2023 ipl final jadeja celebration
2023 ipl final jadeja celebration web
T20

2023 ஜடேஜாவின் பைனல் வெற்றி கொண்டாட்டத்தை மீண்டும் வெளிப்படுத்திய தோனி! இணையத்தில் வீடியோ வைரல்!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று தொடங்கவிருக்கும் ஐபிஎல்லின் முதல்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதோடு தன்னுடைய கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் எம்எஸ் தோனி, நடப்பு தொடரில் கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார்.

dhoni - ruturaj

இதற்கிடையில் முதல் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டுவரும் எம் எஸ் தோனி, 2023 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற போது கைகளை உயர்த்திய படி ஜடேஜா மைதானத்தை சுற்றிவந்த கொண்டாட்டத்தை போன்றே அப்படியே தானும் செய்து ஜாலியை வெளிப்படுத்தினார்.

ஜடேஜா செலப்ரேஷனை ரீ-கிரியேட் செய்த தோனி!

கடந்த 2023 ஐபிஎல் தொடரானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு எமோசனலான தொடராகவே அமைந்தது. கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒய்வை அறிவிக்கப்போகிறார், சென்னை அணியில் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டி தான் கடைசி போட்டியாக அவருக்கு இருக்கப்போகிறது என்ற பல்வேறு எமோசன்களோடு சிஎஸ்கே ரசிகர்கள், இறுதிப்போட்டியை காண அகமதாபாத்திற்கு பறந்தனர். ஆனால் இறுதிப்போட்டியானது மழையால் பாதிக்கப்பட, ரிசர்வெ டேவான அடுத்த நாளுக்கு போட்டி சென்றது.

CSK fans

ரசிகர்களுக்கு போட்டியை காண்பதற்கான டிக்கெட் செல்லும் என அறிவிக்கப்பட்டாலும், ஒருநாளில் ரிட்டர்ன் வருவதற்கு திட்டமிட்டு சென்ற பல்வேறு ரசிகர்கள் போட்டி அடுத்தடுத்த நாட்களுக்கு சென்றதால் தங்க இடமில்லாமல் ரயில்வே ஸ்டேசன்களிலும் பொதுவெளிகளிலும் படுத்தெழுந்து தோனியை பார்க்க மைதானத்திற்கு வந்தனர். இறுதிப்போட்டியில் திடீரென தோல்வியை நோக்கி சிஎஸ்கே அணி நகர்ந்ததால், தோனியின் ரசிகர்கள் கண்ணீர்விடவே ஆரம்பித்து விட்டனர்.

CSK Fans

அதற்கேற்றார் போல் தோனியும் சோகமுகத்துடன் தலைகுணிந்து உட்கார, சென்னை அணிக்கோ வெற்றிபெற கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. பரபரப்பான நேரத்தில் கடைசி இரண்டு பந்தில் சிக்சர், பவுண்டரி என விரட்டிய ஜடேஜா மைதானத்தை சுற்றிக்கொண்டு ஓடி காற்றில் கைகளை குத்தி வெற்றிக்கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவரை தலைகுணிந்து அமர்ந்திருந்த தோனி, வெற்றிக்கு பிறகு ஜடேஜாவை தன் தோள்களில் தூக்கிவைத்து கொண்டாடினார். சிஎஸ்கே ரசிகர்கள் கண்களில் கண்ணீரோடு ஒரு சுகமான முடிவை கண்டுகளித்தனர்.

CSK Fans

இந்நிலையில் தான் 2023 ஐபிஎல் தொடரின் வெற்றிக்கொண்டாட்டத்தை, ஜடேஜாவை போலவே கைகளை உயர்த்தி மீண்டும் ரீ-கிரியேட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தோனி. தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.