GTvKKR | ஈஸ்டர் சண்டேயில் உயிர்த்தெழுந்த IPL... 66666 அதிரடி சரவெடி ரிங்கு..!

சாய் சுதர்சனின் அரைசதம், விஜய் சங்கரின் சரவெடி இன்னிங்ஸ், ரஷீத் கானின் ஹாட்ரிக், வெங்கடேஷின் மிரட்டல் அடி, கடைசியில் ரிங்கு ஆடிய கதகளி ஆட்டம் என மொத்த மேட்ச்சும் களைகட்டியது.
RInku SIngh
RInku SIngh-

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 12வது போட்டியில், ஹர்திக் இல்லாத டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது ஸ்ரேயாஸ் இல்லாத நைட்ரைடர்ஸ் அணி. கடந்த மேட்சில் லார்டு தாக்கூரின் கடைக்கண்னோர கருணையில் மேட்சை ஜெயித்திருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இன்னொரு பக்கம், டெல்லியை வதம் செய்திருந்தது குஜராத் டைட்டன்ஸ். டெல்லியை அடித்து அடித்தே ஹர்திக் பாண்டியாவுக்கு வலித்து விட்டதோ என்னவோ, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இப்போட்டியில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக, அகமதாபாத்தில் நேற்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் தலைமை டைட்டனாக அணியை வழி நடத்தியது ரஷீத் கான். டாஸை வென்று பேட்டிங்கையும் தேர்ந்தெடுத்தார். குஜராத் லெவனில் விஜய் சங்கர், சாய் சுதர்சன். கொல்கத்தா லெவனில் வருண் சக்ரவர்த்தி, நாராயணன் ஜெகதீசன். ஆக மொத்தம் இது தமிழர்களின் சீசன்.

 Rashid Khan
Rashid KhanPTI

குஜராத் அணிக்காக சாஹாவும் கில்லும் ஓபனிங் இறங்க, முதல் ஓவரை வீசவந்தார் உமேஷ். சபாஷ் என்பதைப் போல, அருமையாக பந்து வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தாகூர் வீசிய 2வது ஓவரில், இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை அடித்தார் சாஹா. சாஹா அடிப்பதுபோல் சோகம் உண்டோ என கலங்கினார்கள் நைட் ரைடர்கள். ஓவரின் கடைசிப்பந்தில் கில் ஒரு பவுண்டரியை மிட் விக்கெட் திசையில் பறக்கவிட்டார். உமேஷ் வீசிய 3வது ஓவரில், மிட் ஆஃபில் ஒரு பவுண்டரியைத் தட்டினார் சாஹா.

டரான்டினோ பட வில்லன்களின் லுக்கில் இருந்த ஃபெர்குசன், 4வது ஓவரை வீசவந்தார். 150 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்து, எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியை விரட்டினார் சாஹா. 5வது ஓவரிலேயே நரைனையும் உள்ளே கொண்டு வந்தார் ராணா. அழைத்து வந்ததற்கு அமோக லாபம் என்பது போல, சாஹாவின் விக்கெட்டைக் கழட்டினார் நரைன். பந்துக்கு பின்னால் ஓடிச்சென்று, அருமையான கேட்சை பாய்ந்து பிடித்தார் ஜெகதீசன். அடுத்து வந்த சாய் சுதர்சன், ஓவரின் 5வது பந்தை, ஷார்ட் தேர்டு மேன் திசைக்கு தொட்டுவிட்டார். 6வது ஓவரை வீச வந்தார் வருண் சக்கரவர்த்தி. 4வது பந்தை அகலப்பந்தாக பவுண்டரிக்குள் வீச, அடுத்து இரன்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் கில். போன மேட்ச் சக்கரவர்த்தி. ஆனால், இந்த மேட்ச் மெழுகுவர்த்தி! பவர் ப்ளேயின் முடிவில் 54/1 என சிறப்பாகவே தொடங்கியிருந்தது குஜராத் அணி.

Wriddhiman Saha
Wriddhiman SahaPTI

நரைன் வீசிய 7வது ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் கில். 8வது ஓவர் வீசிய சுயாஷின் தலைக்கு மேல் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார் சாய் சுதர்சன். மீண்டும் வந்த வருண் சக்கரவர்த்தி, முதல் ஐந்து பந்துகளை இறுக்கிப்பிடித்தார். சாய் சுதர்சனோ, கடைசிப் பந்தை சிக்ஸருக்கு நெறுக்கி அடித்தார். அடுத்த ஓவரின் இன்னொரு பவுண்டரி சுயாஷின் தலைக்கு மேல் பறந்தது. அடித்தது கில்! 10 ஓவர் முடிவில், 88/1 என மூன்றாவது கியரில் போய் கொண்டிருந்தது டைட்டன்ஸ். அப்போது, வேகத்தடையாக வந்த ஃபெர்குசன், பந்து வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 12வது ஓவர் வந்த நரைனுக்கு முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அதிர்ச்சி கொடுத்தார் சாய் சுதர்சன். 4வது பந்தில் கில்லின் விக்கெட்டைக் கழட்டி அதே அதிர்ச்சியைத் திருப்பிக் கொடுத்தார் நரைன்.

Sai Sudarshan
Sai Sudarshan PTI

13வது ஓவர் வீச வந்த உமேஷை, பேக்வார்டு பாயின்ட், ஷார்ட் ஃபைன் லெக், மிட் ஆஃப் என முதல் மூன்று பந்துகளையும் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அரளவிட்டார் அபினவ் மனோகர். அடுத்த ஓவரை வீச வந்தார் கிரிக்கெட்டின் நீரஜ் சோப்ரா, சுயாஷ் சர்மா. ஓவரின் 3வது பந்து, கூக்ளியாக உள்ளே புகுந்து, மனோகரின் விக்கெட்டை சாய்த்தது. மீண்டும் வந்த தாக்கூர், சாய் சுதர்சனுக்கு ஒரு பவுண்டரியுடன் சேர்த்து 9 ரன்கள் கொடுத்தார். 15 ஓவர் முடிவில், 132/3 என மூன்றாவது கியரிலேயே முக்கிக் கொண்டிருந்தது டைட்டன்ஸ்.

சுயாஷ் வீசிய 16வது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்தார் விஜய் சங்கர். ஃபெர்குசனின் 17வது ஓவரில், ஒரு சிங்கிளைத் தட்டி அரை சதத்தை நிறைவு செய்தார் சாய் சுதர்சன். அடுத்த ஓவரிலேயே, நரைனின் சுழலில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அந்த ஓவரின், 5வது பந்தில் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார் விஜய் சங்கர். 19வது ஓவரை வீசினார் ஃபெர்க்யூசன். முதல் பந்து, நோ பாலில் பவுண்டரி அடித்தார் விஜய். அடுத்த பந்து, டாப் எட்ஜாகி கீப்பரின் தலைக்கு மேல் சிக்ஸருக்குப் பறந்தது. 3வது பந்து ஷார்ட் தேர்ட் மேன் திசையில் பவுண்டரிக்கு போய் விழுந்தது. கடைசியாக, ஓவரின் கடைசிப்பந்தில் லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸரைத் தூக்கிவிட்டார் ஷங்கர். கெமிக்கல் டிரம்மில் ஒரு மண்டலம் ஊறவைத்து போதி தர்மரின் டி.என்.ஏ-வைத் தூண்டி விட்டதைப் போல, வேறு மாதிரி ஆடினார் சங்கர்.

Vijay Shankar | david Miller
Vijay Shankar | david MillerPTI

கடைசி ஓவரை வீசவந்தார் தாக்கூர். 3வது பந்து டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸருக்குப் பறந்தது. வெறும் 21 பந்துகளில் அரைசதத்தை கடந்தார் விஜய் சங்கர். அடுத்த பந்தில், லாங் ஆன் திசையில் மீண்டுமொரு சிக்ஸர். பிறகு, மீண்டும் லாங் ஆன் திசையில் இன்னொரு சிக்ஸர். கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்கள் அடிக்க, 204/4 என நான்காவது கியரில் எல்லைக் கோட்டை தொட்டு நிறைவாக இன்னிங்ஸை முடித்தது குஜராத்.

RInku SIngh
GTvKKR | தொடர்ச்சியாய் 5 சிக்ஸர் அடித்த ரிங்கு சிங்... ஒரே போட்டியில் பதிவான பல சாதனைகள்!

இமாலய என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு பரங்கிமலை என சொல்ல முடிகிற 205 என்கிற இலக்கை எட்டிப்பிடிக்க களமிறங்கியது கொல்கத்தாவின் குர்பாஸ் - ஜெகதீசன் ஜோடி. சாய் சுதர்சனுக்கு பதில், ஜோஸ் லிட்டிலை இம்பாக்ட் வீரராக உள்ளே அழைத்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் ஓவரை வீசினார் முகமது ஷமி. வெறும் 2 ரன்கள் மட்டுமே. 2வது ஓவரில், கொல்கத்தாவுக்கு இம்பாக்ட் கொடுக்க ஆரம்பித்தார் லிட்டில். பேக் வார்ட் பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரியை விளாசினார் ஜெகதீசன். குர்பாஸோ, லிட்டிலின் தலைக்கு மேல் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். ஷமி வீசிய 3வது ஓவரின், முதல் பந்தே பவுண்டரிக்கு பறந்தது. நங்கென அடித்தார் குர்பாஸ். மூன்றாவது பந்தில், பரிதாபமாக தனது விக்கெட்டையும் கொடுத்தார். ஷமி வீசிய பந்து குர்பாஸின் க்ளவில் பட்டு எகிறியது. அதைப் பிடிக்க கீப்பர் கே.எஸ்.பரத்தும், யாஷ் தயாளும் ஒரே நேரத்தில் பாய, பந்து எப்படியோ தயாளின் கைகளுக்குள் சிக்கியது. வெங்கடேஷ் ஐயரை இம்பாக்ட் வீரராக, சுயாஷ் சர்மாவுக்கு பதில் இறக்கிவிட்டார் ராணா. ஓவரின் 5வது பந்து, சிக்ஸருக்கு `சொய்ங்...' என பறந்தது.

4வது ஓவரை வீசிய லிட்டில், 2 ரன்கள் மட்டுமே கொடுத்து ஜெகதீசனின் விக்கெட்டையும் கழட்டினார். டீப் ஸ்கொயர் லெக்கில் அபினவ் மனோகரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார் ஜெகதீசன். ஷமி வீசிய 5வது ஓவரில், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டார் வெங்கி. பவர்ப்ளேயின் கடைசி ஓவரை அல்ஸாரி வீச, ஷார்ட் ஃபைன் லெக்கில் இன்னொரு பவுண்டரியை அறைந்தார் வெங்கி. பவர்ப்ளேயின் முடிவில் 43/2 என மெல்லமாய் விரட்டி வந்தது கொல்கத்தா. யாஷ் தயாள் வீசிய 7வது ஓவரில், மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி, ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸர் என ரன்களை அள்ளினார் வெங்கடேஷ். 8வது ஓவரை வீசிய அல்ஸாரியிடம் கேப்டன் ரானா இரண்டு சிக்ஸர்களை அள்ளினார்.

Nitish Rana | KKR
Nitish Rana | KKRPTI

இந்த ஜோடியைப் பிரித்துவிட `பதனி... பதனி...' என களமிறங்கினார் கேப்டன் ரஷீத். ஓவரின் 5வது பந்தில், ரானா ஒரு பவுண்டரி அடித்தார். 10வது ஓவரை வீசிய யாஷ் தயாளை, மீண்டுமொரு பவுண்டரி விளாசினார் வெங்கடேஷ். 10 ஓவர் முடிவில் 86/2 என கியரை மாத்தியிருந்தது கொல்கத்தா. மீண்டும் வந்தார் ரஷீத். வெங்கி ஒரு சிக்ஸரும், ரானா ஒரு பவுண்டரியும் அடித்தனர். `காய்ஞ்சு போன நதியெல்லாம், வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா?' என ரஷீத்தை நினைத்து கதறினார்கள் டைட்டன் ரசிகர்கள். யாஷ் தயாள் பந்து வீச வந்தாலே குஷியாகிவிடுகிற வெங்கி, மீண்டும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என மிரட்டினார். ரானாவுக்கும் ஆசை வர, அவரும் ஒரு சிக்ஸரை விளாசினார். 13வது ஓவரை வீசவந்தார் ரஷீத் கான். தொடர்ந்து, இரண்டு பவுண்டரிகளை அடித்தார் ரானா. 3 ஓவர்களுக்கு 35 ரன்கள் கொடுத்திருந்தார் ரஷீத். பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்திருந்தது.

தயாள் வேண்டாம், ஜோசப் போதும் என அல்ஸாரியிடம் பந்தை வீசினார் ரஷீத். முதல் பந்தே ரானாவின் விக்கெட் காலி. ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்னொரு பக்கம், லிட்டிலின் ஓவரை 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என பெரிய ஓவராக மாற்றினார் வெங்கடேஷ். மீண்டும் வந்த அல்ஸாரி ஜோசப்பை, மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரிக்கு விரட்டினார் வெங்கடேஷ். ஆனால், அடுத்த பந்திலேயே சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்துவிட்டு சுபம் போட்டார். இன்னும் 24 பந்துகளில் 50 ரன்கள் தேவை. ரஸலும் ரிங்கு சிங்கும் களத்தில் இருந்தனர்.

17வது ஓவரை வீசவந்தார் ரஷீத். காயம்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து, முதல் பந்திலேயே ரஸலின் விக்கெட்டைக் கழட்டியது. இரண்டாவது பந்து, நரைனை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தது. மூன்றாவது பந்து, கடந்த மேட்சின் கடவுள் தாக்கூர் எல்.பி.டபிள்யுவில் அவுட் ஆனார். ஹாட்ரிக்! கொல்கத்தா பக்கம் சைடு வாங்கியிருந்த மேட்சை, தனியாளாக குஜராத் பக்கம் இழுத்துப்போட்டார் ரஷீத்.

Rashid Khan
Rashid Khan PTI

`முடின்ச்' என தலையில் கை வைத்தார்கள் கொல்கத்தா ரசிகர்கள். குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. `விஸ்வரூபம்' பூஜாகுமாரைப் போல் குழப்பமாகவே இருந்தனர். ஷமி வீசிய 18வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. 12 பந்துகளில் 43 ரன்கள் தேவை எனும் நிலை. பந்து வீச வந்தார் லிட்டில். ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என சிதறடித்தார் ரிங்கு. 6 பந்துகளுக்கு 29 ரன்கள் தேவை. `அது அவ்ளோதான் முடிஞ்சது' என கொல்கத்தா ரசிகர்கள் கடுப்பாகி கிளம்ப, `இருந்து என்ன பண்றாங்கனு பார்த்துட்டு போவோம்ணா' என்றனர் சிலர். `அப்படின்ற, விடு அடுத்த மேட்ச் சிக்காமலா போயிடுவானுங்க. அப்போ, இதே மாதிரி செய்றோம்' என நின்று கடைசி ஓவரை வேடிக்கைப் பார்த்தார்கள். யாஷ் தயாள் வீசிய முதல் பந்தில், உமேஷ் ஒரு சிங்கிளைத் தட்டினார். 5 பந்துகளில் 28 ரன்கள் தேவை.

RInku SIngh
RInku SIngh-

கையில் பேட்டுடன் நின்றுகொண்டிருந்தார் ரிங்கு. 2வது பந்து, வொயிட் லாங் ஆஃபில் சிக்ஸருக்கு பறந்தது. 3வது பந்து, பேக்வார்ட் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர். `பாரேன், இது இன்னமும் எழுந்து நிக்குது' என டைட்டன்ஸ் ரசிகர்கள் சிரித்தார்கள்.

4வது பந்து, லாங் ஆஃப் திசையில் இன்னொரு சிக்ஸர். 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை. 5வது பந்தில், லாங் ஆன் திசையில் இன்னொரு சிக்ஸர். டைட்டன்ஸ், நைட் ரைடர்ஸ் ரசிகர்கள் இருவரும் ஒருசேர தலையில் கை வைத்தார்கள். இருவருக்குமே பயத்தில் உள்ளங்கால் கூசியது. கடைசிப் பந்து, 4 ரன்கள் தேவை. குஜராத் அணியே கிளம்பி வந்து தயாளுக்கு ஆலோசனை வழங்கி, தேத்தி அனுப்பியது. கடைசிப் பந்தை வீசினார் தயாள். சும்மா நங்கென மீண்டும் ஒரு சிக்ஸர்ர்ர்ர்..! தொடர்ந்து, 5 சிக்ஸர்கள். சாத்தியமற்ற ஒன்றை சைலன்டாக செய்து முடித்திருந்தார் ரிங்கு. கொல்கத்தா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் கொட்டியது. ஈஸ்டர் சன்டேயில், ஐ.பி.எல் உயிர்த்தெழுந்தது! சாய் சுதர்சனின் அரைசதம், விஜய் சங்கரின் சரவெடி இன்னிங்ஸ், ரஷீத் கானின் ஹாட்ரிக், வெங்கடேஷின் மிரட்டல் அடி, கடைசியில் ரிங்கு ஆடிய கதகளி ஆட்டம் என மொத்த மேட்ச்சும் களைகட்டியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com