Jadeja
Jadeja @ChennaiIPL | Twitter
T20

“அது அவங்களுக்கு தெரியுது, உங்களுக்கு தெரியலையே” - மீண்டும் சர்ச்சையான ஜடேஜாவின் ட்வீட்!

Jagadeesh Rg

சிஎஸ்கே ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதில் சென்னை ரசிகர்களை நக்கலடிப்பது போல பதிவொன்றை போட்டிருந்தார். அந்தப் பதிவுதான் இப்போது வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத்துடன் அசத்தலாக வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. இது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், ரவீந்திர ஜடேஜா கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் இடும் பதிவுகள் "டீமுக்குள்ள ஏதோ சிக்கல் இருக்கும் போலேயே" என ரசிகர்களை எண்ண வைத்திருக்கின்றன.

ஒரு சின்ன பிளாஷ்பேக்கில் இருந்துபோவோம்...

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல், ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா விளையாடி வருகிறார். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை அணியின் கேப்டன்சி பொறுப்பை ஜடேஜா ஏற்றார்; பின்னர் லீக் சுற்றில் தொடர் தோல்வியின் காரணமாக விலகினார்.

Ravindra Jadeja

இச்சம்பவங்கள் முதலே அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தோனி, சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் ஜடேஜாவுக்கு இடையில் மோதல் நிலவி வந்ததாக தகவல் பரவி வந்தநிலையில், நடப்பு சீசனில் அவர் விளையாட மாட்டார் என்றே கருத்து நிலவியது. ஆனாலும் சமரசங்கள் எல்லாம் நடந்து, ஒருவழியாக இந்த சீசனில் விளையாடி வருகிறார்.

அப்படியே இப்போ வருவோம்...

இந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் கில்லியாக செயல்பட்டு வருகிறார் அவர். இந்த சீசன் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று சொல்லப்படுவதால், தோனிக்கு முன்னர் ஜடேஜா பேட்டிங்கில் களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்கள் அவர் அவுட் ஆக வேண்டும் என்று கத்தி கூச்சலிடுவதை வழக்கமாகவே ஆக்கிவிட்டனர். இதுபற்றி அவரேவும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

Ravindra Jadeja

புன்னகையுடன் ஜடேஜா அவற்றை கூறினாலும், மன வலியை மறைத்துக்கொண்டு பேசுவதாக நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்திருந்ததை ஜடேஜா லைக் செய்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஜடேஜா மட்டும் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 50 ரன்கள் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து போட்டி முடிந்த கையோடு, தோனி மற்றும் ஜடேஜா சற்று கோபத்துடன் விவாதம் செய்தவாறு மைதானத்தில் சென்ற வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், மீண்டும் இருவருக்கும் மோதலா என்று குறிப்பிட்டு வந்தனர். இதையடுத்து ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயமாக என்ற கேப்ஷனுடன், “கர்மா உங்களை திரும்பி தாக்கும். விரைவிலோ அல்லது பின்னரோ, நிச்சயமாக திரும்பி வரும்” என்று குறிப்பிட்டார்.

எதற்காக அவர் இப்படி பதிவுசெய்தார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பதிவுக்கு ஜடேஜாவின் மனைவியும், பாஜக எம்.எல்.யுமான ரிவாபா பதிவுசெய்துள்ள பதில் பதிவில், “உங்கள் வழியை பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டார். இதையடுத்து, தோனிக்கும், ஜடேஜாவுக்கும் மீண்டும் மோதலா என்றும், இல்லை சென்னை ரசிகர்களை அவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளரா என்று ரசிகர்கள் குழம்பி தீர்த்து வந்தனர். இந்நிலையில் குஜராத்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜடேஜா. இதற்காக அவருக்கு Most Valuble Asset of the Match என்ற விருதும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் Upstox என்ற நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டது.

அந்த விருது பெறும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜடேஜா "Upstox-க்கு தெரிந்தது சில ரசிகர்களுக்கு தெரியவில்லை" என பதிவிட்டுள்ளார். இந்த நக்கலான பதிவு சென்னை ரசிகர்களை நோக்கிதான் போட்டிருக்கிறார் என பலரும் ட்வீட்டில் பதிலளித்து வருகின்றனர். சென்னை ரசிகர்கள் தோனிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனக்கு கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே ஜடேஜா இதை போட்டிருக்கிறார் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் "என்னதான் சார் உங்க பிரச்னை" என ஜாலிகேலியாக கேள்வியும் எழுப்பி வருகின்றனர்!