ஸ்பார்க் உடன் வரும் 17 வயது வீரர்..? மைதானத்தில் நடந்தது என்ன? ருதுராஜ் அப்டேட் இதான்!
செய்தியாளர் - சந்தானம்
2025 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று சிஎஸ்கே அணி சுமாரான சீசனாக தொடங்கியுள்ளது. இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு நாளை டெல்லி அணியை எதிர்த்து விளையாடவிருக்கும் சென்னை அணி, ஹோம் கிரவுண்டரில் வெற்றியை தேடி களம்காணவிருக்கிறது.
இந்தசூழலில் பேட்டிங்கில் ஒரே நம்பிக்கையாக ஜொலித்துவந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட மாட்டார் என்ற தகவல் சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அணியை தோனி வழிநடத்துவார் என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு என்னாச்சு?
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ருத்துரஜ் புல் ஷாட் அடிக்க முயற்சி செய்த நேரத்தில் வலது கரத்தில் ( Right fore arm) பகுதியில் அடிபட்டது.
இந்த சூழலில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான அடுத்தபோட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவதில் சிக்கல் இருப்பதாகவும், பயிற்சி அமர்வுக்கு பிறகே இறுதிமுடிவு எடுக்கப்படும் எனவும் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பயிற்சி அமர்வில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் அணியுடன் பயிற்சிக்கு வந்த ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் பயிற்சியை மேற்கொள்ளவில்லை. வலை பயிற்சி செய்யும் இடத்திற்கு வெளியே சற்று நேரம் UNDER ARM THROW விற்கு பயிற்சியை மட்டுமே மேற்கொண்டு விட்டு மீண்டும் வீரர்கள் அறைக்கு சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.
17 வயது வீரரை அழைத்த சிஎஸ்கே..
ருதுராஜ் காயத்தை ஒட்டி அவருக்கு மாற்றுவீரராக மும்பையை சேர்ந்த 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு சிஎஸ்கே அணி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் யாருக்கு மாற்றாக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்தசூழலில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாகவே அவர் களமிறங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக சதம் விளாசிய ஆயுஸ் மாத்ரே 7 ஆட்டங்களில் விளையாடி 65.42 சராசரியுடன் 458 ரன்கள் குவித்திருந்தார். 2025 ஐபிஎல் ஏலத்தில் ஆயுஸ் மாத்ரேவை யாரும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, சிஎஸ்கே அணியில் மாற்றுவீரராக களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் விளையாடாதபோது விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி கேப்டனாக வழிநடத்துவார் என தெரிகிறது.