ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.
டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில் அரையிறுதிப்போட்டிகளில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியாவும், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
ஒரு போட்டியில் கூட தோல்வியே காணாமல் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றிபெற்ற நிகி பிரசாத் தலைமையிலான இந்திய மகளிர் அணி கெத்தாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
மறுபுறம் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு வலுவான போட்டியாளராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கோப்பை வெல்வதற்கான இறுதிப்போட்டியானது மலேசியாவில் இன்று பரபரப்பாக தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்து விளையாடியது. ஆனால் இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத தென்னாப்பிரிக்கா பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்திய ஸ்பின்னர்கள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 82 ரன்களே சேர்த்தது.
நடப்பு உலகக்கோப்பை சாம்பியனான இந்திய அணி மீண்டும் கோப்பையை தக்கவைத்துகொள்ள 83 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. எளிதான இலக்கை துரத்திய இந்திய வீரர்கள் 11.2 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தனர்.
பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய த்ரிஷா, பேட்டிங்கிலும் 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
யு19 மகளிருக்கான டி20 உலகக்கோப்பை முதல்முறையாக கடந்த 2022-23ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், அதில் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற யு19 மகளிர் டி20 உலகக்கோப்பையையும் வென்று தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று மகுடம் சூடியுள்ளது இந்திய அணி.
இந்த உலகக்கோப்பை தொடரில் பவுலிங்கில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய வைஷ்ணவி ஷர்மா மற்றும் பேட்டிங்கில் 309 ரன்களை குவித்த கொங்கடி த்ரிஷாவும் இந்தியாவின் முத்திரை வீரர்களாக ஜொலித்தனர்.