chennai super kings
chennai super kings Kunal Patil
T20

CSKvGT | சாம்பியன்ஸ்... தோனி ஸ்டம்பிங் முதல் ஜடேஜாவின் வின்னிங் ஷாட் வரை... எல்லாமே சென்னை தான்..!

Wilson Raj

"இதுக்கு பேசாம மழைனு நேத்தே ஆட்டத்த முடிச்சிருக்கலாம்" - முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் சென்னை ரசிகர்களின் மனக்குமுறல் இதுவாகவே இருந்தது. மறுபக்கம் மும்பையோ "நம்மள அடிச்ச அதே... பாரபட்சம் பாக்காம அடிக்கானுக" என ஆறுதல் அடைந்திருப்பார்கள்‌. பெங்களூரு க்ரூப்போ "சொன்ன மாரியே கடிக்கானே சங்க...நல்ல வேள நான் போல அங்க" என‌ பெருமூச்சு விட்டிருப்பார்கள். அப்படி ஒரு அடி. "அட கில் அடிச்சா பரவால்ல ப்பா...எல்லார் கூடவும் அடிச்ச ஆளுனு விட்ரலாம். மொக்க போடுற ப்ளேயர்னு நம்ம கலாய்ச்ச சாய் சுதர்சன் எல்லாம் அடிக்கான் ப்பா"...மழைச் சாரவையும் கடந்து இரண்டு சிஎஸ்கே வெறியர்கள் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. ஆனால் எல்லாம் இரண்டாம் இன்னிங்ஸில் மாறப் போகிறது என்பதை யாரும் அறியவில்லை.

Chennai Super Kings captain Mahendra Singh Dhoni and Gujarat Titans captain Hardik Pandya

நேற்று குளம் போல காட்சி அளித்த மைதானம் இன்று டாஸ் போடும் போது சரியாக இருந்தது. டாஸ் வென்ற சென்னை கேப்டன்‌ தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.‌ மும்பை எல்லாம் ஃபைனல் வந்தால் முதலில் பேட்டிங் பிடித்து தானே கப் அடிப்பார்கள் என்று சென்னை ரசிகர்கள் குழம்ப அட நான் கூட பவுலிங் தான் எடுத்திருப்பேன் என்று பாண்டியா கூறியதும் தான் நிம்மதிமானது பலருக்கு. சஹா மற்றும் கில் துவக்கம்‌ தந்தனர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே கில் கொடுத்த மிக எளிமையான கேட்ச் வாய்ப்பு ஒன்றை தவற‌ விட்டார் தீபக் சஹார். இவர் தவறவிட்ட பின் இவரே வீசிய அடுத்த ஓவரில் சஹா 16 ரன்களை எடுக்க "ஆன்லைனில் இன்னைக்கு அடைமழை வெளுத்து வாங்க போகுது" என நினைத்து இருப்பார் சஹார். நான்காவது மற்றும் ஆறாவது ஓவர் என இரண்டு முறை கில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடிக்க கல்யாண பந்தியில் உட்கார்ந்து இருப்பவர்களை வேண்டுமென்றே வீடியோ எடுப்பது போல திரும்ப திரும்ப சஹாரை காட்டினார் கேமராமேன்.

சஹார் செய்த தவறுக்கு ஏழாவது ஓவரில் பரிகாரம் செய்தார் ஜடேஜா. ஜடேஜாவின் அற்புதமான பந்து வீச்சிலும் தோனியின் மிக அற்புதமான ஸ்டம்பிங்கிலும் வெளியேறினார் கில். மின்னல் வேக ஸ்டம்பிங் என்றால் என்றென்றும் தோனி தான் என்பது மீண்டும் நிரூபணம் ஆனது. ஒட்டுமொத்த அணியும், அவ்வளவு ஏன் இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய மஞ்சள் படையும் எதிர்பார்த்த ஒரு விக்கெட் கில் உடையதுதான். அதை எடுக்க முடியும் என தன் மாய விரல்கள் மீண்டும் நிரூபித்தார் தோனி. தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு என்று பலர் பெருமூச்சு விட்ட நிலையில் களத்திற்கு வந்தார் சாய் சுதர்சன்‌. தமிழக வீரர். மிகச் சிறப்பாக ஸ்பின் ஆடக் கூடியவர். ஸ்பின்னர்களை மிகவும் சரியாக ஆடினார். மீண்டும் விக்கெட் போகாமல் பார்த்துக் கொண்டார். சுதர்சனின் சுயரூபம் தெரியாமல், சுதர்சன் நமக்காக ஆடுகிறார் என்று மீம்களை அள்ளி வீசினர் இணையத்தில்.

sai sudharsan

இதற்கிடையில் சஹா வேறு பவுண்டரிகளாய்‌ அடித்துக் கொண்டு இருந்தார். விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்ததும் சென்னை ரசிகர்களுக்கு எதுவும் 2012 பிஸ்லா வந்து விட்டாரோ என்ற அஞ்சினர். ஆனால் பிஸ்லா கூட மெதுவா தானே அடிச்சான் என எங்கும் அளவுக்கு சஹா அடித்து அவுட் ஆனார். சஹா 54 ரன்களுக்கு அவுட்‌ ஆனார். இவர்கள் அது வரை நமக்காக ஆடுகிறார் என நக்கலடித்த சுதர்சன் தன் வேலையை ஆரம்பித்தார்.‌ சென்னை வீரர் தீக்ஷனா வேறு கைக்கு வரும் பந்துகளை எல்லாம் விட பவுண்டரிகள் வந்த வண்ணமே இருந்தன. தோனியும் முடிந்த அளவு தீக்ஷனாவை ஒளித்து வைத்தார். ஆனால் முத்து படத்தில் ரகுவரன் ஒளிய நினைத்தாலும் துப்பாக்கியுடன் ரஜினி சரியாக அவர் முன்பு வந்து நிற்பது போல பந்து சரியாக தீக்ஷனாவிடமே சென்றது. அவரும் கல்யாண வீட்டுக்கு வருபவர்களை வாசலில்‌ நின்று வரவேற்பது போல அத்தனை பந்துகளையும் பவுண்டரிக்கு அனுமதித்தார்.

தேஷ்பாண்டே ‌இரண்டு ஓவர்கள் வீச சென்னை ரசிகர்களின் ரத்தக் கண்ணீர் மழைத்துளிகளாக மாறி மேகத்துக்கு சென்றது. எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான் என தோனி பதிரானாவை நம்ப, அவர் வைடு போட்டு முடிப்பதற்குள்ளேயே தோனிக்கு இன்னும் பத்து வயது கூடிவிடும் போலயே என்று நினைக்கும் அளவுக்கு போட்டார். சாய் சுதர்சனும் கடைசி வரை நின்று 96 ரன்கள் எடுத்தார். ஹார்திக் 22 ரன்கள் எடுத்து தந்தார். பதிரானா 44 ரன்களும் தேஷ்பாண்டே 56 ரன்களும்‌ விட்டுத் தந்தனர். பதிரானா ஆவது இரண்டு விக்கெட்டுகளை பெற்றுத் தந்தார். ஆனால் தேஷ்பாண்டே எல்லாம்‌ தனது சமூக வலைதள கமென்ட் பொட்டியை மூடி வைப்பது சாலச் சிறந்தது. குஜராத்‌ 214 ரன்கள் எடுத்தது.

சேஸ் செய்ய சென்னை வீர்ரகள் வர, அழையா விருந்தாளியாக அட்டெண்டன்ஸ் போட்டது மழை. ருத்து ஒரு பவுண்டரி அடிக்கவும், மழை மொத்தமாக பெய்யத் துவங்கியிருந்தது. இந்த சீசனில் துஷார் தேஷ்பாண்டே 564 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார், பவுண்டரி அடித்தபோது ருத்து 564 ரன்கள் எடுத்திருந்தார் என வித்தியாசமான ஸ்டேட்டஸ் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. பள்ளத் தாக்கில் பதுங்கத் துவங்கினார் துஷார் தேஷ்பாண்டே. மழை எப்போதாவது நிற்கும்‌ என எதிர்பார்த்தே பலர் டிவியை‌ அணைத்து தூங்க சென்று விட்டனர். இதில் மழை இல்லாத போது இன்னிங்ஸ் இடைவேளயில் பிசிசிஐ ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது என்பது கூடுதல் தகவல். அம்ப்பயர்கள் உள்ளே வெளியே என வந்து ஒரு கட்டத்தில் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் தேவை என்று விதிமுறைகள் மாற்றப்பட்டது.

சென்னை அணியோ நல்லதாக போச்சு என பிரித்து மேய‌ ஆரம்பித்தது. ருத்ராஜ், கான்வே, ரஹானே என‌ உள்ளே வரும் அனைவருமே அடித்து ஆடினர். பெரும் பரபரப்பாக பேசப்பட்ட குஜராத் பவுலிங்கோ மும்பை பந்துவீச்சு போல காட்சியளித்தது. ரஷித் கான் ஓவர்கள் கூட பவுண்டரிக்கு பறக்க, பாண்டியா முழிக்க ஆரம்பித்தார். நூர் அஹ்மத் மட்டும் இரண்டு விக்கெட்டுக்கள் எடுத்து சிக்கனமாகவும் பந்து வீசினார். ஆனால் நூர் அகமத் கட்டுப்படுத்திய ரன்களை எல்லாம் லிட்டில் வீசிய‌‌ ஓவர்களில் டேலி செய்தது சென்னை.‌ மோகித் சில நல்ல பந்துகள் போட்டாலும் அவரது இரண்டாவது ஓவரை, தனது கடைசி போட்டியில் விளையாடும் ராயுடு இரண்டு சிக்சர்கள் ஒரு பவுண்டரி என பறக்க விட ஆட்டம்‌ மொத்தமும் சென்னை பக்கம்‌ வந்தது. கடைசி நேரத்தில் தோனி உள்ளே வர ரசிகர்கள் ஆக்ரோஷமாக கத்தினர். "dhoni finishes off in style' என எழுத கைகள் பரபரத்த தருணத்தில் எக்ஸ்டிரா கவரில் நின்று கொண்டிருந்த மில்லரிடம் கேட்ச் கொடுத்து முதல் பந்திலேயே வெளியேறினார் தோனி.

jadeja

டெத் ஓவர்கள் என்றாலே எதிர் டீம் வீரராக‌ மாறும்‌ ஷமி‌ கூட‌ சில நல்ல பந்துகளை வீச, மோகித் யார்க்கர்களை மாங்கு மாங்கு என வைக்க கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் என்றானது. எப்படா அவுட் ஆவான் என பல நாட்களாக கத்திய ஜடேஜா களத்தில் இருந்தார்.‌ அது வரை சும்மாவே தான் இருந்தார். ஆனால் நான்கு பந்துகளை நன்கு வீசிய மோகித்துக்கு ஏதோ அறிவுரை கூறி அனுப்பினார் நெஹ்ரா. அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி.‌ சென்னை வெற்றி பெற்றது. தோனி தலைமையிலான சென்னை அணி‌ 5ம் முறையாக கோப்பை வென்று அதிக முறை ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற அணி என்ற‌ சாதனையை மும்பை அணியுடன் பகிர்ந்து கொண்டது.