/3 என சுனங்கியிருந்தது.

Mohit Sharma

இந்த சீசனில் பழைய ரௌடிகள் எல்லாம் பழைய ஃபார்முக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், மோகித் சர்மாவுக்கு 11வது ஓவரை கொடுத்தார் ஹர்திக். 118 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட ஒரு ஸ்லோயர் பவுன்சரை பவுண்டரிக்கு தட்டினார் ஜித்தேஷ் சர்மா. ஆனாலும், ஒவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மீண்டும் வந்தார் ஷமி. அவரையும் பவுண்டரியோடு வரவேற்றார் ஜித்தேஷ். ஓவரின் 4வது பந்தில், இன்னொரு பவுண்டரி. முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என பழமொழிக்கு ஏற்ப, மோகித் சர்மாவை வைத்து ஜித்தேஷ் சர்மாவின் விக்கெட்டை கழட்டினார் ஹர்திக். பந்து பேட்டில் பட்டது என சாஹா ஒற்றை ஆளாக போராட, அவர் பேச்சை நம்பி கடைசி நொடியில் ரிவ்யூ எடுத்தார் ஹர்திக். கடைசியில், சாஹா சொன்னது உண்மையே! ரஷீத் வீசிய 14வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே. 15வது ஓவரை வீசிய மோகித், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 15வது ஓவர் முடிவில், 99/4 என படுத்தேவிட்டது பஞ்சாப்.

ரஷீத் வீசிய 16வது ஓவரில், ஒரு சிக்ஸரை வெளுத்தார் சாம் கரண். 17வது ஓவரில், ராஜபக்‌ஷேவின் விக்கெட்டைக் கழட்டினார் அல்ஸாரி. அடுத்து களமிறங்கிய ஷாரூக், முதல் பந்திலேயே டமாரென ஒரு சிக்ஸரை அடித்தார். ஷமி வீசிய 18வது ஓவரில், ஒரு சாம் ஒரு பவுண்டரியும், ஷாரூக் ஒரு சிக்ஸரும் அடித்தனர். மோகித் வீசிய 19வது ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரணும் காலி. அம்புட்டுதேன்' என தலையில் கைவைத்தார்கள் பஞ்சாப் ரசிகர்கள். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்து ஷாரூக் ஆறுதல் சொன்னார். லிட்டில் வீசிய கடைசி ஓவரில், நேராக ஒரு சிக்ஸரை அடித்தார் ப்ரார். கடைசி 3 பந்துகளில், ஷாரூக் மற்றும் ரிஷி தவான் என இரண்டு பேரை ரன் அவுட்டும் அடித்துவிட்டார் சாஹா. 20 ஓவர் முடிவில் 153/8 என சுமாரான இலக்கை நிர்ணயித்திருந்தது பஞ்சாப் அணி. பின்னே, 56 டாட் பந்துகள் ஆடியிருந்தால் இப்படித்தான் தொன்டையைக் கவ்வும்.

Shubman Gill

154 எனும் இலக்கை அடைய சாஹாவும், கில்லும் ஓபன் செய்தனர். அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். ராஜபக்ஷேவுக்கு பதிலாக ராகுல் சாஹர் இம்பாக்ட் வீரராக உள்ளே வந்தார். முதல் ஓவரின் 2வது பந்து, கவர் திசையில் ஒரு பவுண்டரி. சிறப்பாக ஆரம்பித்தார் கில். ரபாடாவைப் பார்த்து, `ஹப்பாடா என் தலைவன் வந்துட்டான்டா' என உற்சாகமானார்கள் பஞ்சாப் ரசிகர்கள். 2வது பந்திலேயே ஒரு பவுண்டரியை அடித்தார் சாஹா. `என்ன தல' என அரண்டுபோனார்கள். ஓவரின் கடைசிப்பந்தில், கில் ஒரு பவுண்டரி. 3வது ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப். அவர் மீது என்ன கடுப்பில் இருந்தார் சாஹா என தெரியவில்லை. கவர் திசையில் ஒன்று, மிட் ஆன் திசையில் ஒன்று, ஃபைன் லெக்கில் ஒன்று, பேக்வார்டு பாயின்ட்டில் ஒன்று என நான்கு பவுண்டரிகளை விளாசினார். சிறுவன் சிங்கிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திருவிழாவின் காணாமல் போன சிறுவனைப் போல திறுதிறுவென முழித்துக்கொண்டிருந்தார்.

4வது ஓவரை வீசவந்தார் ப்ரார். முதல் பந்தை பவுண்டரிக்கு அறைந்தார் கில். 4வது ஓவரை வீசிய ரபாடா, 4வது பந்தில் சாஹாவின் விக்கெட்டைக் கழற்றினார். இது அவரது 100-வது ஐ.பி.எல் விக்கெட். மிகக்குறைந்த மேட்ச்களில் (64) 100 விக்கெட்கள் எடுத்த வீரர் எனும் சாதனையையும் அடைந்தார். ஷார்ட்டாக வீசப்பட்ட பந்தை, புல் ஷாட் ஆடி, மேத்யூ ஷார்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சாஹா. அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன், ஓவரின் கடைசிப்பந்தை பவுண்டரிக்கு தட்டினார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசிய சாம் கரண், 4 ரன்கள் மட்டும் கொடுத்தார். இம்பாக்ட் வீரர் பாம்பு சஹார், 7வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சாம் கரணின் 8வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. ராகுல் சஹாரின் 9வது ஓவரில், இரண்டு பவுண்டரிகளை அடித்தார் கில். மும்பைக்கு எதிராக ரஹானே ஆடியதைப் போல, சென்னை எதிராக அஸ்வின் ஆடியதைப் போல, பஞ்சாப்புக்கு எதிராக கில் ஆடிக்கொண்டிருந்தார். `வளர்த்த கிடா மார்ல பாயுதே' என கண்ணீர் விட்டார்கள் பஞ்சாப்வாசிகள். 10வது ஓவரை வீசிய ப்ரார், 2 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார். 10 ஓவர் முடிவில் 80/1 என குஜராத் அணியும் சுனங்கியே இருந்தது.

Shubman Gill

மேத்யூ ஷார்ட், ஆஃப் ஸ்பின் வீசவந்தார். சாய் சுதர்சன் ஒரு பவுண்டரியை அடித்தார். 12வது ஓவரை வீசிய அர்ஷ்தீப், சாய் சுதர்சனின் விக்கெட்டைக் கழட்டினார். அரைக்குழிப் பந்தை டீப் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 12வது ஓவரில், 1 விக்கெட்டை பறிகொடுத்து 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ப்ரார் வீசிய 13வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. மீண்டும் வந்தார் ரபாடா. ஓவரின் 5வது பந்து, புயல் வேகத்தில் ஹர்திக்கின் ஹெல்மெட்டை உரசி, கீப்பரைத் தாண்டி பறந்து, பவுண்டரியில் போய் விழுந்தது.

லெக் பைஸில் பவுண்டரி. அடுத்த பந்தில் அழகான ஒரு கவர் டிரைவ் அடித்து பவுண்டரியை அள்ளினார் ரபாடா. மீண்டும் வந்தார் ப்ரார், ஓவரின் 2வது பந்தில், கேப்டன் ஹர்திக்கை காலி செய்தார். இழுத்து அடிக்க முயன்று, சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஹர்திக். டேவிட் மில்லர் களத்திற்குள் வந்தார். 4-0-20-1 என அற்புதமாக தனது ஸ்பெல்லை முடித்தார் ப்ரார். 16வது ஓவரை வீசிய சஹார், 9 ரன்களை விட்டுக்கொடுத்தார். 24 பந்துகளில் 34 ரன்கள் தேவை எனும் நிலை.

17வது ஓவரில் சாம் கரண், ஒரு பவுண்டரியுடன் 9 ரன்களை விட்டுக்கொடுத்தார். ரபாடா வீசிய 18வது ஓவரில், டங்கென ஒரு சிக்ஸரை அடித்தார் கில். கடைசிப்பந்தில், மில்லரும் ஒரு பவுண்டரி அடித்தார். கில்லும், கில்லர் மில்லரும் பஞ்சாப்பின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் கொளுத்திப்போட்டனர். 12 பந்துகளில் 13 ரன்கள் தேவை. 19,20 ஓவர்கள் என்றால் குஷியாகிவிடும் அர்ஷ்தீப், அற்புதமாக வீசி 19வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை. சாம் கரண் வீசினார். முதல் பந்தில், மில்லர் ஒரு சிங்கிள். இரண்டாவது பந்தில், சுப்மன் கில் பவுல்டானார். பஞ்சாப் ரசிகர்கள் ஆரவாரமானர்கள்.

Miller | rahul tewatia

ராகுல் திவாட்டியா உள்ளே வந்தார். `இன்னும் எத்தனை பேர்டா இருக்கீங்க' என பஞ்சாப் ரசிகர்கள் கடுப்பானார்கள். 3வது பந்தில் ஒரு சிங்கிள், 4வது பந்தில் இன்னொரு சிங்கிள். 2 பந்துகளில் 4 ரன்கள் தேவை. ஸ்கூப் ஷாட் ஆடி பவுண்டரி அடித்தார் `ஃபினிஷர்' திவாட்டியா. 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத் அணி. இன்னொரு வளர்த்த கிடாவான மோகித் சர்மா, ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அட்டகாசமாக ஆரம்பித்து, அடுத்தடுத்து பட்டத்தை டீலில் விடும் பழைய கிங்ஸ் லெவன் பஞ்சாப்பாக மாறிக்கொண்டிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்! இன்னொரு பக்கம், ரிங்கு சிங்கைப் போல் மேஜிக் செய்தால் மட்டுமே டைட்டன்ஸ் வீழ்த்த முடியும் என்பதைப் போல், 2003 ஆஸ்திரேலிய அணியின் ஐ.பி.எல் வெர்ஷனாக இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ்! டெல்லி கேபிட்டல்ஸ் எந்த பள்ளத்தாக்கில் கிடக்கிறது எனப் பார்க்க வேண்டும்.