#LSGvDC டெல்லியை சல்லி சல்லியா நொறுக்கிய மார்க் வுட்..!

`பின்ன, பெயர்ல தோனினு இருந்து இதைக் கூட செய்யலனா என்ன இளந்தாரிப்பய' என மீசையை நீவினார்கள் சென்னை ரசிகர்கள்.
Mark Wood
Mark WoodVijay Verma

2023 ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. ஐ.பி.எல் என வந்துவிட்டால் அந்நியனாக மாறிவிடும் கே.எல்.ராகுல் லக்னோ அணியையும், டிக்டாக் என வந்துவிட்டால் குழந்தையாகவே மாறிவிடும் டேவிட் வார்னர் டெல்லி அணியையும் தலைமை தாங்கினார்கள். டாஸ் வென்ற டெல்லி அணி, லக்னோ அணியை பேட்டிங் ஆட அழைத்தது. இரண்டு அணிகளும் புது ஜெர்ஸி அணிந்திருந்த மகிழ்ச்சியில், துள்ளி குதித்து கோதாவுக்குள் குதித்தது.

David Warner
David WarnerVijay Verma

டி காக் இன்னும் ஊர் வந்து சேராததால், கெயல் மெயரிடம் ஜோடிபோட்டு ஆட்டத்தை துவங்கினார் கே.எல்.ராகுல். `இப்போ நான் முன்னமாதிரி இல்ல. வேற மாதிரி' என வசனம் பேசிய கலீல் அஹமத் முதல் ஓவரை வீசவந்தார். ரிஷப் பன்ட் அணியில் இல்லாததால், சர்ஃப்ராஸ் கானிடம் கீப்பிங் கிளவுஸைக் கொடுத்திருந்தது டெல்லி அணி. அவரும் ஆண்டுவிழா மேடையில் மாறுவேடம் போட்டு ஏற்றிவிட்ட சிறுவனைப் போல் ஒன்றும் புரியாமல் நின்றுக்கொண்டிருந்தார். கட்டுக்கோப்பாக வீசிய முதல் ஓவரில், ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

முகேஷ் குமார் இரண்டாவது ஓவரை வீசினார். கடைசி இரண்டு பந்துகளையும் டெல்லி வீரர்கள் சொல்லி வைத்தாற்போல் கப்பித்தனமாய் கால்வாய் விட, நான்கு ரன்கள் கிடைத்தது லக்னோவுக்கு. மதியம் நடந்த போட்டியில் மழை பிரச்னை என்றால், இந்த போட்டியில் பூச்சிகள். சில மாதங்களுக்கு முன்பு பறந்துவந்த வெட்டுக்கிளிகளில் சில, இங்கேயே குடிசையைப் போட்டு தங்கிவிட்டதைப் போல் மைதானம் முழுக்க மொய்த்துக் கொண்டிருந்தன.

கலீல் வீசிய மூன்றாவது ஓவரில், முதல் பந்து பேட்ஸ்மேனைத் தாண்டி கீப்பரிடம் சென்றது. அந்தப் பந்தை முதலை வாயைத் திறப்பதைப் போல இரண்டு கைகளையும் மேலும் கீழுமாக வைத்து அமுக்க முயன்று அடாவடி செய்துகொண்டிருந்தார் சர்ஃப்ராஸ். அந்த ஒவரின் நான்காவது பந்தில் நான்கு ரன்கள் கிடைத்தது மெயருக்கு. 4வது ஓவரை வீசவந்தார் சக்காரியா. ஓவரின் 4வது பந்தை, `சக்காரியா, ஓரமா போய் உட்காறியா' என சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ராகுல். பிறகு, துருதிர்ஷ்டவசமாக அவரே அடுத்த பந்தில் அவுட்டாகி பெவிலியனுக்கு சென்று அமைதியாக அமர்ந்துக்கொண்டார். முகேஷ் குமார் வீசிய 5வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

மீண்டும் 6வது ஓவரை வீசவந்தார் சக்காரியா. இடுப்புக்கு கொஞ்சம் உயரத்தில் வீசபட்ட ஸ்லோ பவுன்சரை, சிக்ஸருக்கு செருக முயன்று ஷார்ட் தேர்டு திசையில் அல்வா கேட்ச் ஒன்றை தட்டிவிட்டார் மெயர். கிட்டதட்ட, அந்த பந்தை அடித்த மெயரே பேட்டைக் கீழே போட்டுவிட்டு ஓடிப்போய் கேட்ச் பிடித்துவிடும் அளவிற்கு அவ்வளவு மெதுவாக சென்ற பந்தை, பொத்தென கீழேவிட்டார் கலீல்.

Kyle Mayers
Kyle MayersPTI

வேண்டா வெறுப்பாக நின்று காண்டாமிருகம் ஃபீல்டிங் செய்ததுபோல் சொதப்பிக்கொண்டிருந்தது டெல்லி அணி. அப்போதும், பவர் ப்ளேயின் முடிவில் மொத்தமே 30 ரன்கள் எடுத்து உருட்டிக்கொண்டிருந்தது லக்னோ அணி. பவர்ப்ளே முடிந்ததும்தான் தனது பவர் ப்ளேயையே தொடங்கினார் மெயர். முகேஷ் வீசிய 7வது ஓவரின், 2வது பந்தில் ஒரு சிக்ஸர். ஐந்தாவது பந்தில் இன்னொரு சிக்ஸர். 8வது ஓவர் வீசவந்த அக்‌ஷரை, பவுண்டரியோடு வரவேற்றார் மெயர். அடுத்த பந்து, ஸ்கொயர் லெக்கில் சிக்ஸருக்கு பறந்தது. 5வது பந்து ஓவர் பாயின்ட்டில் இருந்த பவ்வெலிடம் உருண்டுச் சென்றது. இம்முறை பவ்வெல் `காண்டாமிருகம் ஃபீல்டிங்' செய்தார். டெல்லி ரசிகர்கள் காண்டாகி மிருகமானார்கள். 9வது ஓவரில், குல்தீப்பின் பந்தை சிக்ஸருக்கு பார்சல் செய்து தனது அரைசதத்தைக் கொண்டாடினார் மெயர். அறிமுக ஐ.பி.எல் ஆட்டத்திலேயே அரைசதம்! எல்லாப் புகழும் கலீலுக்கே...

10 ஓவரை வீசவந்தார் அக்‌ஷர். அந்த ஓவரிலும் டீப் மிட் விக்கெட், லாங் ஆஃப் திசைகளில் இரண்டு சிக்சர்களை மொய் வைத்தார் மெயர். பத்து ஓவர் முடிவில், 89/1 என லக்னோ எனும் புள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு முளைத்திருந்தது. மைதானத்திலும் பூச்சிகளின் எண்ணிக்கை கூடியிருந்தது. 11வது ஓவரை வீசவந்த குல்தீப்பை சிஸர் அடித்து வருக வருக என வரவேற்றார் மெயர். நாலாபக்கமும் சிக்ஸர்களை அடித்து துவைக்கும் மெயரை விட்டுவிட்டு தேமே என நின்றுக்கொண்டிருந்த ஹூடாவின் விக்கெடைக் கழட்டினார் குல்தீப்.

Axar Patel
Axar Patel Vijay Verma

12வது ஓவரை வீசவந்தார் அக்‌ஷர் படேல். மாதவரத்திலிருந்து ராமாவரத்துக்கு வீசபட்ட பந்து, பிட்சாகி திரும்பி பல்லாவரத்தில் பாய்ந்தது போல, எங்கேயோ குத்தி, எங்கேயோ திரும்பி, ஸ்டெம்பை சாய்த்தது. இந்த மேஜிக் டெலிவரியை மட்டும் அக்‌ஷர் போடாமல் இருந்திருந்தால், மெயர் மைதானத்திலிருந்து இருந்த பூச்சிகள் எல்லாம் பந்து பட்டே பரலோகம் சென்றிருக்கும். அடுத்து ஸ்டாய்னிஸ் உள்ளே வந்தார். அவரும் தன் பங்குக்கு குல்தீப் பந்தில் ஒரு சிக்ஸரை விளாசினார்.

கலீல் வீசிய 15வது ஓவரில், தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார் ஸ்டாய்னிஸ். அடுத்து, பூச்சிகளுக்கு மத்தியில் பூரன் களமிறங்கினார். வந்ததும் வராததுமாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர். 15 ஓவர் முடிவில், 127/4 என ஆட்டத்தின் போக்கே மாறியிருந்தது.

குல்தீப் வீசிய 16வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே. சக்காரியா வீசிய 17வது ஓவரில், பூரன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியும், க்ருனால் பாண்டியா ஒரு சிக்ஸரும் விளாசினார்கள். 18வது ஓவரில் வெறும் 7 ரன் மட்டுமே கொடுத்தார் முகேஷ் குமார். 19வது ஓவரின் முதல் பந்து, எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் அற்புதமான ஒரு சிக்ஸரை விளாசினார் பூரன். பரிபூரனமான ஷாட். கடைசியில், அதே ஓவரின் 3வது பந்தில் ப்ர்திவி ஷாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பதோனி, கலீல் வீசிய அடுத்து பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். `நீங்க வந்த வேலை முடிஞ்சுடுச்சு. இப்போ கிளம்பலாம்' என கலீல் அகமதை அனுப்பிவிட்டு, அமான் கானை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் வார்னர்.

சக்காரிய வீசிய கடைசி ஓவரில் 3 மட்டும் 4வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் பதோனி. `பின்ன, பெயர்ல தோனினு இருந்து இதைக் கூட செய்யலனா என்ன இளந்தாரிப்பய' என மீசையை நீவினார்கள் சென்னை ரசிகர்கள். பாவம், அடுத்த பந்திலேயே அவுட்டாகிவிட்டார். கடைசி பந்தில் குடுகுடுவென ஓடிவந்த கிருஷ்ணப்பா கௌதம், மிட் விக்கெட் திசையில் ஒரு கொடு கொடுத்தார். பந்து சிக்ஸருக்கு பறந்தது. 20 ஓவரின் முடிவில் லக்னோ அணி 193/6 என கம்பீரமான ஸ்கோரை எட்டியிருந்தது.

Ayush Badoni
Ayush Badoni Vijay Verma

`இந்த மேட்ச் சர்ஃராஸுக்கு கம்பேக், ப்ரித்வி ஷாவுக்கு கம்பேக், வார்னருக்கு கம்பேக்' என டெல்லி ரசிகர்கள் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஷாவும் வார்னரும் டெல்லியின் இன்னிங்ஸை துவங்கி வைத்தார்கள். ஏரியா கிரிக்கெட்டில் பேட்டுக்கும், பந்துக்கும் சொந்தக்காரனான சிறுவன் முதல் பேட்டிங்கும் ஆடி முதல் ஓவரும் போடுவதைப் போல, முதல் ஓவர் வீசவந்தார் மெயர். ஓவரின் 3வது பந்து, ஒரு பவுண்டரியை தட்டிவிட்டார் வார்னர். உனத்கட் வீசிய 2வது ஓவரில், 2,4 மற்றும் 6 முறையே இரட்டைப்படை வரிசை பந்துகளை பவுண்டரிக்கு சிதறடித்தார். 3வது ஓவர் வீசவந்தார் கௌதம். முதல் பந்தே பேக்வார்டு ஸ்கொயர் லெக் திசை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஷா. அதே ஓவரில், வார்னரும் ஒரு பவுண்டரியை அள்ளினார். இடையில், வலது கையில் சிறிய காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுக்கச் சென்ற ஆவேஷ் கான், 4வது ஓவரை வீசவந்தார். கடைசி பந்தில் மட்டும் வார்னருக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. 18 பந்துகளில் 26 ரன்கள் என நன்றாகவே ஆடிக்கொண்டிருந்தார் வார்னர்.

5வது ஒவரை வீசவந்தார் மார்க் வுட். 147 கி.மீ வேகத்தில் வந்த பந்து ஷாவின் தடுப்பணையைத் தாண்டி ஸ்டெம்பைத் தட்டி தூக்கியது. `அப்போ இன்னைக்கு சர்ஃப்ராஸ் கம்பேக்டா. வார்னர் கம்பேக்டா' என சோகத்திலும் வேகமாக காலரைத் தூக்கிவிட்டார்கள் டெல்லி அணியினர். அடுத்து பந்திலேயே, அதே 147 கி.மீ வேகத்தில் மிட்செல் மார்ஷின் தடுப்பணையைத் தாண்டி ஸ்டெம்பைத் தூக்கினார் வுட். `குட்' என லக்னோ ரசிகர்கள் அகமகிழ்ந்தார்கள். பவர்ப்ளேயின் முடிவில் 47/2 என தினுசான நிலையில் திமிராக நின்றுக்கொண்டிருந்தது டெல்லி. 7வது ஒவரில், சர்ஃப்ராஸின் விக்கெட்டையும் தூக்கினார் வுட். மார்க் வுட் வீசிய அரைக்குழி பந்தை மட்டையாக மடங்கி மட்டையில் வாங்கி கேட்ச் கொடுத்து, சர்ப்ரைஸான முறையில் அவுட்டானார் சர்ஃப்ராஸ். டெல்லி தத்தளிக்கத் தொடங்கியது. `வார்னர் கம்பேக்' என ஒருபக்க காலரை மட்டும் தூக்கிவிட்டார்கள் டெல்லி ரசிகர்கள்.

Mark wood
Mark woodPTI

பிஷ்னோய் வீசிய 8வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கௌதம் வீசிய 9வது ஒவரிலும் 5 ரன்கள்தான். ரசிகர்கள் தூங்கிவிழத் தொடங்கினார்கள். அவர்களை தட்டி எழுப்புகிற விதமாக, பிஷ்னோய் வீசிய பத்தாவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ரூஸோ. பத்து ஓவர் முடிவில் 75/3 என ஓடிக்கொண்டிருந்தது டெல்லி கேபிடல்ஸ்.

கௌதம் வீசிய 11வது ஓவரில் மீண்டும் 5 ரன்கள். 12வது ஓவரில், ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்த ரூஸோவும் பிஷ்னோயின் சூழலில் வீழ்ந்தார். எதிரணியினர் அப்பீலுக்கு சென்று, அவுட் கிடைக்காததால், டி.ஆர்.எஸ் சென்றார்கள். அதற்குள் ரூஸோவே பெவிலியனுக்கு சென்றுவிட்டார். கடைசியில், மூன்றாம் நடுவரும் அவுட் என தீர்ப்பு வழங்க, டெல்லி ரசிகர்கள் போர்வையை முகத்துக்கு போர்த்திக்கொண்டு படுத்தார்கள்.

அடுத்த இரண்டு ஓவர்களில் பவுண்டரி எதுவும் வரவில்லை. இன்னும் கொடுமையாக, பவ்வெலின் விக்கெட்தான் வந்தது. அப்போதும் அதற்கு பிறகு வந்து அடிவாங்கிச் சென்றார் உனத்கட். ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் வார்னருக்கு. 16வது ஓவரில் அமான் கானை அவுட் செய்தார் ஆவேஷ் கான். டெல்லி ரசிகர்கள் புரண்டு படுத்தார்கள். அதே ஓவரின் கடைசி பந்தில் வார்னரும் அவுட்! 48 பந்துகளில் 56 ரன்கள் என கே.எல்.ராகுல் ஆசைப்படுகிற இன்னிங்ஸை ஆடிவிட்டுச் சென்றார். டெல்லி ரசிகர்கள் சிலர் குறட்டைவிட தொடங்கியிருந்தார்கள். 17வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் கிருஷ்ணப்பா. டெல்லி ரசிகர்களில் தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்டவர்கள் எழுந்து நடக்கத் துவங்கியிருந்தார்கள். 18வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிக்கொண்டிருந்தார் அக்ஸர் படேல். 19வது ஓவரில் வெறும் 8 ரன்கள்.

இனி 6 பந்துகளில் 55 ரன்கள் எடுக்கவேண்டும். டெல்லி ரசிகர்கள் பலர் அவர்களது கனவுகளில், லக்னோவை வீழ்த்திக்கொண்டிருந்தார்கள். மிச்சமிருந்த கொஞ்ச உசுரையும் பிச்சு போட்டு போக வுட் வந்தார். இரண்டு விக்கெட்களை கழட்டினார். 4-0-14-5 என கலக்கினார். டெல்லி வீரர்களுடன் கை கொடுத்துவிட்டு கிளம்பினார். டெல்லி ரசிகர்கள் தூக்கத்திலேயே புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com