கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடப்படும் இந்திய பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அண்மை காலமாக தனது பேட்டிங்கில் மிகவும் சொதப்பி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 3 ஆட்டங்களிலும் டக் அவுட் ஆனார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் இந்த ஐபிஎல்லும் சூர்யாவுக்கு கைகொடுக்கவில்லை.
இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 19 பந்துகளை எதிர்கொண்ட சூர்யா 16 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 15 ரன்களை சேர்த்து அவரது ஆவரேஜ் 5.33 ஆக உள்ளது. இதில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார். மேலும் நேற்றையப் போட்டியில் 2 கேட்சுகளையும் தவறவிட்டார். சூர்யகுமார் யாதவின் இத்தகைய மோசமான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமல்லாமல் பிசிசிஐ-யும் கவலையுடனே இருக்கிறது.
இந்தாண்டு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் சூர்யகுமாரின் மோசமான ஆட்டம் அவரை அணியில் சேர்க்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் என கூறப்படுகிறது. இதனால் இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமாருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரே இடம்பிடிப்பார் என தெரிகிறது. இதனால் சூர்யகுமார் கடும் நெருக்கடியில் உள்ளார். இந்த ஐபிஎல் முடிவதற்குள் மீண்டும் தன்னுடைய பழைய ஆட்டத்துக்கு சூர்யாகுமார் திரும்ப வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்திய அணியில் அவருக்கென இருந்த இடம் வேறு ஒருவருக்கு சென்றுவிடும்.
இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி "சூர்யகுமாருக்கு இது முடிவல்ல. நிச்சயம் அவர் தன்னுடைய பழைய ஆட்டத்துக்கு திரும்புவார் என எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு அவருக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது. அது அவருடைய இயல்பான ஆட்டத்தை மீண்டும் வெளியே கொண்டு வரும். அவர் அவசரப்படாமல் தனது ஷாட்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சில பந்துகளை வீணாக்கினாலும் பரவாயில்லை. அவருக்கு தேவையானதாக இருப்பது ஒரே ஒரு பிரமாதமான ஷாட். அது கைகூடிவிட்டால் அவர் மீண்டும் பிரகாசிப்பார்" என தெரிவித்துள்ளார்.