ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்கிளே மூன்றாவது முறையாக, அப்பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்ததைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா அப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், ஐசிசி பதிவிட்ட வீடியோ ஒன்றில் ஜெய் ஷாவின் அதிக ஷாட்கள் இடம்பெற்றிருந்ததை ரசிகர்கள் சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து அவ்வீடியோ நீக்கம் செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் புதிதாகப் பதிவிடப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா முதல்முறையாக ஐசிசி கோப்பையைத் தட்டிச் சென்றது. இதுகுறித்த கொண்டாட்ட வீடியோவை ஐசிசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தமுள்ள 23 ஷாட்களில் 11 ஷாட்களில் ஜெய் ஷா மட்டுமே தெரிந்ததாகக் கூறப்பட்டது. இதுகுறித்து ரசிகர்களும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பதிவை ஐசிசி நீக்கியது. பின்னர், மீண்டும் அதே வீடியோவைப் புதிதாகப் பதிவிட்டுள்ளது.