
“நீ பவுலிங் போட வந்தா, உன் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடுவேன்” என தான் ஐதராபாத் பவுலர் அபிஷேக் சர்மாவிடம் சொல்லி அதனை செய்தும்காட்டியதாக குஜராத் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸூக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கும் இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது ஐதராபாத் அணி. ஆனால் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து குஜராத் அணி 34 ரன்களில் வெற்றிப்பெற்று, இந்த ஐபிஎல் சீசனில் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக Play Off சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாஹாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 58 பந்துகளில் 101 ரன்களை விளாசினார். இதில் மொத்தம் 13 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். இந்த இன்னிங்ஸில் மிக வேகமாக அரைசதம் அடித்த சுப்மன் கில், அப்போது ஒரு சிக்ஸரை கூட விளாசவில்லை. மேலும் நேற்றையப் போட்டியில் ஆட்டநாயகன் விருதுக்கும் அவர் தேர்வானார்.
போட்டிக்கு பின் பேசிய சுப்மன் கில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது “ஐதராபாத் அணிக்கு எதிராக தான் ஐபிஎல் தொடரில் நான் அறிமுகமானேன். இப்போது என் முதல் சதத்தையும் ஐதராபாத் அணிக்கு எதிராகவே பதிவு செய்து இருக்கிறேன். இன்னும் ஏராளமான சதங்கள் வரும் என்று நம்புகிறேன்.
நான் பேட்டிங் செய்யும்போது பவுலர்களையும், சூழலையும் மட்டுமே பார்த்து விளையாடுவேன். கடந்த போட்டியில் என்ன நிகழ்ந்தது என்பதை பற்றி யோசிக்கவே மாட்டேன். ஏனென்றால் இப்போது என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். இன்றையப் போட்டியில் நான் ஒரேயொரு சிக்சரைதான் அடித்திருந்தேன். அந்த சிக்சர் அபிஷேக் சர்மாவுக்கு எதிராக வந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஏனென்றால் அபிஷேக் சர்மாவிடம், ‘நீ பந்துவீசினால் நிச்சயம் சிக்சர் அடிப்பேன்’ என்று கூறி இருந்தேன். சொன்னது போல் சிக்சர் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்றுள்ளார் சுப்மன் கில்.