இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று, லண்டன் ஓவர்ல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி, தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. சாய் சுதர்சன் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். இதற்கிடையே, இந்தியா முதல் நாள் முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் அடித்திருந்தது. கருண் நாயர் 52 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே 20 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்களையும், ஜோஸ் டாங்கு 3 விக்கெட்களையும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. தற்போது வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.