டேனிஷ் கனேரியா எக்ஸ் தளம்
T20

”பயங்கரவாதிகள் சுதந்திரப் போராளிகளா?” - பாகிஸ்தானைச் சாடிய Ex கிரிக்கெட் வீரர்!

“பாகிஸ்தானின் துணைப் பிரதமர் பயங்கரவாதிகளைச் ’சுதந்திரப் போராளிகள் என்று அழைப்பது வெறும் அவமானம் மட்டுமல்ல. அது அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகும்” என அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் ஒருவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கெடுபிடிகளை விதித்துள்ள நிலையில், பதிலுக்கு அந்த நாடும் விதித்துள்ளது. இதனால், இரு நாட்டு எல்லை தரப்பிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர், “நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது. பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும். மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம்” எனக் கூறியிருந்தார். இது விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, “பாகிஸ்தானின் துணைப் பிரதமர் பயங்கரவாதிகளைச் ’சுதந்திரப் போராளிகள் என்று அழைப்பது வெறும் அவமானம் மட்டுமல்ல. அது அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகும்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னதாக அவர், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? உங்கள் படைகள் ஏன் திடீரென்று உஷார் நிலையில் உள்ளன? ஏனென்றால், உங்களுக்கு உண்மை தெரியும். நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இருக்கிறது” என பிரதமரைச் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.