பிசிசிஐ, ஐபிஎல் எக்ஸ் தளம்
T20

IND-PAK WAR | எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. பிசிசிஐ தகவல்!

போர் காரணமாக, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசிப் நேற்று இரவு முதல் போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது. இந்த நிலையில் போர் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் நேற்று தர்மசாலாவில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 58வது ஐபிஎல் போட்டி, பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு, வீரர்களும் ஊழியர்களும், ரசிகர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஐபிஎல்

இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வருவதால், இனிவரும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா எனக் கேள்வி எழுந்து வந்தது. இதையடுத்து, தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ”நாடு போரில் ஈடுபட்டிருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சரியான முடிவல்ல” என பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது எஞ்சியுள்ள போட்டிகள் நிறுத்தப்பட்டிருப்பதகாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போர் காரணமாகவே தற்போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் 12 லீக் போட்டிகள் உள்ளன. இதில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் பார்த்தால் இன்னும் மொத்தம் 16 போட்டிகள் உள்ளன. மே 25ஆம் தேதியுடன் ஐபிஎல் தொடர் நிறைவடைய இருந்தது. முன்னதாக, ஐபிஎல்லைப் போன்றே பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.