Ishan Kishan
Ishan Kishan Shailendra Bhojak
T20

MI IPL 2023 Preview | சிக்கல்களைக் கடந்து சாதிக்குமா மும்பை இந்தியன்ஸ்..!

Nithish

பியூஷ் சாவ்லா - அணிக்கு ஒரு அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர் தேவைப்படும்போது'அடிச்சா நிலா வரை பறக்கும், மிஸ்ஸானா மொத்தமா புட்டுக்கும்' ரகம் மும்பை இந்தியன்ஸ். ஐ.பி.எல்லின் பலமான இரு அணிகளுள் ஒன்று. கிட்டத்தட்ட ஏல டேபிளிலேயே தொடர் முடிவுகளை அறிவித்துவிடலாம் என்கிற அளவுக்கு டீம் செட் செய்வார்கள். ஒரு சீசன் வெல்லவும் செய்வார்கள். அதன்பின் அடுத்த சீசனில் யானை போல அவர்களின் தலையில் அவர்களே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டு ப்ளே ஆஃப்பிற்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறுவார்கள். பின் மீண்டும் கோப்பை. அதன்பின் மீண்டும் ப்ளே ஆஃப்கூட வராமல் வெளியேற்றம். ஐ.பி.எல் விளையாட்டுக்குள் இதை ஒரு தனி விளையாட்டாகவே ஆடி வருகிறது இந்த அணி.

Rohit sharma

கடந்த ஆண்டு மெகா ஏலத்தின்போது இவர்கள் முதலீடு செய்த வீரர்களைப் பார்த்தபோதே தெரிந்தது ரோஹித் சர்மா - பொல்லார்ட் காலத்திற்கு பிந்தைய சூப்பர்ஸ்டார்களை உருவாக்க முனைகிறார்கள் என்று. அப்படி சில ஆண்டுகளுக்கு முன் உருவாகிவந்தவர்கள்தானே பாண்ட்யா பிரதர்ஸ், சூர்யகுமார் யாதவ், பும்ரா, இறுதியாய் இஷான் கிஷன் எல்லாம். அதிலும் மாஸ்டர்ஸ்ட்ரோக் ஜோப்ரா ஆர்ச்சரை விரட்டிச் சென்று வாங்கியது. பும்ரா - ஆர்ச்சர் ஒரே அணியிலிருந்தால் எதிரணி மீதி 12 ஓவர்களுக்கு மட்டும் பேட்டிங் ஆடவேண்டியதுதான்.

முழுக்க முழுக்க இளம் வீரர்கள் மேல் இன்வெஸ்ட் செய்ததற்கான பலனையும் உடனே அனுபவித்தது மும்பை. 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே வெற்றி. இதுவரை இல்லாதளவிற்கு கடைசி இடம். இதன்பின் கொஞ்சமாய் சுதாரித்து வதவதவென எடுத்து வைத்திருந்த அத்தனை பவுலர்களையும் வெளியேற்றியது. அந்தப் பணத்தை மொத்தமாய் கொட்டி கேமரூன் க்ரீன் என்கிற ஒரே ஒரு பெரிய பர்சேஸ் மட்டும் செய்தது. மற்ற அனைவருமே அடிப்படை தொகைக்கே வாங்கப்பட்டவர்கள்தான். இந்த முறை எழுச்சிக்காக காத்திருக்கும் அணி அதன்படி எழுந்து நடை போடுமா?

வாரணம் ஆயிரம்

சூர்யகுமார் யாதவ் - வேறு யாராய் இருக்கமுடியும் லிஸ்ட்டில். க்ளப் அணிகளைத் தாண்டி சர்வதேச அணிகளே இப்படி ஒரு டி20 வீரர் நம் நாட்டுக்கும் வேண்டும் என ஏங்கும்படியான திறன். ஐசிசியின் நிரந்தர அணி வீரர்களில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் (175.76) வைத்திருப்பது இவர்தான். சுற்றி சுற்றி அடிக்கும் அடுத்த ஏபி டிவில்லியர்ஸ். ஒன்டவுனில் இவர் இறங்கும்போது ஓபனர்கள் மீதான பிரஷர் வெகுவாய் குறையும்.

Surya Kumar Yadav

ஜோஃப்ரா ஆர்ச்சர் - குழந்தை முகத்தோடு எதிராளியை பவுன்சரால் குலைக்கும் கில்லர். 140+ வேகத்தில் பறந்துவரும் பந்திடமிருந்து தப்பித்தால் போதும் என பேட்ஸ்மேன்கள் நினைக்கும்போது எங்கிருந்து ரன்கள் குவிப்பது? மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்காக தென்னாபிரிக்க கிரிக்கெட் லீக்கில் 6 போட்டிகளில் பத்து விக்கெட்கள் வீழ்த்தினார். அதற்கடுத்த மாதமே தென்னாபிரிக்காவ்டனான ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்கள் சாய்த்தார். இப்படி முரட்டு ஃபார்மில் களமிறங்கும் ஆர்ச்சர்தான் டெத் ஓவர்களில் மும்பையை காப்பாற்றப்போகும் கனவான்.

Jofra Archer

பவர் ஹிட்டிங் ஃபினிஷர்கள் - டிம் டேவிட், கேமரூன் க்ரீன், டேவால்ட் ப்ரெவிஸ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் என நால்வருமே மிடில் ஆர்டரில் இறங்கி பந்தை பல மைல்களுக்கு ப்றக்கவிடும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் நான்கு பேரில் இருவருக்கு மட்டுமே அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். அது எந்த இருவராய் இருந்தாலும் அவர்களே இந்த சீசனில் மும்பை அணியின் ஃபினிஷர்கள்.

இம்சை அரசர்கள்

பூம் பூம் வெறுமை - பும்ரா என்கிற ஒற்றை மனிதனின் தோளில் ஏறி பல சீசன்களாக பயணித்துவந்திருக்கிறது மும்பை அணி. எவ்வளவு குறைவான ஸ்கோர் என்றாலும் 'கடைசி மூனு ஓவர் வரை கொண்டு போயிட்டா பும்ரா பார்த்துக்குவார்' என நம்பிக்கையாய் களமிறங்குவார்கள் வீரர்கள். அப்பேர்ப்பட்ட திறமை இந்த சீசனில் ஆடவில்லை என்பதே மும்பைக்கு தூக்கத்தை கெடுத்திருக்கும். அனுபவம் வாய்ந்த வேறு இந்திய பவுலர்களும் டீமில் இல்லாததால் அந்த இடத்தில் இன்னொரு வெளிநாட்டு பவுலரையே இறக்கவேண்டும். அதனால் மிடில் ஆர்டரில் மூன்று பேருக்கு பதில் இரண்டு வெளிநாட்டு பவுலர்களே இறங்கமுடியும்.

Rohit Sharma

ஓபனிங் இணை - ஐபி.எல்லில் மும்பைக்கு மட்டுமல்ல அதன் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் மோசமான ஆண்டு கடந்த ஆண்டுதான். வெறும் 268 ரன்கள் 14 போட்டிகளில். இதில் கடந்த ஆறு மாதங்களாக அவர் டி20 போட்டிகளில் ஆடவே இல்லை. அவரின் பார்ட்னரான இஷான் கிஷன் 418 ரன்கள் அடித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் 120.11 தான். பவர்ப்ளேயில் இவர்கள் ரன் எடுக்கத் தவறியதால் மிடில் ஆர்டர் மேல் பிரஷர் ஏறி மொத்த மொத்தமாய் அவுட்டானார்கள். இஷானின் ஃபார்மும் சமீபகாலங்களில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவர்கள் க்ளிக்காகாவிட்டால் கடந்த ஆண்டின் சோகமே தொடரும். ரோஹித்துக்கு ஓய்வு கொடுக்கப்போகிறோம் என நிர்வாகம் சொல்லியிருப்பதால் நிலையான ஓபனிங் அமையாமல் அணி தடுமாறவும் வாய்ப்பிருக்கிறது.

சுழல் மிஸ்ஸிங் - ஸ்பின் டிபார்ட்மென்ட்டில் இந்த சீசனிலேயே வீகாய் இருப்பது மும்பைதான். குமார் கார்த்திகேயா, ஹ்ரித்திக் ஷோகீன் என இரண்டே ஸ்பின்னர்கள். இருவருமே கடந்த முறை கவனம் ஈர்க்கும்படி ஆடவில்லை. பியூஷ் சாவ்லாவை அணியில் எடுத்தாலும் அவரிடம் முன்பிருந்த வீரியம் இல்லை. எனவே சென்னை, டெல்லி, கொல்கத்தா மைதானங்களில் மும்பையின் பாடு திண்டாட்டம்தான்.

தனி ஒருவன்

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் யாரென தெரிந்துகொள்ள வேண்டுமா? ரொம்பவும் சிம்பிள். ஐ.பி.எல் ஏலத்தில் சென்னையும் மும்பையும் எந்த இந்திய வீரருக்காக நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன என கவனியுங்கள். அவர்கள்தான் வருங்காலம். அப்படி கடந்த ஏலத்தில் இரு அணிகளும் முட்டி மோதி இறுதியாய் மும்பை திலக் வர்மாவை தட்டித் தூக்கியது. இரும்பைப் போல நான்காவது இடத்தில் நின்று ஊன்றி ஆடுபவர். விஜய் ஹசாரே தொடரில் சதங்களையும் அரைசதங்களையும் குவித்துவிட்டு ஐ.பி.எல் ஆட வருகிறார். இந்த ஆண்டு நிச்சயம் 400+ ரன்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

துருவங்கள் பதினொன்று

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், டிம் டேவிட், ரமன்தீப் சிங், ஜோஃப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா, ஹ்ரித்திக் ஷோகீன், ஜேசன் பெஹ்ரன்டார்ஃப்

இம்பேக்ட் ப்ளேயர்

இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.

இதன்படி முன்பை இந்தியன்ஸ் அணியின் இம்பாக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

பியூஷ் சாவ்லா - அணிக்கு ஒரு அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர் தேவைப்படும்போது
அர்ஷத் கான் - ஒரு இடதுகை இந்திய வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும்போது
சந்தீப் வாரியர் - அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும்போது
நேஹல் வதேரா - ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன் தேவைப்படும்போது
dewald bravis
டேவால்ட் ப்ரெவிஸ் - அணியில் மூன்று வெளிநாட்டு பிளேயர்களே இருக்கும்பட்சத்தில் எக்ஸ்ட்ரா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாய் இவர் களமிறங்கலாம்.

ஓபனிங் ஜோடியின் ஃபார்ம் அவுட், மிடில் ஆர்டரின் அனுபவமின்மை, சுழல் பந்துவீச்சே இல்லாதது, பும்ரா ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் என எக்கச்சக்க சிக்கல்களில் மாட்டியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. எனவே இந்த சீசனில் யாருக்கும் இந்த அணிமீது பெரிதாய் நம்பிக்கை இல்லை. ஆனால் இப்படியான எதிர்மறை எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிய வரலாறு அந்த அணிக்கு உண்டு. வரலாறு திரும்புமா? பார்க்கலாம்.