சென்னையில் இன்று மற்றும் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஃபேன் பார்க் அமைக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன் காஜூலா இதனைத் தெரிவித்தார். ரசிகர்கள் கிரிக்கேட் போட்டி-ஐ பொதுவெளியில் கண்டுகளிக்கும் அரங்கங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கேசிஜி கல்லூரியில் ஃபேன் பார்க்குகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஃபேன் பார்க்கில் 22 அடி எல்இடி திரையில் போட்டி ஒளிபரப்பப்படும். இந்தப் போட்டியை 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரசிகர்கள் வரை கண்டுகளிக்கலாம். மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபேன் பார்க் அமைக்க முடியவில்லை என்பதையும் மோகன் காஜூலா குறிப்பிட்டார். இன்று, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதும் போட்டி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.