18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. இரண்டு சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில் தொடர் வெற்றியுடன் இருந்துவரும் டெல்லி கேபிடல்ஸ் அணி, இரண்டு தோல்விகளுக்கு பிறகுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இன்றைய போட்டியில் களம்கண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஜேக் ஃபிரேசரை 0 ரன்னில் வெளியேற்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய கலீல் அகமது அசத்தினார்.
என்னதான் விரைவாகவே விக்கெட்டை இழந்திருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் அபிஷேக் போரல் இருவரும் சிக்சர் பவுண்டரி பறக்கவிட்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய அபிஷேக் போரல் ஆபத்தான வீரராக தெரிய, அவரை சரியான நேரத்தில் 33 ரன்னில் வெளியேற்றினார் ஜடேஜா.
ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடிய கேஎல் ராகுல் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 77 ரன்கள் அடிக்க, மறுமுனையில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய அக்சர் பட்டேல் 21, சமீர் ரிஸ்வி 20, ஸ்டப்ஸ் 30 ரன்கள் என அடித்து அசத்த 20 ஓவரில் 183 ரன்களை சேர்த்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
2 தொடர் தோல்விகளுக்கு பிறகு சிஎஸ்கே அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், 184 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு விளையாடவுள்ளது சிஎஸ்கே அணி. ஆனால் துரதிருஷ்டவசமாக வரிசையாக 9 போட்டிகளில் 175-க்கு மேல் சேஸ்செய்ய முடியாமல் தோற்றுவருகிறது சென்னை அணி. அந்த மோசமான சாதனையை இந்த போட்டியில் முறியடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.