2025 WTC| நிறைவேறியது 27 வருட கோப்பை கனவு.. ஆஸியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென்னாப்ரிக்கா!
200 வருடங்களுக்கு முன்பே கிரிக்கெட் ஊன்றிய பழமையான கிரிக்கெட் நாடாக இருந்தாலும், கோப்பை என்பது தென்னாப்பிரிக்காவிற்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்துவந்தது.
கிரிக்கெட் வரலாற்றில் 20 வருடங்கள் தடைக்குபிறகு 1991-ல் சர்வதேச கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை கண்ட தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 1998-ம் ஆண்டுநடைபெற்ற ஐசிசி நாக்அவுட் தொடரில் முதல்முறையாக கோப்பை வென்றது. அதுதான் அவ்வணி வென்ற முதல் மற்றும் கடைசி கோப்பையாக இன்றளவும் இருந்துவந்தது.
அதற்குபிறகு பல உலகக்கோப்பைகளை வெல்ல போராடிய அந்த அணி, 1992, 1999, 2007, 2015, 2023 உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதிவரை முன்னேறி தோற்றது. அதனைத்தொடர்ந்து 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை முன்னேறிய தென்னாப்பிரிக்கா, இந்தியாவிடம் 30 பந்துகளில் 30 ரன்களை கூட அடிக்கமுடியாமல் தோற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
க்ரீம் ஸ்மித், ஜாக் காலீஸ், டோனி கிர்க், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், ஏபிடி வில்லியர்ஸ், ஹசிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன், கிப்ஸ், இண்டினி, ஃபேப் டூபிளெஸி போன்ற தலைசிறந்த வீரர்கள் தென்னாப்பிரிக்கா அணியிலிருந்து உருவெடுத்தாலும், யாராலும் ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்ல முடியவில்லை. மாறாக கண்ணீரோடே ஒவ்வொரு தோல்வியின்போதும் நாடு திரும்பினர்.
இப்படி கையிலிருக்கும் போட்டிகளை எல்லாம் கோட்டைவிட்டு ‘சோக்கர்ஸ் அணி’ என்ற அவப்பெயரை சுமந்துவந்த தென்னாப்பிரிக்கா அணி, 27 வருடங்களாக பட்ட காயத்திற்கும், அவமானத்திற்கெல்லாம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று உச்சிமுகர்ந்துள்ளது.
பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய வேகப்பந்துவீச்சாளர்கள்..
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்கா அணி. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாப்பிரிக்காவிற்கு பலம் சேர்த்தார். 67 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தாலும் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரும் அரைசதமடித்து அணியை 212 ரன்களுக்கு எடுத்துச்சென்றனர்.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் அற்புதமான பந்துவீச்சால் 138 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பெடிங்காம் 45 ரன்கள் அடித்தார், கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு 300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.
74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி எப்படியும் பெரிய டோட்டலை அடிக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், ’இருங்க பாய்’ என்ற தொணியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி இருவரும் விக்கெட் வேட்டை நடத்தினர். 73 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தாலும், கடைசியாக வந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் ஆஸ்திரேலியாவை 207 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றனர்.
27 வருடத்திற்கு பிறகு கோப்பை வென்றது தென்னாப்ரிக்கா..
தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், யாருக்கு வெற்றி என்ற 4வது இன்னிங்ஸில் அதிகப்படியான அழுத்தத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர் ரிக்கல்டனை விரைவாகவே வெளியேற்றிய மிட்செல் ஸ்டார்க் அசத்தினார்.
முதல் விக்கெட்டை இழந்தாலும் அழுத்தத்தை அதிகரிக்க விடாமல் பொறுப்பாக விளையாடிய மார்க்ரம் மற்றும் முல்டர் இருவரும் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். முல்டரை 27 ரன்னில் ஸ்டார்க் வெளியேற்ற, அதற்குபிறகு களத்திற்கு கேப்டன் டெம்பா பவுமா கேட்ச்சை ஸ்லிப் திசையில் ஸ்டீவ் ஸ்மித் கோட்டைவிட்டார்.
அதற்குபிறகு விக்கெட்டுக்கான வாய்ப்பையே வழங்காமல் அற்புதமாக பேட்டிங் செய்த டெம்பா பவுமா மற்றும் மார்க்ரம் இருவரும் 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு தென்னாப்பிரிக்காவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிசெய்தனர். பவுமா 66 ரன்னில் வெளியேறினாலும், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 136 ரன்கள் அடித்த மார்க்ரம் கெத்தாக தென்னாப்பிரிக்காவை கோப்பைக்கு அழைத்துச்சென்றார். அந்த அணி5 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
1998-ம் ஆண்டுக்கு பிறகு 27 வருடம் கழித்து ஐசிசி கோப்பையை வென்று மகுடம் சூடியது தென்னாப்பிரிக்கா அணி.