Kohli and KL.Rahul
Kohli and KL.Rahul pt desk
T20

RCBvsLSG | திரும்பத்திரும்ப தோல்வியா.. RCB Fans எவ்ளோதான் தாங்குவாங்க?!

Rajakannan K

ஐபிஎல் கிரிக்கெட் உலகில் மிகவும் வஞ்சிக்கப்பட்ட ரசிகர்கள் என்றால் ஆர்சிபி அணி ஃபேன்ஸ்தான் அது. அவர்களும் எவ்வளவு தோல்விகளைத்தான் தாங்கிக் கொள்வார்கள்...? அதுவும் நேற்றையப் போட்டியில் 182 ரன்கள் என்பது ஓரளவுக்கு சேஸ் செய்துவிடக் கூடிய ரன்தான். ஆனாலும், சொதப்போ சொதப்பு என்று சொதப்பி விட்டார்கள் ஆர்சிபி வீரர்கள். லக்னோக்கு எதிரான போட்டியில் சின்னசாமி மைதானத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது ஆர்சிபி.

RCB vs LSG

ஆர்.சி.பி. தோல்விக்கு என்ன காரணம்?

ஆர்சிபி அணியின் தோல்விக்கான காரணங்களை முதலில் பார்த்துவிடலாம். ஆர்சிபி அணிக்கு எப்பொழுதுமே தலைவலியாக இருப்பது பந்துவீச்சுதான். முகமது சிராஜ்ஜும், டாப்ளேவும் ரன்களை வாரி வழங்கிவிட்டார்கள். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 13 ரன்கள் கொடுத்துவிட்டார். அடுத்தடுத்த ஓவர்களிலாவது கட்டுப்படுத்துவார் என்று பார்த்தால் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.

டாப்லேவும் தன் பங்கிற்கு 39 ரன்கள் வாரி வழங்கினார். கேமரூன் க்ரீன் இரண்டு ஓவரில் 25, மயங்க் தாகர் 2 ஓவரில் 23 ரன்கள் என பந்துவீசிய 4 பவுலர்கள் ரன்களை வாரிக் கொடுத்தனர். ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் தான் அசத்தி இருந்தார். 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

அதேபோல், 1 விக்கெட் மட்டுமே எடுத்தாலும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் யஷ் தயாள். 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இருந்தது. ஆனால், ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் அதனை கோட்டை விட்டனர்.

அதேபோல், இரண்டு முக்கிய கேட்சுகளை ஆர்சிபி வீரர்கள் கோட்டை விட்டனர். டி காக் தூக்கி அடித்த பந்தினை மேக்ஸ்வெல் பிடிக்காமல் கோட்டை விட்டார். கொஞ்சம் கடினம் என்றாலும் அதுபோன்று பல கேட்சுகளை பிடித்திருக்கிறார் மேக்ஸ்வெல். ஆனால் அவர் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி 80 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டார் டி காக். அதேபோல், பூரானும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால், 181 ரன்களை குவித்து விட்டது லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி.

LSG

பேட்டிங்கிலும் சொதப்பல்...

பந்துவீச்சு, பீல்டிங்தான் இப்படி என்றால் பேட்டிங் அதற்குமேல் மோசம். பெங்களூர் அணி பெரும்பாலும் விராட் கோலியை நம்பி இருப்பது இந்தப் போட்டியில் அப்பட்டமாக தெரிந்தது. விராட் கோலி தொடக்கத்திலேயே ஆட்டமிழக்க, அடுத்தடுத்து டூப்ளசிஸ், மேக்ஸ்வெல், க்ரீன் என வரிசையாக நடையை கட்டிவிட்டார்கள். விராட் கோலியும், டூப்ளசிஸும் பவர் ப்ளேவில் சற்று நேரம் இருந்தாலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க அவர்களும் தவறிவிட்டார்கள்.

ஆட்டம் இழந்துவிடக்கூடாது என்ற பயத்துடன் அவர்கள் ஆடியது நன்றாகவே தெரிந்தது. விராட் கோலியின் பலவீனத்தை நன்றாக உணர்ந்த லக்னோ அணி லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னரை பவர்பிளேவிலேயே கொண்டு வந்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. விராட் கோலியும் கேட்ச் ஆகி நடையைக் கட்டிவிட்டார். அனுஜ் ராவத் பந்துகளை வீணடித்து 11 ரன்னில் நடையைக் கட்டினார்.

கைகொடுத்த லோம்ரோர்... ஏமாற்றிய தினேஷ் கார்த்திக்!

கிட்டதட்ட 6 விக்கெட்டுகள் பறிபோன பின்னரும் லோம்ரோரின் அதிரடி ஆர்சிபி அணிக்கு உயிர் கொடுத்தது. அவரது அதிரடியால் 4 ஓவரில் 59 ரன்கள் என்ற ஓரளவுக்கு சாதகமான சூழல் இருந்தது. ஆனால், முக்கியமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு ஒரு போட்டியில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியால் ஒரு வெற்றியை சாத்தியப்படுத்தினார். இந்தப் போட்டியிலும் அது தொடரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் தவறவிட்டுவிட்டார்.

லோம்ரோர் அடித்த 33 ரன்கள்தான் ஆர்.சி.பி அணியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன். அந்த அளவில்தான் பெங்களூரு அணியின் பேட்டிங் இருந்தது. மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அதிக விலைக்கு வாங்கப்பட்ட கேமரூன் க்ரீனும் பெரிய அளவில் பங்களிப்பு செலுத்தாமலே இருக்கிறார். இவையெல்லாம் பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டது.

Virat Kohli
இனி லக்னோ அணியின் வெற்றிக்கான காரணங்களை பார்க்கலாம்.

லக்னோ அணியின் வெற்றிக்கு காரணம் என்ன?

லக்னோ அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் குயிண்டன் டி காக்கின் 81 ரன்களும், கடைசி நேரத்தில் நிக்கோலஸ் பூரன் விளாசிய 40 ரன்களும் முக்கிய காரணங்களாக அமைந்தன. பூரான் 5 சிக்ஸர்களை கடைசி நேரத்தில் பறக்கவிட்டார். அதில் ஒரு சிக்ஸர் மைதானத்தில் மேற்கூரைக்கு வெளியேயே சென்றுவிட்டது. பூரான் அதிரடியால்தான் 180 ரன்களை லக்னோ அணியால் கடக்க முடிந்தது.

என்னதான் பேட்டிங்கில் டி காக், பூரான் அசத்தி இருந்தாலும் லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது மயங்க் யாதவின் பந்துவீச்சுதான். போடுகிற பந்தையெல்லாம் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு வீசி பெங்களூரு வீரர்களை மிரட்டிவிட்டார்.

அசத்திய மயங்க் யாதவ்... ஜொலித்த மணிமாறன் சித்தார்த்!

மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், ரஜத் பட்டிதார் ஆகிய 3 முக்கிய வீரர்களின் விக்கெட்டை சாய்த்தார். கேமரூன் க்ரீனை அவர் போல்ட் ஆக்கிய விதம் எல்லாம் தனி ரகம். 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்திவிட்டார் மயங்க் யாதவ். நிச்சயம் மயங்க் யாதவ் அடுத்தடுத்த உயரத்திற்கு செல்வார்.

அதேபோல், தமிழ்நாட்டு வீரர் மணிமாறன் சித்தார்த் சிறப்பாக பந்துவீசி பவர் பிளேவில் ரன்களை கட்டுப்படுத்தியதோடு, விராட் கோலி விக்கெட்டையும் சாய்த்தார். பந்துவீச்சில் இவர்கள் இருவரும் லக்னோ அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்கள். டூப்பிளசிஸை பூரன் ரன் அவுட் ஆக்கியதும் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில் ஒரு டீம் ஆக சிறப்பாக விளையாடி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது லக்னோ அணி.

ஆர்சிபி 4 போட்டியில் விளையாடி மூன்றாவது தோல்வியை பதிவு செய்து கடைசி இடத்தில் மும்பை அணியுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. லக்னோ அணி தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.