ஹசின் - ஷமி எக்ஸ் தளம்
T20

முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்.. முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு!

முகம்மது ஷமி அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில், அவர்களின் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.4 லட்சம் வழங்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஷமி, இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவராக உள்ளார். முகம்மது ஷமி அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில், அவர்களின் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.4 லட்சம் வழங்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஷமியின் வருவாய், அவரது மகளின் எதிர்காலம் மற்றும் இருவரும் பிரிவதற்கு முன்பு அவரது பிரிந்த மனைவி ஹசின் ஜஹான் அனுபவித்த வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த தொகை தீர்மானிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஹசின் - ஷமி

மறுபுறம், ரூ.4 லட்சத்தை பராமரிப்புத் தொகையாக இறுதி செய்ததற்காக ஹசின் ஜஹான் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”கடந்த ஏழு வருடங்களாக எனது உரிமைகளுக்காகப் போராடி கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்துவிட்டேன். எனது மகளைச் சிறந்த பள்ளியில் சேர்க்க முடியவில்லை. நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமது ஷமி மற்றும் ஹசின் ஜஹானுக்குத் திருமணம் ஆனது. பின்னர், அடுத்த நான்காண்டுகளில் ஷமி மீது குடும்ப வன்முறை தொடர்பாக ஹசின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டு வன்முறையைத் தவிர, ஷமி வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் மேட்ச் பிக்சிங் செய்ததாகவும், தனது குடும்பச் செலவுகளை நடத்துவதற்கான நிதிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

முகமது ஷமி

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். அப்போது முகமது ஷமி தனது மனைவிக்கு ரூ. 50,000 மற்றும் மகளுக்கு ரூ.80,000 மாதாந்திர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு இந்த மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஹசின் ஜஹான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.