இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் அவர், அணிக்காகவே விளையாடுவதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எனினும், அவரது ஆட்டம் அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத் தருவதால் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் அவர்மீது நிறைய விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இதனால், ஐபிஎல்லில் தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கலாம் என்று வதந்திகள் கூறினாலும், அவர் எதையும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் சீசன் முடிந்ததும் ஒரு முடிவை எடுப்பது குறித்தும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே உரையாடல் ஒன்றில் தன் தந்தையின் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "எங்கள் அப்பா மிகவும் மிகவும் கண்டிப்பானவர். அவர் ஒழுங்காக இருந்தார்; எப்போதும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் நான் ஒழுங்காக இருக்கிறேன். அவர் எங்களை அடித்தது இல்லை. ஆனால் அந்த பயம் இருந்தது. என் நண்பர்கள் காலனியில் சுவர்களில் ஏறுவார்கள், ஆனால் நான் ஒருபோதும் அவர் பேச்சை மீறவில்லை. என் தந்தை பார்த்தால், நாங்கள் போய்விடுவோம். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எங்களுக்கு ஒருபோதும் தெரியாது, ஆனாலும் நாங்கள் பயந்தோம்.
எங்களது குழந்தைப் பருவத்தில் கட்டுப்பாடுடன் வளர்க்கப்பட்டோம். தவிர, நான் படித்த பள்ளியும் காலனியிலேயே இருந்தது. என் ஆசிரியர்களும் என் மூத்த சகோதரருமே எனக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். எனக்கும் என் மூத்த சகோதரருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.