KKR team
KKR team  KKR twitter page
T20

KKR IPL 2023 Preview | எப்படி இருந்த டீம் தெரியுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..?

Nithish

'நீங்க எல்லாம் அவரை ரொம்ப அசால்ட்டா நினைச்சுட்டு இருக்கீங்க. அவரெல்லாம் ஒருகாலத்துல எப்படி இருந்தாரு தெரியுமா?' என்ற மெட்ராஸ் பட ஜானி வசனம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகவும் பொருந்தும். ஐ.பி.எல்லின் முதல் ஆட்டத்தை மிகப் பிரமாண்டமாக தொடங்கி வைத்து அதன் பின் கம்பீர் தலைமையில் இரண்டு கோப்பைகள் அடித்து, அதற்கு அடுத்தடுத்த சீசன்களில் ஊர்த்திருவிழா ராட்டினம் போல ஏறி இறங்கி, ஏகப்பட்ட டிராமா. ஷாருக்கே பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹிட் கொடுத்துவிட்டார், ஆனால் அவரின் அணியோ எட்டு ஆண்டுகளாய் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதோ இந்த சீசனிலும் ஏல டேபிளில் சுமாரான அணியை எடுத்துப்போட்டு அதிலும் சிலரை காயத்துக்கு பறிகொடுத்திருக்கிறது. படையப்பா ரஜினி போல இந்த தடைக்கற்களை எல்லாம் உடைத்து ஒரே சீசனில் வரலாற்றை மாற்றி எழுதுமா நிதிஷ் ராணா தலைமையிலான இந்த அணி?

வாரணம் ஆயிரம் :

போன மாதம்வரை அணிக்கு மிகப்பெரிய பலமாய் இருந்தது ஸ்ரேயாஸ் ஐயர். உலகளவில் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுள் ஒருவர். கடந்த சீசனில் கொல்கத்தாவை ஏகப்பட்ட சந்தர்ப்பங்களில் கரை சேர்த்தவர் அவர்தான். 14 ஆட்டங்களில் 401 ரன்கள். அவரின் காயம் தொடர்பாக தெளிவான தகவல்கள் வெளிவராத நிலையில் முதல் பாதி தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம். ஒருவேளை சீசனின் இரண்டாம் பாதியில் அவர் விளையாடத் தொடங்கினால் அதுவே அணி வீரர்களுக்கு யானை பலத்தைக் கொடுக்கும்.

பொதுவாய் கிரிக்கெட் வீரர்கள் இரண்டு வகை. தொடக்க காலத்தில் அதிரடியாய் பெர்ஃபார்ம் செய்துவிட்டு கரியரின் கடைசியில் ஃபார்ம் இழந்து வெளியேறுவார்கள். மற்றொருவகை கரியரின் தொடக்கத்தில் ஓரளவிற்கு ஆடி வயதாகி அனுபவம் ஏற ஏற மிளிர்வார்கள். சுனில் நரைன் இதில் இரண்டாவது வகை. திறக்கப்படாத ஒயினைப் போல நாளாக நாளாக நம்மை அசரடிக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரின் டி20 எகானமி ரேட் வெறும் 5.99 தான். அவரின் ஃபார்ம் அணிக்கு பெரும்பலம்.

Sunil Narine

ஏல டேபிளில் சொதப்பிய கேகேஆர் அணி நிர்வாகம் அதற்கு முந்தைய டிரேடிங்கில் சில மாஸான முடிவுகளை எடுத்தது. முதலாவது லார்ட் ஷர்துல் தாக்கூரை வாங்கியது. மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ஆடி ஸ்ட்ரைக்கை கைமாற்றிவிட நினைக்கும் நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி பேட்டிங் அணிக்கு பிரஷரை உண்டாக்கும் கில்லாடி. பேட்டிங்கிலும் முன்னேற்றம் தெரிவதால் அணியின் மிக முக்கிய அங்கம். அடுத்தது பெர்குசன். கொல்கத்தாவின் ஆஸ்தான பவுலர். அவருக்கும் பிட்னஸ் பிரச்னை இருப்பதால் தொடரிலிருந்து வெளியேறலாம் எனத் தகவல்கள் வெளியாகின. அது நிஜமெனில் அவரின் வேகத்தை அணி நிச்சயம் மிஸ் செய்யும்.

சந்திரகாந்த் பண்டிட். முதல்தர கிரிக்கெட்டில் கோச்சாக பெரும் மதிப்பையும் மரியாதையையும் சம்பாதித்து வைத்திருக்கும் இவர்தான் இந்த ஆண்டு கேகேஆர் அணியின் பயிற்சியாளர். ரஞ்சிக் கோப்பையில் ஆறு முறை பயிற்சியாளராக தான் சார்ந்த அணிகளுக்கு கோப்பை பெற்றுத்தந்த இவரின் புத்திகூர்மையை பெரிதும் நம்புகிறது அணி நிர்வாகம். முந்தைய சீசன்களில் ப்ளேயிங் லெவனை தேர்வு செய்வது, எந்தெந்த பவுலர்களை எப்போது பயன்படுத்துவது ஆகியவற்றோடு களத்தில் பயிற்சியாளரின் வேலை முடிந்துவிடும். இந்த முறை இம்பேக்ட் ப்ளேயர் முறை அமலுக்கு வருவதால் பயிற்சியாளர்களின் பங்கு இன்னும் அதிகமாகிறது.

இவர்கள்தான் கொல்கத்தா அணிக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுப்பவர்கள்.

இம்சை அரசர்கள்

நிதிஷ் ராணாவின் கேப்டன்சி. சையது முஷ்டாக் அலி தொடர் உள்பட கணிசமான போட்டிகளில் கேப்டனாய் இருந்து அதில் சொல்லிக்கொள்ளும்படி வெற்றிகளும் பெற்றிருக்கிறார்தான். கொல்கத்தா அணியும் அவருக்கு நன்கு பரிச்சயம். ஆனால் ஐ.பி.எல்லில் ஆட்டத்தின் தன்மை சட்சட்டென மாறிக்கொண்டே இருக்கும். தோனி, ரோஹித், பாண்ட்யா போன்ற ஸ்ட்ரீட் ஸ்மார்ட் கேப்டன்கள் முன்னே இவரின் ஆளுமை எடுபடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Nitish Rana Rinku Singh

மும்பைக்கு பொல்லார்ட் எப்படியோ அப்படி கொல்கத்தாவிற்கு ரஸல். 9 விக்கெட்களே விழுந்துவிட்டாலும் பேட் பிடிப்பது ரஸலாய் இருந்தால் எதிரணிக்குத்தான் தோல்விபயம் இருக்கும். அப்பேர்ப்பட்டவர் சமீப காலமாக மிகச்சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். கடந்த பத்து டி20 போட்டிகளில் வெறும் 203 ரன்கள். ஸ்ரேயாஸ் இல்லாத நிலையில் இவரின் பேட்டிங் ஃபார்மும் மோசமாக இருந்தால் அணி தாக்குப்பிடிப்பது மிகச்சிரமம். போக இவரைவிட்டால் பவர் ஹிட்டர்கள் என்றும் யாருமில்லை. டெத் ஓவரில் பந்துவீசுவதும் இவர் பொறுப்பில் இருப்பதால் இவருக்குக் காயம்படாமல் கண்ணும்கருத்துமாய் பார்த்துக்கொள்ளும் கொல்கத்தா நிர்வாகம்.

Russell

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளைத் தாங்கியபடி இந்திய அணிவரை சென்ற வெங்கடேஷ் ஐயர் போனவேகத்தில் திரும்பிவந்துவிட்டார். உள்ளூர் போட்டிகளிலும் மோசமாகவே ஆடிவருவதால் அவரை நம்பியிருக்கும் கேகேஆரின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. வருண் சக்ரவர்த்திக்கு இது மிகவும் முக்கியமான சீசன். பிட்னஸ் சிக்கல், ஃபார்ம்மில் இல்லாதது என அவரின் சமீபத்திய எஸ்.டி.டி சுத்தமாய் அவருக்கு சாதகமாக இல்லை. இந்த சீசனும் அவர் மோசமாக விளையாடும்பட்சத்தில் அடுத்த ஆண்டு ரீடெயின் செய்யப்படாமல் போக வாய்ப்புகள் அதிகம்.

நிதிஷ் ராணா, ரிங்கு சிங், மந்திப், ஜெகதீசன் என நான்கே இந்திய பேட்ஸ்மேன்கள்தான் அணியில். பேக்கப்பிற்குக் கூட பெஞ்ச்சில் ஆளில்லை.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என சொல்லுமளவிற்கு பவுலர்களிலும் யாருமில்லை.

தனி ஒருவன் :

லிஸ்ட்டில் முதல் ஆள் நாராயணன் ஜெகதீசன். முரட்டு ஃபார்மில் இருக்கிறார். ஓபனிங் ஆடுவார், கொல்கத்தாவிற்கு தேவையான கீப்பரும்கூட என்பதால் அணியில் நிச்சயம் இடமுண்டு. சென்னை தராத வாய்ப்புகளை கொல்கத்தா அணி கொடுத்தால் சோபிப்பார்.

Jagadeesan Sam Curran

டேவிட் வைஸ் -டி20யில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற ஆல்ரவுண்டர். கிட்டத்தட்ட ரஸல் டெம்ப்ளேட் என்பதால் அவரோடு பினிஷராக இறங்க வாய்ப்புகள் அதிகம். ஏழாண்டுகள் கழித்து மீண்டும் ஐ.பி.எல்லில் பங்கேற்கிறார், எனவே இந்திய பிட்ச்களை எப்படி எதிர்கொள்வார் என்பதைக் காண ஆர்வமாய் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

david wiese

சுயாஷ் சர்மா - கொல்கத்தா கண்டெடுத்த மற்றுமொரு 'மிஸ்ட்ரி ஸ்பின்னர் முத்து. வருண் சக்ரவர்த்தி எதிர்பார்த்ததைப் போல பங்களிக்க முடியாவிட்டால், அவரின் இடத்தை சுயாஷ்ஷை வைத்து நிரப்பிவிடும் அணி நிர்வாகம்.

துருவங்கள் பதினொன்று :

வெங்கடேஷ் ஐயர், ஜெகதீசன், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், டேவிட் வைஸ், ரஸல், நரைன், ஷர்துல் தாக்கூர், ஃபெர்குசன், வருண் சக்ரவர்த்தி, உமேஷ் யாதவ்.

இம்பேக்ட் பிளேயர்கள் :

இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.

இதன்படி கொல்கத்தா அணியின் இம்பாக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

மந்தீப் சிங் (டாப் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேன் எக்ஸ்ட்ரா தேவைப்பட்டால்)
ரஹ்மனுல்லா குர்பாஸ் (ஓபனிங் இறங்க ஆள் தேவைப்படும்போது)
Gurbaz
சுயாஷ் சர்மா (ஒருவேளை சென்னை போன்ற பிட்ச்களில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவைப்பட்டால்)
அன்குல் ராய் (ஒரு இந்திய ஆல்ரவுண்டர் தேவைப்படும்போது)
வைபவ் அரோரா (ஒரு பக்கா வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும்போது)

ப்ளே ஆப் கட்டாயம் போவார்கள் என யாரும் துணிந்து சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒரு அணியைக் கொண்டுள்ளது கே.கே.ஆர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை இடர்களையும் தாண்டி ஒருவேளை இவர்கள் வெற்றிக்கோட்டை தொட்டால் அது நிச்சயம் ஒரு மெடிக்கல் மிராக்கிள் தான். அடுத்த மாதம் இதே நேரம் முடிவு தெரிந்திருக்கும்., பார்க்கலாம்!