இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, அவ்வணியுடன் 5 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இத்தொடரில் இரண்டு போட்டிகளில் நிறைவுற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை ருசித்துள்ளன. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 3வது டெஸ்ட் போட்டி, நேற்று புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முன்னதாக, இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், 2021ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அவர் மீண்டும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதேபோல், 2வது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா, மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார். இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த மைதானத்தில் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் ரன் குவிக்கத் தொடங்கினர். இதனால் அவ்வணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. முதல் நாள் முடிவில், அந்த அணி 83 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. எனினும் ஜோ ரூட் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நங்கூரமாய் நிற்கிறார். மறுமுனையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடன் உள்ளார். இந்திய அணி தரப்பில் நிதிஷ்குமார் ரெட்டி 2 விக்கெட்டும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதற்கிடையே, இன்று 2ஆம் நாள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், அது இந்திய பவுலர்களுக்கு சாதகமாக அமையுமா அல்லது பேட்டர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.