2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. பரபரப்பாக நடந்துவரும் தொடரில் 38 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடந்த லீக் போட்டியில் குரூப் பி-ல் இருக்கும் பரோடா மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் க்ருணால் பாண்டியா தலைமையிலான பரோடா அணி வெற்றிபெற்றாலும், எதிரணியில் சிஎஸ்கே பவுலர் நிகழ்த்திய சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி அபினவ் மனோகரின் அரைசதத்தின் உதவியால் 169 ரன்கள் சேர்த்தது. அதற்கு பிறகு பேட்டிங் செய்த பரோடா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷஷ்வத் ராவத் அதிரடியாக விளையாடி 37 பந்தில் 63 ரன்கள் அடிக்க 10 ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது பரோடா அணி.
ஆனால் 11வது ஓவரை வீசவந்த ஷ்ரேயாஸ் கோபால் 10.1 ஓவரில் ராவத்தை 63 ரன்னில் வெளியேற்றியதுடன், அடுத்தடுத்தடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவரையும் 10.2, 10.3 ஓவரில் கோல்டன் டக்கில் வெளியேற்றி ஹாட்-டிரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
போட்டியின் முடிவில் அடுத்தடுத்து வந்து சிறப்பாக விளையாடிய பரோடா அணி வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
கர்நாடகா வீரரான ஷ்ரேயாஸ் கோபாலை அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு சிஎஸ்கே அணி ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. ஷ்ரேயாஸ் கோபால் ஐபிஎல்லில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது மட்டுமில்லாமல், இரானி கோப்பையில் ஹாட்-ரிக் விக்கெட்டை கைப்பற்றி முதல் பவுலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லெக் ஸ்பின்னரான இவர் பந்தை ஃபிளைட் செய்து கூக்ளி மூலம் விக்கெட் எடுப்பதில் வல்லவர். இறுதியில் பேட்டிங் வந்து சில வெற்றி ஷாட்களை அடிக்கக்கூடிய ஹேண்டி பேட்டராகவும் இருக்கிறார். முதல்தர போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி 34.76ஆக இருப்பது கூடுதல் பலமாக சிஎஸ்கே அணிக்கு இருக்கப்போகிறது.