RCB
RCB pt desk
T20

கேப்டன் முதல் கோச் வரை.. அனைவரையும் வெளியேற்றுங்கள்! RCB வெற்றிபெற அதுதான் ஒரே வழி! - முன்னாள் வீரர்

Rishan Vengai

17 வருடங்களாக கோப்பையே வெல்லமுடியாமல் தவித்துவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு 2024 ஐபிஎல் தொடரிலும் படுமோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற இரண்டு பெரிய அணிகளுக்கு பிறகு மூன்றாவது பெரிய அணியாக இருக்கும் RCB, 7 போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் நீடிக்கிறது.

சிறந்த பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் அந்த அணியில், பந்துவீச்சாளர்கள் பிரிவு என்பது கவலைக்குரிய விசயமாகவே இருந்துவருகிறது. முகமது சிராஜ் முதல் யாஷ் தயாள் வரை அனைத்து பவுலர்களும் ரிதமை எடுத்துவர முடியாமல் தவித்துவருகின்றனர். சொந்த மைதானத்தில் அனைத்து அணிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி அணி தோல்விகளையே சந்தித்துவருகிறது.

du plessis

நேற்றைய போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர்களை நாலாபுறமும் சிதறடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 287 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச டோட்டலையும், டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச டோட்டலையும் பதிவுசெய்து அசத்தியது. போட்டிக்கு பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ், “எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தங்களால் வெற்றியை பெறமுடியவில்லை” என வருத்தத்தோடு தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த அணியை கலைத்துவிட்டு புதிதாக தொடங்குங்கள்..

ஆர்சிபி அணி படுதோல்விகளை சந்தித்துவரும் நிலையில், தோல்விகுறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி, அடுத்தவருடமாவது ஆர்சிபி கோப்பை வெல்லவேண்டுமென்றால் கேப்டன் முதல் ஸ்டாஃப் வரை ஒட்டுமொத்த அணியையும் கலைத்துவிட்டு புதிய அணியை கட்டமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆர்சிபி அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கும் மனோஜ் திவாரி, “நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப்களுக்கு தகுதிபெற RCB-க்கு வாய்ப்பே இல்லை. அதேபோல அடுத்துவரும் சீசன்களிலும் அவர்கள் தகுதி பெற மாட்டார்கள் என நினைக்கிறேன். ஒருவேளை அவர்கள் தகுதிபெறவேண்டுமானால் அணியை முழுமையாக மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் அந்த இடத்திற்கு செல்லமுடியும். அவர்களுக்கு புதிய வீரர்களும், புதிய பயிற்சியாளர்களிடமிருந்து புத்துணர்வும் தேவை. அதனால் அவர்கள் தற்போதுள்ள பயிற்சியாளர் ஊழியர்கள் முதல் வீரர்கள் வரை அனைத்தையும் மாற்றி சரிசெய்ய வேண்டும்” என்று திவாரி கூறியுள்ளார்.

RCB 2024 Squad

மேலும் அணியின் பந்துவீச்சு குறித்து பேசிய அவர், “ஆர்சிபியில் எதுவும் சரியாக இல்லை. அவர்கள் சரியாக விளையாடாத வீரர்களுக்கு அதிகதொகைக்கு ஏலத்திற்கு சென்றனர், இது ஆரிபியில் என்ன தவறு இருக்கிறது என்பதை காட்டுகிறது. இரண்டு அல்லது மூன்று பேரைத் தவிர சரியான பேட்டர்கள் இல்லை. பந்துவீச்சு பிரிவு பரிதாபமாக உள்ளது. முறையான வழிகாட்டுதல் இல்லாமலேயே டீம் இயங்குகிறது. பகுதி நேர வீரரான வில் ஜாக்ஸ் அவர்களுக்கு பந்துவீசுகிறார். அவர்களின் பிரச்சனைகள் ஏலத்தின் போது தொடங்கி தற்போது மோசமான லீக்கிற்கு வழிவகுத்துள்ளது” என்று மனோஜ் திவாரி கூறினார்.