Shubman Gill
Shubman Gill PTI
T20

GTvSRH | கில் அதிரடி சதம்... டெல்லியை ஃபாலோ செய்து சன்ரைசர்ஸும் அவுட்..!

ப.சூரியராஜ்

இந்த சீசனில் 9 ஆட்டங்களே மிச்சமிருக்கும் நிலையில், 9 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய போராடிக்கொண்டிருக்கின்றன. க்றிஸ்டோபர் நோலனின் திரைக்கதையைப் போல, இடியாப்ப சிக்கலாய் இருக்கிறது கணக்கு வழக்கு. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேற வேண்டுமென குஜராத் ரசிகர்கள் `டைட்டன்ஸ் ஜெயிக்கணும்' என கடவுளை வேண்டினால், மற்ற அணி ரசிகர்களோ `சன்ரைசர்ஸ் தோக்கணும்' என வேண்டினார்கள். பாவத்த!

Sai Sudharsan

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம், பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப, லாவண்டர் வண்ண ஜெர்ஸியுடன் ஆடினார்கள் டைட்டன்கள். சாஹாவும் கில்லும் டைட்டன்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் ஸ்விங் குமார். ஓவரின் 3வது பந்தில், வ்ரித்திமான் சாஹா ஸ்வாஹா! அடுத்த ஓவரை வீசினார் மார்கோ யான்சன். ஓவரின் 2வது பந்து, பவுண்டரிக்கு தட்டிவிட்டார் சாய் சுதர்சன். 5வது பந்து நோ பால். மாற்றாக வீசபட்ட பந்தில் ரன்கள் ஏதுமில்லை. ஆறாவது பந்து அகலப்பந்து, மாற்றாக வீசப்பட்ட பந்தும் அகலப்பந்தாகி பவுண்டரிக்குள் போய் விழுந்தது. ஆக, பேட்ஸ்மென் தன்னை அடித்துவிடுவார்களோ எனும் பயத்தில் யான்சனே தன்னை அடித்துக்கொண்டார். 3வது வீசவந்தார் புவி குமார். கில் ஒரு பவுண்டரி, சாய் சுதர்சன் இரண்டு பவுண்டரிகள் என காயப்படுத்தினார்கள்.

அடுத்து ஃபரூக்கியிடம் பந்தைக் கொடுத்தார் மார்க்ரம். ஃபரூக்கியை ஊட்டி வறுக்கிபோல் உடைத்து டீயில் முக்கினார் கில். தொடர்ந்து நான்கு பவுண்டரிகள். நான்கு திசைகளிலும் பறந்தது. 5வது ஓவரை வீசிய யான்சன், பவுண்டரிகள் ஏதுமின்றி 5 ரன்கள் மட்டும் கொடுத்தார். நடராஜனின் 6வது ஓவரில், சாய் சுதர்சன் ஒரு பவுண்டரியும் கில் ஒரு பவுண்டரியும் அடித்தனர். பவர்ப்ளே முடிவில் 65/1 என அட்டகாசமாக தொடங்கியிருந்தனர் பாண்டியா பாய்ஸ்.

Sai Sudharsan | Shubman Gill

கேப்டன் மார்க்ரமின் 7வது ஓவரில், இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கில். மார்க்ரமை அடித்து கையோடு மார்கண்டேவையும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். ஃபரூக்கியின் 9வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே. மார்கண்டேவின் 10வது ஓவரில் சாய் சுதர்சனுக்கு ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 10 ஓவர் முடிவில் 103/1 தொடர்ந்து ஓடியது டைட்டன்ஸ்.

11வது ஓவரை வீசவந்தார் யான்சன். நோ பாலில் ஒரு சிக்ஸர், ஃப்ரீ ஹிட்டும் அகலப்பந்து, மாற்றாக வீசபட்ட ஃப்ரீஹிட்டில் ஒரு பவுண்டரி என மீண்டும் தன்னைத்தானே அடித்துக்கொண்டார் மார்கோ யான்சன். ஒரு ஓவர் மார்கோ யான்சனும் மற்றொரு ஓவரை அவரது இரட்டை சகோதரர் ட்வான் யான்சனும் வீசுகிறார்களோ என சன்ரைசர்கள் சந்தேகம் கொண்டார்கள். கடந்த மேட்சில் பூரனிடம் பூரான் வாங்கிய அபிஷேக் சர்மா, இந்த மேட்சில் தைரியமாக பந்து வீசவந்தார். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என வெளுத்துவிட்டார் அபிஷேக் சர்மா. நட்டுவின் 13வது ஓவரில், 8 ரன்கள் கிட்டின. 14வது ஓவரில், கில்லுக்கு ஒரு பவுண்டரியை வழங்கினார் மார்கண்டே. 15வது ஓவரை வீசவந்த யான்சன், முதல் பந்திலேயே சாய் சுதர்சனின் விக்கெட்டைத் தூக்கினார். சந்தேகப்பட்டது உண்மைதான் என சன்ரைசர்ஸ் ரசிகர்கள் பல்லைக் கடித்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாண்டியா, ஒரு பவுண்டரி அடித்தார். 15 ஓவர் முடிவில் 154/2 என மிக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தது.

Hardik Pandya

16வது ஓவரை வீசிய புவி, ஹர்திக்கின் விக்கெட்டைத் தூக்கினார். பேக்வார்டு பாயின்ட்டில் கேட்சைப் பிடித்தார் த்ரிப்பாட்டி. அதே ஓவரில் கில் ஒரு பவுண்டரியும் அடித்தார். நட்டுவின் 17வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்துவிட்டு அவுட் ஆனார் கில்லர் மில்லர். ஃபரூக்கியின் 18வது ஓவரில் திவாட்டியாவும் காலி. நடராஜனின் 19வது ஓவரில், தனது முதல் ஐ.பி.எல் சதத்தை நிறைவு செய்தார் சப்லைம் கில். அதே ஓவரில் ஷனகா ஒரு பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரை வீசிய புவி, முதல் பந்திலேயே கில்லின் விக்கெட்டை காலி செய்தர. 58 பந்துகளில் 101 எனும் அழகியலான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்து களமிறங்கிய ரஷீத், முதல் பந்திலேயே கீப்பர் க்ளாஸனிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். 3வது பந்தை அடிக்காமல் நூர் அகமது ஓட, க்ளாஸனும் புவியும் சேர்ந்து ரன் அவுட் அடித்தார்கள். ஓவரின் 5வது பந்து, யான்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார் புவி. 4-0-30-5 என சீரும் சிறப்புமாக தனது ஸ்பெல்லை முடித்தார் புவனேஷ்வர் குமார்.

ரிங்கு சிங்கிடம் அடி வாங்கி உடல்நலம் சரியில்லாமல் இருந்த யாஷ் தயாள், புத்துணர்வுடன் மீண்டு வந்திருந்தார். சும்பன் கில்லுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் தயாள். அன்மோல்ப்ரீத்தும், அபிஷேக் சர்மாவும் சன்ரைசர்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் ஷமி. ஒரு பவுண்டரி அடித்த அன்மோல், அடுத்த பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு ரிசல்ட் தெரிந்துவிட்டது. எத்தனை ஓவர்களில் தங்கள் அணி தோற்பார்கள் என பார்க்கத் துவங்கினார்கள். யாஷ் தயாளின் இரண்டாவது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் அபிஷேக். 4வது பந்து அவரும் அவுட். கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு சோகமாய் கிளம்பினார். 3வது ஓவரின் முதல் பந்து, திரிப்பாட்டியின் விக்கெட்டும் முடின்ச். ஒரு கடி கடிச்சுட்டு குடு என கொய்யாக்காயை தூக்கி எரிவதுபோல், திவாட்டியாவிடம் ஈஸியான கேட்சைக் கொடுத்தார் த்ரிப்பாட்டி. தயாளின் 4வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் க்ளாஸன். அதே ஓவரில், மார்க்ரமுக்கும் ஒரு பவுண்டரி கிடைத்தது. ஷமியின் 5வது ஓவரில், கேப்டன் மார்க்ரமும் அவுட். சன்ரைசர்ஸ் ரசிகர்கள் இடிந்துபோய் அமர்ந்தார்கள். அதே ஓவரில் சன்வீர் சிங் ஒரு சிக்ஸர் அடித்தும், ரசிகர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ரஷீத்தின் 6வது ஓவரில் க்ளாஸன் அடித்தார் ஒரு சிக்ஸர். பவர்ப்ளேயின் முடிவில் 45/4 என பரிதாபமான நிலையிலிருந்தது சன்ரைசர்ஸ் அணி. இன்னும் 84 பந்துகளில் 144 ரன்கள் தேவை.

Mohammed Shami

மோகித் சர்மாவின், 7வது ஓவரில் முதல் பந்தே சன்வீர் சிங்கின் விக்கெட் சாய்ந்தது. அடுத்து களமிறங்கி ஒரு பவுண்டரி அடித்த அப்துல் சமாத், அதற்கடுத்த பந்திலேயே அவுட்டும் ஆனார். ரஷீத் கானின் 8வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. மோகித்தின் 9வது ஓவரில், மார்கோ யான்சனும் கிளம்பினார். மொத்தம் ஏழு விக்கெட்களையும் ஏழு கேட்சர்களிடம் இழந்திருந்தது சன்ரைசர்ஸ் அணி. ரஷீத்தின் 10வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில் 66/7 என்னவோ செய்துகொண்டிருந்தது சன்ரைசர்ஸ்.

நூர் அகமதின் 11வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என கலக்கினார் க்ளாஸன். தயாளின் 12வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. நூர் அகமதின் 13வது ஓவரில் க்ளாஸன் ஒரு சிக்ஸர், புவி ஒரு பவுண்டரி என விளாசினர். ரஷீத்தின் 14வது ஓவரில் புவி ஒரு பவுண்டரி அடித்தார். மோகித் வீசிய 15வது ஓவரில் க்ளாஸனிடமிருந்து மற்றொரு பவுண்டரி. 111/7 என நெல்சனில் நின்றது சன்ரைசர்ஸ். இன்னும் 30 பந்துகளில் 78 ரன்கள் தேவை.

Heinrich Klaasen

நூர் அகமதின் 16வது ஓவரில், லெக் பைஸில் ஒரு பவுண்டரி. க்ளாஸன் பேட்டிலிருந்து ஒரு பவுண்டரி கிடைத்தது. ஓவரின் 5வது பந்தில், காயமடைந்தார் பவுலர் நூர் அகமது. எனவே, கடைசிப்பந்தை வீசினார் திவாட்டியா. ஷமியின் 17வது ஓவரில், க்ளாஸனின் விக்கெட்டை ஒரு வழியாக வீழ்த்தினர். 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து டைட்டன்ஸை கிலி கொடுத்துவிட்டார் க்ளாஸன். தயாளின் 18வது ஓவரில், புவிக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. மோகித் சர்மாவின் 19வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என விளாசி தன் அணி நிர்வாகத்திற்கு ஏதோ ஒரு செய்தி சொன்னார் மார்கண்டே. அதே ஓவரில், புவனேஷ்வர் குமாரும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்னும் 6 பந்துகளில் 42 ரன்கள் தேவை. திவாட்டியாவின் கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைக்க, 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீட்டுக்கு அனுப்பி வைத்தது குஜராத் டைட்டன்ஸ். மற்ற அணி ரசிகர்கள் எல்லோரும் பெருமூச்சுவிட்டார்கள். சிறப்பாக ஆடி சதமடித்த கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.