GTvCSK | IPL 2023 : சிஎஸ்கே அணி தோல்வியும், குஜராத் அணி வெற்றியும்- முழு அலசல்!

போன சீசனில் இரண்டு மேட்சிலும் குஜராத்திடம் குத்து வாங்கிவிட்டு சத்தம் காட்டாமல் போன சென்னை சிங்கங்கள், கட்டாயமாக இம்முறை பதில் குத்து உண்டென கர்ஜிக்க, டாஸ் ஜெயித்து ‘ஆவா தே’ என சென்னையை பேட்டிங் ஆட அழைத்தார்கள் குஜராத் டைட்டன்கள்.
GT celebrations
GT celebrationsPTI Photo/Kunal Patil

நவரசமும் களத்தில் கதகளி ஆடும் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி, நேற்று சீரும் சிறப்புமாய், செம்மையும் செமத்தியாய் அகமதாபாத் மைதானத்தில் அரங்கேறியது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. புது இம்பாக்ட் வீரர்கள் விதி, டி.ஆர்.எஸ்ஸில் புதிய சலுகைகள், புதிய வீரர்களின் வருகை என புத்தம் புனிதாவான பல அம்சங்கள் இம்முறை. போன சீசனில் இரண்டு மேட்சிலும் குஜராத்திடம் குத்து வாங்கிவிட்டு சத்தம் காட்டாமல் போன சென்னை சிங்கங்கள், கட்டாயமாக இம்முறை பதில் குத்து உண்டென கர்ஜிக்க, டாஸ் ஜெயித்து ‘ஆவா தே’ என சென்னையை பேட்டிங் ஆட அழைத்தார்கள் குஜராத் டைட்டன்கள்.

Hardik Dhoni
Hardik DhoniGujarat Titans IPL page

கான்வேயும், ருத்துராஜும் மட்டையையே துவக்கையாக தூக்கிக்கொண்டு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, பதிலுக்கு பந்தையே அணுகுண்டைப் போல் வீசத் துவங்கினார் முகமது ஷமி. ஷீம் பவுலிங்கில் தானொரு சீமராஜா என்பதை முதல் ஓவரிலேயே நிரூபித்தவர், முதல் ஓவரில் இரண்டே ரன்களை மட்டும் கிள்ளி கொடுத்தார். அதிலும் ஒரு ரன் லெக் பைஸில் வந்தது. இரண்டாவது ஓவரை வீசவந்தார் கேப்டன் பாண்டியா. வந்தவருக்கு வணக்கம் வைத்துவிட்டு வங்கென மிட்-ஆன் திசையில் ஒரு சாத்து சாத்தினார் ருதுராஜ். முதல் பந்தே பவுண்டரியை நோக்கி ஓடியது. பந்தைப் பிடிக்க ஓடுகிறார் என நினைத்தால், பந்துடன் ஓட்டப்பந்தயம் ஓடுவதைப் போல் ஓடிய தயாளைப் பார்த்து பாண்டியாவே அரண்டு போனார். இன்னிங்ஸின் முதல் பவுண்டரி கிடைத்தது. அடுத்து, அதே ஓவரின் மூன்றாவது பந்தில் கவர் திசையில் இருந்த கேப்பில் ஒரு கீறு கீறினார் ருத்து. இன்னொரு பவுண்டரி!

இரண்டு பவுண்டரி மூன்று சிங்கிள்கள் என 11 ரன்கள் இந்த ஓவரில், ஹர்திக் பாண்டியா தன் நெற்றியில் அணிந்திருந்த பேண்ட்தான் அத்தனைக்கும் காரணம். அது அசோக் டின்டாவின் மரகத நாணயம். அதனால்தான் ரன்களை வாரி வழங்குகிறார் என தலையில் கை வைத்தார்கள் டைட்டன் ரசிகர்கள். மூன்றாவது ஓவரை வீச வந்தார் ஷமி. முதல் பந்தில், சமத்தாக ஒரு சிங்கிளைத் தட்டி விட்டு அந்தப் பக்கம் சென்றுவிட்டார் ருத்து. அடுத்த பந்திலேயே, கான்வேவுக்கு பெட்ரோல் கன்வேயன்ஸ் கொடுத்து பெவிலியனுக்கே அனுப்பிவைத்தார் ஷமி. டிரைவ் ஆடுகிறேன் என கான்வே மொத்தமாக பந்தை தவறவிட, இரண்டு ஸ்டெம்புகள் தெறித்தது. இது ஐ.பி.எல் தொடர்களில் ஷமி வீழ்த்திய 100வது விக்கெட். அடுத்த பேட்ஸ்மேனாக மொயின் அலி உள்ளே வந்தார். ‘அடிக்கச் சென்றால்தானே அவுட் ஆவோம். இப்போது பாரடா எனது ராஜதந்திரத்தை’ என நான்கு பந்துகளையும் லட்டுகளைப் போல் தின்று முடித்தார் மொயின் அலி. பொறுமையே பெருமை என அமைதியாக அமர்ந்திருந்தார்கள் சென்னை ரசிகர்கள்.

Devon Conway shami
Devon Conway shamiPTI

தான் வீசிய முதல் ஓவரில் வாங்கி உண்டைக்கட்டிகளே இன்னும் உண்டு முடிக்காத காரணத்தினால், ஜோஷ்வா லிட்டிலை பந்து வீசுமாறு பணித்தார் பாண்டியா. லிட்டில் வீசிய முதல் பந்தில், பெரிய சிக்ஸ் ஒன்றை ஏவினார் ராக்கெட் ருத்து. லெக் ஸ்டெம்புக்கு நேராக வந்த அரைக்குழி பந்தை, அசால்டாக ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பறக்கவிட்டார். அடுத்த பந்தில், ஒரு பவுண்டரி வேறு. இம்முறை ஆஃப் திசையில் வீசப்பட்ட பந்து. பாயின்ட் திசையை நோக்கி அறைந்தார். ஓவரின் ஐந்தாவது திசையில், மொயின் அலியும் ஒரு பவுண்டரியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். இடதுகை ஆட்ட வீரனான தனக்கு ஆஃப் திசையில் வீசப்பட்ட பந்தை, அதே பாயின்ட் திசையில் வெட்டினார் மொயின். அயர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த லிட்டிலை, செட்டிலாக விடாமல் சிதைத்து அனுப்பியது சி.எஸ்.கே.

மீண்டும் வந்தார் ஷமி. மீண்டும் ஒரு சிங்கிளைத் தட்டிவிட்டு பாதுகாப்பானார் ருத்து. ‘இருடி நீ மாட்டாமலா போயிடுவே’ என நினைத்துக்கொண்ட ஷமி, கடைசியில் மொயினிடம் மாட்டிக்கொண்டார். மூன்றாவது பந்தில், மிட் ஆஃப் திசையில் ஒரு அட்டகாசமான பவுண்டரியை விரட்டினார் மொயின். அடுத்து பந்து, பீமராகிப் போக ஃப்ரீ ஹிட் கிடைத்தது. கிட்டதட்ட யார்க்கரில் விழுந்த பந்தை, லாங் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு அனுப்பிவைத்தார். குஜராத் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. அடுத்த பந்து இடுப்பு உயரத்திற்கு எழும்பி வர, மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு தள்ளிவிட்டார் மொயின். முதல் இரண்டு ஒவர்களையும் சேர்த்து இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த ஷமி, இந்த ஒரு ஓவரில் மட்டும் 17 ரன்களை அள்ளிக் கொடுத்தார்.

முகமது ஷமி,
முகமது ஷமி,IPL Page

சர்வதேச போட்டிகளில், தொடர்ந்து 106 பந்துகள் பவுண்டரியே கொடுக்காமல் வீசிய ஆஃப்கன் சுழல் ரஷீத் கானை, ரன் ரேட்டை கட்டுப்படுத்த பவர் ப்ளேயின் கடைசியில் களமிறக்கினார் பாண்டியா. வீசிய முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு கேட்டு கையைத் தூக்கினார் ரஷீத். ஆனால், பந்து மொயின் அலியின் க்ளவில் உரசியிருந்ததால் அவுட் தரவில்லை. மீண்டும் மூன்றாவது பந்தில், எல்.பி.டபிள்யூ கேட்டு அம்பயரிடம் முறையிட்டார் ரஷீத். இம்முறை பேடில் மட்டுமே பந்து பட்டிருக்க, கையைத் தூக்கினார் நடுவர். மொயின் அலியோ தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய, பந்து அவுட்சைடு லெக் பிட் ஆன உண்மை வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரியவந்தது. எனவே, மொயின் அலிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுதினார் நடுவர். ரஷீத்தின் சுழலில் அங்குமிங்கும் திரும்பிக் கொண்டிருந்த பந்தைப் பார்த்த கடுப்பான மொயின், இறங்கிவந்து சொய்ங் என ஒரு விளாசு விளாசினார்.

ரஷீத் கான்,
ரஷீத் கான்,IPL Page

ரஷீத்தின் தலைக்கு மேல் பறந்த பந்து, பவுண்டரி லைனைத் தாண்டி ஓடியது. நீங்க மொயின் அலி இல்ல, மொயின் புலி என சென்னை ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருக்க, அடுத்த பந்தே சாஹாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் புலி. அடுத்ததாக, ஏலத்தில் பதினாறு கோடி பெற்று பெருவாழ்வு வாழும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். பவர்ப்ளேயின் முடிவில், 51/2 என நல்லதொரு நிலைமையில் இருந்தது சி.எஸ்.கே!

ஏழாவது ஓவரை வீச, மீண்டும் வந்தார் கேப்டன் பாண்டியா. ஓவரின் மூன்றாவது பந்து, 141 கி.மீ வேகத்தில் பாய்ந்து வந்தது. ஆஃப் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட ருத்துராஜ், அடுத்த பந்தையும் மிட் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு கெத்துராஜ் ஆனார். இந்த ஓவரில் 13 ரன்களை பாண்டிய விட்டுக்கொடுக்க, ‘அய்யா... அசோக் டின்டா கெட்டப் நமக்கு வேண்டாம்யா’ என கதற துவங்கினார்கள் டைட்டன்கள்.

மொயின் அலி - ருதுராஜ்,
மொயின் அலி - ருதுராஜ்,IPL Page

அடுத்த ஓவரை வீச ரஷீத் வந்தார். இம்முறை ரஷீத்தின் பொறியில் சிக்கியது ஸ்டோக்ஸ். முந்தைய ஓவரில் மொயின் அலி நம்ப வைத்து ஏமாற்றியதைப் போலவே இம்முறையும், மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரியை தியாகம் செய்துவிட்டு நான்காவது பந்தில் விக்கெட்டை கழட்டினார் ரஷீத். எடுப்பதற்கு சிரமமான லோ கேட்ச்சை லாவகமாக எடுத்தார் சாஹா. பதினாறு கோடி ஸ்டோக்ஸ், பத்து ரன்கள் கூட அடிக்கவில்லை. `அடுத்த ஃப்ளின்டாஃப் போல' என சென்னை ரசிகர்கள் நெஞ்சைப் பிடித்தார்கள். அம்பத்தி ராயுடு களமிறங்கினார்.

ஒன்பதாவது ஓவரை வீச வந்தார் அதிவேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப். ‘அல்ஸாரி, ஐ எம் வெரி ஸாரி’ என அவரையும் வெச்சி செய்தார் ருத்து. ஸ்கொயர் லெக் திசையில் இரண்டு, மிட் விக்கெட் திசையில் ஒன்று என ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்கள். ஓவரின் இரண்டாவது சிக்ஸரோடு, அவரது அரைசதமும் வந்து சேர்ந்தது. ருத்துவின் விக்கெட்டை எப்படியாவது கழட்டிவிடச் சொல்லி, ரஷீத்தின் கையில் பந்தைக் கொடுத்தார் பாண்டியா. ஆனால், ருத்துவும் ராயுடுவும் பந்தை அடித்து ஆடாமல் உருட்டி ஆடி விக்கெட்டை பறிகொடுக்காமல் தப்பித்தார்கள்.

மொயின் அலி,
மொயின் அலி,IPL page
ரஷீத் கான், ஸ்டோக்ஸ்,
ரஷீத் கான், ஸ்டோக்ஸ்,IPL Page

அல்ஸாரி ஜோசப் மீண்டும் அடிவாங்கினால் அழுவது நிச்சயம் என்பதை புரிந்துக்கொண்ட பாண்டியா, ஏற்கனவே அழுதுமுடித்து ஆசுவாசம் அடைந்திருந்த லிட்டிலை அழைத்து பந்து வீச சொன்னார். இம்முறை, ராயுடு சாதா ராயுடு அல்ல, கட்டமராயுடு என நினைத்தால், அவர் கட்டையைப் போடும் ராயுடுவாக லிட்டில் பந்திலேயே தடுமாறிக் கொண்டிருந்தார். அதே ஓவரில் ருத்துவோ, ஸ்கொயர் லெக் திசையில் இன்னொரு சிக்ஸரை பறக்கவிட்டார். 11-வது ஓவர் முடிவில் 100/3 என அட்டகாசமான நிலையிலிருந்தது சி.எஸ்.கே!

ஒருவழியாக, 12-வது ஓவரை வீச யாஷ் தயாளை அழைத்தார் ஹர்திக். ஓவரின் மூன்றாவது பந்தில் மிட் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸரை தூக்கிப்போட்டார் ருத்து. இப்போது, அதைப் பார்த்து ராயுடுக்கும் ஆசை வந்துவிட்டது. ‘எங்கிட்டே அனுப்பி வை. நானும் அடிச்சுக்குறேன்’ என ராயுடு கேட்க, ருத்துவும் ஒரு சிங்கிளைத் தட்டிவிட, ஓவரின் கடைசிப்பந்தை மிட் விக்கெட் திசையில் ஓங்கி ஒரு சிக்ஸரை அடித்தார் ராயுடு. லிட்டில் வீசிய 13வது ஓவரில், ஸ்கொயர் லெக் திசையில் பந்தைத் தூக்கி அடித்தார் ருத்து. அதை தவ்வி குதித்து பிடிக்க முயல்கையில் காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார் கேன் வில்லியம்சன். குதித்தவர் கீழிறங்கும்போது வலது காலை எசகுபிசகாக ஊன்றியதில் உள்காயம் ஏற்பட்டுவிட்டது. உடனே, அவரை மருத்துவர்கள் சிகிச்சைக்கு அழைத்து செல்ல, சுதர்சன் மாற்று வீரராக களமிறங்கினார். ஐ.பி.எல் என்றால் Injury Premiere League என சொல்லுமளவிற்கு ஏற்கனவே ஏகப்பட்ட வீரர்களுக்கு காயம். அந்தப் பட்டியலில் கேன் வில்லியம்சனுடன் சேர்ந்து விடக்கூடாதென ரசிகர்கள் எல்லோரும் பதறிவிட்டார்கள். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில், ஸ்டெம்புகளை சிதறடித்து, ‘ராயுடு, பெவிலியனுக்கு போயிடு’ என அனுப்பிவைத்தார் லிட்டில்.

ருதுராஜ், அம்பத்தி ராயுடு,
ருதுராஜ், அம்பத்தி ராயுடு,IPL Page

டூபே வந்தார். அவர் நேற்றைய போட்டியில் மட்டை வீசிய வேகத்திற்கு, கையில் மட்டைக்கு பதிலாக விசிறியைக் கொடுத்திருந்தால் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தில் குழுமியிருந்த லட்சம் பேரின் முகத்தில் சில்லென காற்று வீசியிருக்கும். அப்படியொரு வீச்சு. டூபே அடிக்க நினைத்து மட்டையை வீசிய போதெல்லாம் சத்தம் வந்ததே ஒழிய, ரன்கள் மட்டுமே வரவே இல்லை. 14-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அல்ஸாரி. ஹர்திக் வீசிய 15-வது ஓவரில், வெறும் 8 ரன்கள். அல்ஸாரி மீண்டும் வீசிய 16-வது ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே. `டூபே தயவு செஞ்சு போப்பே' என கையெடுத்து கதறினார்கள் சென்னை ரசிகர்கள். ஹர்திக் பாண்டியாவோ, டூபேவை மட்டும் அவுட்டாக்கி விட வேண்டாம் தனது அணி பவுலர்களிடம் கையெடுத்து கதறினார்.

17-வது ஓவரை வீசவந்தார் ரஷீத் கான். முதல் பந்தை, லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாசினார் ருத்துராஜ். ஓவருக்கு மூன்று பவுண்டரிகளை விளாசிக் கொண்டிருந்த அணி, கிட்டதட்ட மூன்று ஓவர்களுக்கு பிறகு ஒரு பவுண்டரியை அடித்திருக்கிறது. அத்தனைக்கும் காரணம், க்ரூப்புல டூபே! 18-வது ஓவர் தொடங்கியது. முதல் பந்து, ஃபுல் டாஸாக வீசினார் ஜோசப். டூபே மீது இருந்த மொத்த ஆத்திரத்தையும் பந்தின் மீது காட்டினார் ருத்து. பந்து, பறந்துச் சென்று சுப்மன் கில் கையில் விழுந்தது. ஹை ஃபுல் டாஸ் பந்தாக இருக்குமோ எனும் சந்தேகத்தில், நடுவர்கள் மூன்றாவது நடுவரின் உதவியை நாட, அவர் பந்தில் குறையொன்றுமில்லை என சொல்லிவிட்டார். 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 92 ரன்களை அதிரடியாக விளாசிய ருத்துவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

சுப்மன் கில்,
சுப்மன் கில்,IPL Page

ஜடேஜா களமிறங்கினார். அவரும் அதே ஓவரின் நான்காவது பந்தில் அவுட். டீப் மிட் விக்கெட் திசையில் நின்றுக்கொண்டிருந்த விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி நடையைக் கட்டினார். இப்போது, அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம். தல தோனி களத்திற்குள் வந்தார். அந்த ஒவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி, 4 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் ஜோசப். இன்னிங்ஸின் 19வது ஓவரை வீசவந்தார் ஷமி. டூபேவுக்கு நேற்றைய மேட்ச் முழுக்க, அரைக்குழி பந்துகளாகப் போட்டு அவரை அடிக்கவிடாமல் தொண்டைக்குழியை வற்றச் செய்தார்கள். ஷமியும் முதல் பந்தே, ஒரு அரைக்குழி பந்தைப் போட, நூழிலையில் அவுட் ஆகாமல் தப்பித்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த தோனி, டூபேவை நோக்கி ஏதோ கத்த, அடுத்து வீசப்பட்ட அரைக்குழி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். டூபேவுக்கு கோபம் வந்துடுச்சு என சென்னை ரசிகர்கள் உற்சாகமாக, அடுத்த வீசப்பட்ட இன்னொரு அரைக்குழி பந்தில் கேட்ச் கொடுத்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டார்.

தோனி,
தோனி,IPL Page

லிட்டில் கடைசி ஓவரை வீசவந்தார். ஓவரின் மூன்றாவது பந்து. ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸரை விருந்து வைத்தார் தல தோனி. அடுத்த பந்திலேயே மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியும். 200 ரன்களை எளிதாக எட்டிவிடலாம் என நினைத்திருந்தவர்கள், 180 ரன்கள் கூட எட்ட முடியாமல் 178 ரன்கள் என இன்னிங்ஸை முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு இன்னிங்ஸைத் துவங்க மைதானத்திற்குள் வலதுகாலை எடுத்து வைத்தார்கள் சஹாவும், கில்லும். ஐ.பி.எல் வரலாற்றின் முதல் இம்பாக்ட் ப்ளேயராக ராயுடுவுக்கு பதிலாக உள்ளே வந்தார் துஷார் தேஷ்பாண்டே. தொன்றுதொட்டு தொடரும் பாரம்பரியமாக தீபக் சஹார் முதல் ஓவரை வீச வந்தார். கட்டுக்கோப்பாக வீசப்பட்ட ஓவரில் பந்து, இருபக்கங்களிலும் ஸ்விங்காக 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது டைட்டன்ஸ் அணிக்கு. அடுத்த ஓவரை வீசவந்தார் தேஷ்பாண்டே. முதல் பந்தே, லீடிங் எட்ஜாகி டீப் தேர்டில் ஒரு சிக்ஸர். `பரவால்ல, எட்ஜ் ஆகிதானே சிக்ஸ் போச்சு' என சமாதனம் ஆனார்கள் சென்னை ரசிகர்கள். அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி. மிட் விக்கெட் திசையில் விரட்டிவிட்டார் சாஹா. `பரவால்ல, புது பவுலர்தானே' என சமாதனம் ஆனார்கள் சென்னை ரசிகர்கள். ஓவரின் ஐந்தாவது பந்தில் தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை அடித்தார் கில். `பரவால்ல, ஃபார்ம்ல உள்ள பேட்ஸ்மேன். ஒரு பவுண்டரி கூட அடிக்கலைன்னா எப்படி' என சமாதனம் ஆனார்கள் சென்னை ரசிகர்கள். இந்த ஒரு ஓவரில் மட்டும் 15 ரன்கள்.

சாஹா,
சாஹா,IPL Page

மீண்டும் பந்து வீச வந்தார் சஹார். முதல் நான்கு பந்துகளிலும் ஓடி ஓடி ஒவ்வொரு ரன்களாக சேர்த்தார்கள். ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு தூக்கி சொருகினார் சாஹா. 4-வது ஓவரை வீச வந்தார் அறிமுக வீரர் ஹங்கர்கேக்கர். முதல் பந்தே தரமான யார்க்கர். இரண்டாவது பந்து நோ பால், மூன்றாவதாக வீசப்பட்ட ஃப்ரீ ஹிட் பந்து ஓர் அகலப்பந்து, நான்காவதாக வீசப்பட்ட ஓவரின் இரண்டாவது பந்து பவுண்டரிக்கு பறந்தது, ஓவரின் ஐந்தாவது பந்து விக்கெட் என சகலமும் நடந்தது இந்த ஓவரில். ஹங்கர்கேக்கர் வீசிய அவுட்ஸ்விங் பந்தை அடிக்கப்போய், அது திக் எட்ஜாகி டீப் எட்ஜில் இருந்த டூபேவின் கைகளில் சிக்கியது. கேன் வில்லியம்சனுக்கு காயம் குணமாகாத காரணத்தினால், சாய் சுதர்சன் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். முதல் பந்தே ஸ்கொயர் லெக்கில் ஓர் பவுண்டரி. அட்டகாசமான தொடக்கம்.

ஏழாவது ஓவரை வீசவந்தார் ஜட்டு. வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மீண்டும் அடுத்த ஓவரை வீசவந்தார் சான்ட்னர். இந்த ஓவரிலும், சுதர்சன் கில் இருவரும் தலா ஒரு பவுண்டரியை விரட்டினார்கள். ஒன்பதாவது ஓவரில், ஜடேஜா மீண்டும் பவுண்டரி ஏதும் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். முத்தாய்ப்பாக, பத்தாவது ஓவரில் ஹங்கர்கேக்கர் சாய் சுதர்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். கிட்டதட்ட அகலப்பந்தாக போன பந்தை விரட்டி அடிக்க முயன்று கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். கேப்டன், ஹர்திக் களத்துக்குள் வந்தார்.

மீண்டும் வந்தார் தேஷ்பாண்டே. முதல் பந்தை பாயின்ட்டுக்கும் கவருக்கும் நடுவே நச்சென அடித்தார் கில். பந்து பவுண்டரிக்கு உருண்டோடியது. இம்முறை சமாதனம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல், அமைதியாக இருந்தனர் சென்னை ரசிகர்கள். ஓவரின் மூன்றாவது பந்து, நோ பால். ஃப்ரீ ஹிட்டில் ஒரு சிக்ஸரை தூக்கி சொருகினார் கில். `இம்பாக்ட் ப்ளேயர்னா எதிர் டீமுக்கு ஆடி கொடுக்குறதா' என ரசிகர்களே குழம்பும் அளவிற்கு விதிமுறைகளோடு வீம்பாக விளங்கினார் தேஷ்பாண்டே. பவர்ப்ளேயின் கடைசி ஒவரை வீசவந்த சான்ட்னரும் முதல் மூன்று பந்துகளில் புள்ளி வைத்தாலும், அடுத்த மூன்று பந்துகளில் சாய் சுதர்சன் ஒரு பவுண்டரியும் கில் ஒரு பவுண்டரியும் என கோலம் போட்டு அனுப்பினார்கள். பவர் ப்ளேயின் முடிவில் 65/1 என தெம்பாக நடந்துக் கொண்டிருந்தது டைட்டன்ஸ்.

ஜடேஜா,
ஜடேஜா,IPL Page

ஏழாவது ஓவரை வீசவந்தார் ஜட்டு. வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மீண்டும் அடுத்த ஓவரை வீசவந்தார் சான்ட்னர். இந்த ஓவரிலும், சுதர்சன் கில் இருவரும் தலா ஒரு பவுண்டரியை விரட்டினார்கள். ஒன்பதாவது ஓவரில், ஜடேஜா மீண்டும் பவுண்டரி ஏதும் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். முத்தாய்ப்பாக, பத்தாவது ஒவரில் ஹங்கர்கேக்கர் சாய் சுதர்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். கிட்டதட்ட அகலப்பந்தாக போன பந்தை விரட்டி அடிக்க முயன்று கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். கேப்டன், ஹர்திக் களத்துக்குள் வந்தார்.

11-வது ஓவரில் முதல் நான்கு பந்துகளை ஜடேஜா இறுக்கிப் பிடித்தாலும், கடைசி இரு பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என நெறுக்கி அடித்தார் கில். அரைபாடி லாரியில் ஏறினாலும் ஆணி அடித்தாற்போல் அசராமல் அப்படியே நிற்கின்ற லாகவம், கில்லிடம் இருக்கிறது. நின்று நிதானமாக சம்பவம் செய்துக்கொண்டிருந்தார். 12வது ஓவரில் சான்ட்னர் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 13வது ஒவரின் முதல் பந்திலேயே ஜடேஜாவின் பந்தில் க்ளீன் பவுல்டானார் ஹர்திக். விஜய் சங்கர் களத்திற்குள் வந்தார். `நமக்கு எப்படி டூபேவோ, அவிய்ங்களுக்கு விஜய் சங்கர். பயப்படாதீங்க வெற்றி நமதே' என தேற்றிக்கொண்டார்கள் சென்னை ரசிகர்கள்.

சிஎஸ்கே,
சிஎஸ்கே,IPL Page

ஹங்கர்கேக்கர் வீசிய 14வது ஓவரின் இரண்டாவது பந்தை, டீப் ஸ்கொயர் ஏரியாவில் பவுண்டரிக்கு பறக்கவிட்டு ஆட்டத்துக்குள் நுழைந்தார் விஜய் சங்கர். அதே ஓவரின் கடைசி பந்தை கில், பவுன்டரிக்கு விரட்டியடித்தார். 14வது ஓவரின் முடிவில் 127/3 என நல்ல ஸ்கோரில் இருந்தது குஜராத் டைட்டன்ஸ். இன்னும் 36 பந்துகளில் 52 ரன்கள் தேவை என்கிற நிலை. ஆட்டம் இந்தப் பக்கமும் மாறலாம் என சென்னை ரசிகர்கள் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுடன் இருக்க, `அது எப்படி நீங்க நம்பலாம்' என மீண்டும் வந்தார் தேஷ்பாண்டே. ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் கில். மிட் விக்கெட்டில் நின்றுக்கொண்டிருந்த ருத்துராஜ் எகிறி குதித்தும் பந்து சிக்கவில்லை. பிறகுதான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஓடாத கடிகாரமும், ஓர் நாளைக்கு இருமுறை சரியான நேரத்தை காட்டிவிடும் என்பதைப் போல, தேஷ்பாண்டேவும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் சென்னை சிங்கங்களுக்கு சிம்மசொப்பனமாக ஆடிக்கொண்டிருந்த சுப்மன் கில்லின் விக்கெட். அதே ருத்துராஜின் கையில் இம்முறை பந்து சிக்கிக்கொண்டது.

தெவாட்டியா உள்ளே வந்தார். சான்ட்னர் வீசிய 16வது ஓவரில், ஒரு பவுண்டரியுடன் ஏழு ரன்கள் கிடைத்தது. சாஹர் வீசிய 17வது ஓவரில் மொத்தமே 4 ரன்கள். `டைட்டா கட்றாணுங்கணா' என டைட்டன் ரசிகர்களும் கொஞ்சம் பீதியானார்கள். 18வது ஓவரை வீசவந்தார் ஹங்கர்கேக்கர். ஓவரின் 4வது பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு சிதறவிட்டார் விஜய் சங்கர். `இது நம்ம விஜய் சங்கர்தானா?' சென்னை ரசிகர்கள் மிரண்டு போனார்கள். பிறகு, ஓவரின் கடைசிப்பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போதுதான், `ஆமா, நம்ம விஜய் சங்கர்தான்' என ஆசுவாசமானார்கள்.

ரஷீத் கான்,
ரஷீத் கான்,IPL Page

12 பந்துகளில் 23 ரன்கள் தேவை. தீபக் சாஹரிடம் பந்தைக் கொடுத்தார் தோனி. ஓவரின் இரண்டாவது பந்து, தெவாட்டியாவின் காலில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. தோனி அதைப் பிடிக்க முயன்று பாய, வலதுகாலில் தசை பிடித்துக்கொண்டது. ரசிகர்களுக்கோ பயம் பிடித்துக்கொண்டது. பிறகு, மீண்டும் க்ளவுஸை மாட்டிக்கொண்டு நின்ற பிறகுதான் நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள். ஓவரின் நான்காவது பந்தை, மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு கிண்டினார் ரஷீத் கான். விஜய் சங்கர் அடித்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத சென்னை ரசிகர்கள், ரஷீத் கான் அடித்த சிக்ஸரில் மொத்தமாய் கதிகலங்கிப் போனார்கள். அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி வேறு. இனி 6 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே தேவை. ரசிகர்களுக்கு மனதில் ஓரத்தில் சின்னஞ்சிறிதாய் ஓர் நம்பிக்கை இன்னமும் துளிர்விட்டிருந்தது. கடைசி ஓவரை வீச தேஷ்பாண்டே வந்ததும், கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் குப்பென கருகிப்போனது.

குஜராத் - சென்னை
குஜராத் - சென்னைIPL Page

கடைசி ஓவரின் 2வது பந்தில் ஒரு சிக்ஸர், 3வது பந்தில் ஒரு பவுண்டரி. `வாங்க அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம்' என முடித்துவிட்டு கிளம்பினார் தேஷ். தொடர்ந்து மூன்றாவது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிறப்பான துவக்கத்தை, மிடில் ஓவர்களில் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் சரிந்துபோனது ஒரு பக்கம், டெத் ஓவர்களில் பந்து வீச அனுபவமிக்க பந்து வீச்சாளர் இல்லாதது இன்னொரு பக்கம் என சி.எஸ்.கே அணியின் சில பிரச்னைகள் தெள்ளத் தெளிவாக தெரிந்தன. இருந்தாலும், அதை எல்லாம் சரிசெய்து மீண்டெழுந்து கோப்பையை வெல்வதுதானே சி.எஸ்.கே பாணி. பார்ப்போம் இம்முறை சென்னை அணியின் போக்கு தோனியின் மேஜிக் போல பட்டையைக் கிளப்புகிறதா, அல்லது கிரிகாலன் மேஜிக் போல படுகேவலமாக சொதப்புகிறதா என?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com