18வது ஐபிஎல் தொடரின் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் முடிவுக்கு வந்தது. நடப்புத் தொடரில் இறுதிப் போட்டியில் இதுவரை கோப்பையையே வெல்லாத பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதையடுத்து, அந்த அணிக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 17 ஆண்டுகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியை, அந்த அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன் வென்றார். அவர், 15 போட்டிகளில் விளையாடி 759 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் (108*), 6 அரைசதங்களும் அடக்கம். இரண்டாவது இடத்தில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் (717) உள்ளார். மூன்றாவது இடத்தில் பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலி (657) உள்ளார். அதுபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் வீரரான பிரசித் கிருஷ்ணா உள்ளார். அவர் 15 போட்டிகளில் விளையாடி, 25 விக்கெட்களை எடுத்துள்ளார். இதையடுத்து, பர்பிள் நிற தொப்பையை அவர் கைப்பற்றினார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சென்னை அணி வீரர் நூர் அகமதுவும் (24), மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணி வீரர் ஹேசில்வுட்டும் (22) உள்ளனர்.