18வது ஐபிஎல் சீசன், கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் இந்த கிரிக்கெட் தொடரில் அவ்வப்போது சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிவரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து வர்ணணையாளர் ஹர்பஜன் சிங் இனவெறி கருத்தை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 2வது போட்டி, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், நான்கு ஓவர்களில் 76 ரன்களை வாரி வழங்கினார். அப்போது வர்ணணையாளராகப் பணியாற்றிய இந்திய அணியின் முன்னா வீரர் ஹர்பஜன் சிங், ”லண்டனில் உள்ள கறுப்பு நிற டாக்ஸிகளின் மீட்டரைப்போல் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிக ரன்களைக் கொடுத்திருக்கிறார்” என இந்தியில் கூறினார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜோஃப்ரா ஆர்ச்சரை, கறுப்பு நிற டாக்ஸியுடன் ஒப்பிட்டிருப்பதன் மூலம் ஹர்பஜன் சிங் இனவெறிக் கருத்தை வெளியிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. ஹர்பஜன் சிங்கை, ஐபிஎல் தொடரின் வர்ணணையாளர் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் குரல் கொடுத்துள்ளனர். முன்னதாக, 2008இல் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸை ஹர்பஜன் இனவெறியுடன் திட்டியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. பின்னர் விசாரணையில், ஹர்பஜன் இனவெறி சொற்களை பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது.