ஐசிசி சார்பில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவதுபோல, டெஸ்ட் போட்டிகளிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் அணிகள் இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதில் முன்னேறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதேபோல், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 9 அணிகள் புள்ளிப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
ஒவ்வோர் அணியும் மூன்று சொந்த மண்ணிலும், மூன்று வெளியூர் மண்ணிலும் என ஆறு தொடர்களில் விளையாடுகின்றன. ஒரு தொடரில் இரண்டு முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகள் இருக்கலாம். போட்டி முடிவுகளின் அடிப்படையில் அணிகள் புள்ளிகளைப் பெறுகின்றன. வென்ற புள்ளிகளின் சதவீதத்தை (PCT) அடிப்படையாகக் கொண்டு அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
இந்த நிலையில், இனிமேல் தலா 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, டெஸ்ட் தொடரை நடத்தப்பட வேண்டும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெஸ்ட் விளையாடும் நாடுகளை இரு அடுக்கு அமைப்பாகப் பிரிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) திட்டங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அந்தச் சாத்தியத்தை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இரு அடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் முறைக்கான சாத்தியக்கூறு சிறிது காலமாக செய்திகளில் இருந்து வந்தாலும், அதை யதார்த்தமாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை சமீபத்தில் முடிவடைந்த ஐ.சி.சி ஆண்டு பொதுக் கூட்டத்தில் (ஏ.ஜி.எம்) எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்த சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
எட்டு பேர் கொண்ட இந்த பணிக் குழுவில் ஐ.சி.சி தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சோக் குப்தா தலைமை தாங்குவார் என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் கோல்ட் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் டோட் கிரீன்பெர்க் ஆகியோர் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஐ.சி.சி குழு இரண்டு அடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் முறையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதற்கான முன்மொழிவு 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படலாம். மேலும் 2027-2029 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியில் இருந்து இது நடைமுறைக்கு வரலாம். இருப்பினும், இரண்டு அடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் அமைப்பு நடைமுறைக்கு வர, இந்த முன்மொழிவுக்கு ஐ.சி.சியின் 12 முழு உறுப்பினர்களிடமிருந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை. ஒருவகையில் இது செயல்படுத்தப்பட்டால், ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் ஒரு பிரிவாகவும், மீதமுள்ள 3 அணிகளுடன் மேலும் 3 அணிகள் சேர்க்கப்பட்டு 2ஆவது பிரிவாகவும் பிரிக்கப்படும் எனத் தெரிகிறது.