Rohit Sharma
Rohit Sharma Ravi Choudhary
T20

DCvMI | T20 மறந்து போச்சா வார்னருக்கு... மீண்டும் தோற்ற டெல்லி..!

ப.சூரியராஜ்

இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் தோற்றிருக்கும் டெல்லி அணியும், ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோற்றிருக்கும் மும்பை அணியும், புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்திடக் கூடாதென குடுமிப்பிடி சண்டைப் போட்டன. ஒரு காலத்தில் `எட்டுப்பட்டி ராசா' நெப்போலியன் போல் இருந்த அணி, இப்போது `சீமராஜா' நெப்போலியன் போல் ஆகிவிட்டதில் மும்பை ரசிகர்களுக்கு உள்ளபடியே ரொம்ப வருத்தம். உள்ளுக்குள் அழவே செய்கிறார்கள். டெல்லி ரசிகர்களுக்கு இதெல்லாம் பழகிப்போயிருந்தது. அணியின் கேப்டன், அணியின் பெயர், லோகோ, ஜெர்ஸி, மைதானத்தின் அருகே நின்றுகொண்டிருக்கும் ஆட்டோ கண்ணாடி என எல்லாவற்றையும் மாற்றிப் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் மாறவில்லை. `மாறாதது ஒன்றே மாறாதது' எனும் புதுமொழியோட வாழ துவங்கிவிட்டார்கள்.

David Warner

டெல்லியில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. வார்னரும், ப்ரித்வி ஷாவும் ஒபனிங் இறங்க, முதல் ஓவரை வீசவந்தார் பெஹ்ரன்டார்ஃப். `பும்ரா, ஆர்ச்சர் ஆரம்பிக்க வேண்டிய ஓவர்' என விழியோர கண்ணீரைத் துடைத்தார்கள் பல்டி பாக்குற டர்ல வுடணும் பல்தான்கள். முதல் ஓவரின் மூன்றாவது பந்து, லாங் ஆஃபில் ஒரு தட்டு தட்டினார் ஷா. 2வது ஓவரை வீசவந்த அர்ஷத் கான், முதல் பந்திலேயே வார்னருக்கு ஒரு பவுண்டரியை வாரி வழங்கினார். கடைசிப் பந்தில், கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினார் ப்ரித்வி ஷா. 3வது ஓவரை வீசினார் கேமரூன் க்ரீன். ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை, டீப் மிட் விக்கெட்டில் ஒன்று, டீம் தேர்டில் ஒன்று என இரண்டு பவுண்டரிகளை விரட்டினார். சுழற்பந்துக்கு சாதகமாக இருந்த பிட்சில், 4வது ஓவரிலேயே சுழற்பந்தை இறக்கினார் ஹிட்மேன். ஷொகீன் வீசிய முதல் பந்தில், ஷா ஒரு பவுண்டரியை விரட்டினாலும், நான்காவது பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஸ்வீப் ஆடுகிறேன் என, பேக்வார்டு ஸ்கொயர் லெக்கில் நின்ற க்ரீனிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு கிளம்பினார்.

அறிமுக வீரர் மெரிடித், 5வது ஓவரை வீசினார். மனீஷ் பாண்டே பேட்டிலிருந்து இரண்டு பவுண்டரிகள். ஷொகீன் வீசிய 6வது ஓவரிலும், மிட் விக்கெட்டில் ஒன்று, டீப் ஸ்கொயர் லெக்கில் மற்றொன்று என இரண்டு பவுண்டரிகளை விளாசினார். பவர்ப்ளேயின் முடிவில் 51/1 என ஓரளவுக்கு நன்றாக தொடங்கியிருந்தது டெல்லி. 7வது ஓவரை வீசிய பியூஸ் சாவ்லாவை, மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்தார் வார்னர். 8வது ஓவரை வீசிய ஷொகீன், நோ பாலில் ஒரு ரன், அகலப்பந்தில் ஐந்து ரன், இன்சைடு எட்ஜில் ஒரு பவுண்டரி என 18 ரன்களை அள்ளிக்கொடுத்தார். மீண்டும் வந்த சாவ்லா, பாண்டேவின் விக்கெட்டைத் தூக்கினார். மும்பை ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள். மெரிடித் வீசிய 10வது ஓவரில், டெல்லியின் அறிமுக வீரர் யாஷ் தல், டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அழகான ஷாட். ஆனாலும் தூரத்தை கடக்கவில்லை. வதேராவின் கைகளுக்குள் சிக்கியது. அதே ஓவரில், பாவெல் ஒரு பவுண்டரியை விளாசினார். 11வது ஓவரில், பாவெல்லின் விக்கெட்டையும் தூக்கினார் சாவ்லா. 3 ஓவர்கள் பந்து வீசி, 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். 12வது ஓவரை வீசவந்தார் க்ரீன். முதல் பந்து பவுண்டரிக்கு பறந்தது. மூன்றாவது பந்தில் வார்னர் கொடுத்த கேட்சை மிஸ் செய்தார் சாவ்லா.

Piyush Chawla |Rohit Sharma

சாவ்லா வீசிய 13வது ஓவரில், லலித் யாதவ்வின் அரணைத் தாண்டி பவுல்டைக் கழட்டியது சாவ்லாவின் கூக்ளி. ஒவரின் கடைசிப்பந்தில், ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியை அணுப்பினார் சாவ்லா. திலக் வர்மா வெறியாகி, பவுலிங்கும் வீசினார். ஷொகீன் வீசிய 15வது ஓவரின் இரண்டு பந்துகளில், இரண்டு சிக்ஸர்களை வாரி வழங்கினார். க்ரீன் வீசிய 16வது ஓவரில், இரன்டு பவுண்டரிகளை எடுத்து கலக்கினார் அக்ஸர் படேல். இந்த ஓவரில் வார்னரின் அரைசதமும் வந்து சேர்ந்தது. பெஹ்ரன்டார்ஃபின் 17வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் சிக்ஸர் படேல். அந்த இரண்டாவது சிக்ஸர், கேட்ச் வாய்ப்பாக சூர்யகுமார் யாதவிடம் சென்று, அவர் முகத்தில் நங்கென பட்டு தெறித்து பவுண்டரிக்குள் விழுந்தது. ஸ்கைக்கு எப்போது விடியுமோ?

மெரிடித் வீசிய 18வது ஓவரில், ஒரு பவுண்டரியும், நோ பாலில் ஒரு சிக்ஸரும் நொறுக்கினார் அக்ஸர். 22 பந்துகளில் தனது அரை சதத்தையும் கடந்து கலக்கினார். இவர் வருவதற்கு முன்பு மொத்த இன்னிங்ஸிலும் பத்து பவுண்டரிகள் மட்டுமே அடித்து மட்ட மல்லாக்க கிடந்தது டெல்லி. அக்ஸர் மட்டுமே தனியாக ஒன்பது பவுண்டரிகளை அடித்து செங்குத்தாக தூக்கி நிறுத்தினார். 19வது ஓவரை வீசிவந்தார் பெஹ்ரன்டார்ஃப். முதல் பந்தே, அர்ஷான் கானிடம் டீப் ஸ்கொயரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் அக்ஸர். சிறப்பான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. மூன்றாவது பந்தில், ஷார்ட் தேர்டில் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் வார்னர். 47 பந்துகளில் 51 ரன்கள் எனும் கரப்பான் பூச்சி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 4வது பந்தில், குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனார். அப்படியே ஓவரின் கடைசிப்பந்தில், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார் அபிஷேக் போரெல். இந்த ஒரு ஓவரில் மட்டும் நான்கு விக்கெட்களை பறிகொடுத்து கபாலத்தில் அடிவாங்கி டமால் என சாய்ந்தது டெல்லி. மெரிடித் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியைத் தட்டி விட்டு, அடுத்து பந்தில் அவுட்டும் ஆனார் நோர்க்யா. டெல்லி கேபிடல்ஸ் அணி, 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

Axar Patel

`தம்பி, நீங்க ஓரமா உட்கார்ந்து நடக்குறதை வேடிக்கை மட்டும் பாரு' என ப்ர்திவி ஷாவுக்கு பதில் முகேஷ் குமாரை இம்பாக்ட் வீரராக கொண்டுவந்தார் வார்னர். முதல் ஓவர் வீசிய முகேஷ் குமாரை, இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கொளுத்திவிட்டார் ஹிட்டு. `என் பெயர் முகேஷ். நான் முதல் ஓவர் வீசினேன்'. 2வது ஓவரை வீசவந்தார் முஸ்தஃபிசுர் ரஹ்மான். லாங் ஆஃபில் ஒன்று, டீப் தேர்டில் ஒன்று, மிட் ஆஃபில் ஒன்று என தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்து நான்காம் வாய்ப்பாடு சொல்லி கொடுத்தார் கிஷன். 3வது ஓவரை வீசவந்த நோர்க்யாவை, பவுண்டரியுடன் வரவேற்றார் கிஷன். அதே ஓவரில், ஒரு சிக்ஸரையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார் ரோகித். 4வது ஓவரை வீசிய ஆஃப் ஸ்பின்னர் லலித் யாதவ், கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி கொடுத்தார். 5வது ஓவரை வீசவந்த அக்ஸர் படேலை, லாங் ஆனில் கிஷன் ஒரு பவுண்ட்ரியும், டீப் தேர்டில் ரோகித் ஒரு பவுண்டரியும் அடித்தனர்.

லலித் யாதவ் வீசிய 6வது ஓவரின் கடைசிப்பந்தில் மடக்கி இன்னொரு சிக்ஸரை அடித்தார் ரோகித். பவர் ப்ளேயின் முடிவில், 68/0 என பல்டி பக்குற டர்ல வுட்ட பல்தான்ஸ், வேர்ல்டு மொத்தம் அரள விட்டார்கள்.

அக்ஸர் வீசிய 7வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. லலித் வீசிய 8வது ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் அவுட் ஆனார் கிஷன். பாயின்ட்டில் பந்தைத் தட்டிவிட்டு மீண்டும் க்ரீஸுக்குள் போன கிஷனை, `செவலை தாவுடா தாவு' என ஓடவிட்டு ரன் அவுட் ஆக்கிவிட்டார் ரோகித். இந்த ஓவரிலும் 3 ரன்கள் மட்டுமே. நோர்க்யா வீசிய 9வது ஒவரின் கடைசிப்பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ரோகித். குல்தீப் யாதவ் உள்ளே வந்தார். 10வது ஓவரை வீசினார். ஓவரின் 3வது பந்தில் படாரென ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் திலக் வர்மா. 10 ஓவர் முடிவில் 91/1 பிசுறு கெளப்பி பெர்ல விட்டனர் பல்தான்கல்.

Rohit Sharma | Tilak Varma

அக்ஸர் வீசிய 11வது ஓவரில், லெக் பைஸில் ஒரு பவுண்டரி. அதையும் எல்.பி.டபிள்யுக்கு மேல் முறையீடு செய்ய, அம்பயர் காலில் தப்பித்தார் ரோகித். குல்தீப்பின் 12வது ஓவரில், திலக் `களுக்'கென ஒரு சிக்ஸரையும் ரோகித் ஒரு பவுண்டரியும் அடித்தனர். 13வது ஓவரை வீசிய அக்ஸர், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 14வது ஓவரை வீசிய லலித், 4 ரன்கள் மட்டுமே. முஸ்தஃபிசுர் வீசிய 15வது ஓவரில் வெறும் 2 ரன்கள். இப்போது ஆடுவது ரோகித்தா இல்லை மிர்ச்சி சிவாவா என ரசிகர்களுக்கு குழப்பம் வரத்தொடங்கியது. `டைட்டானிக் கேப்டனை விட, நம்ம கேப்டன் மோசமானவனா இருக்கானே' என சுதாரித்த திலக் வர்மா, முகேஷ் குமார் வீசிய 16வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர், சிக்ஸர் என அடித்து நொறுக்கினார். கடைசியில், ஓவரின் 5வது பந்தில் மனீஷ் பாண்டேயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். 29 பந்துகளில் 41 ரன்கள் என மீண்டும் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடிக்கொடுத்தார் திலக். அடுத்து வந்தார் சூர்யகுமார் யாதவ். மீண்டும் முதல் பந்தில் ஆட்டமிழந்து கோல்டன் டக் ஆனார். இரண்டு மாதங்களாக அவர் வாங்கியுள்ள வாத்துகளை வைத்து, வாத்து பண்ணையவே உருவாக்கிவிடலாம் போல. நம்ம சூர்யகுமாருக்கு என்னதான் ஆச்சு?

17வது ஓவர் வீசவந்த முஸ்தஃபிசுரை, ஒரு பவுண்டரி அடித்தார் ஹிட்டு. 5வது பந்தில், வைடு யார்க்கர் ஒன்றை ரஹ்மான் வீச அதை அடிக்கப் போய் கீப்பரிடம் கேட்ச் ஆனார் ரோகித். சிறுவயது கில்க்றிஸ்டைப் போல பாய்ந்து அந்த கேட்சைப் பிடித்தார் அபிஷேக் போரெல். அட்டகாசம் போரெல்! இப்போது க்ரீனும், டேவிட்டும் களத்தில் இருந்தனர். 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி. கையில் 6 விக்கெட்கள். 18வது ஓவரை வீசிய நோர்க்யா, 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 12 பந்துகளில் 20 ரன்கள் தேவை. 19வது ஓவரை வீசினார் முஸ்தஃபிசுர். 4வது பந்தில் டீப் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் க்ரீன். கடைசிப்பந்தில், லாங் ஆனில் ஒரு சிக்ஸ்ரைப் பொளந்தார் டேவிட். அப்படியே பொல்லார்டைப் பார்க்குற மாதிரி இருக்கு என டி.வி.க்கு திருஷ்டி கழித்தார்கள் மும்பை வாலாக்கள். 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி. நோர்க்யா பந்து வீச வந்தார்.

Cameron Green

முதல் பந்தில், க்ரீன் ஒரு சிங்கிளைத் தட்டினார். டேவிட் அடித்த இரண்டாவது பந்தை, டீப் மிட் விக்கெட்டில் நின்றுக்கொண்டிருந்த முகேஷ் குமார் கேட்ச் விட்டார். டாட் பந்து. மூன்றாவது பந்தும் டாட். லோ ஃபுல் டாஸாக வீசிய 4வது பந்தில் ஒரு சிங்கிளைத் தட்டினார் டேவிட். 5வது பந்தில் இன்னொரு சிக்ஸர். `இது என்ன மலிங்காவைப் பார்க்குற மாதிரி இருக்கு' என கண்ணைக் கசக்கினார்கள் மும்பை வாலாக்கள். கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவை. இரண்டு ரன்களை அடித்து ஓடிவிட்டார்கள் பல்தான்கள். ஒருவழியாக, ஒரு மேட்சை வென்றுவிட்டது மும்பை. மும்பையே நம்மை தோற்கடித்துவிட்டது என்றால், இனி நாம் யாரைதான் தோற்கடிப்பது என துவண்டு போனார்கள் டெல்லி ரசிகர்கள். ப்ச்ச்...