ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, பஹல்காம் குறித்து பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர், ”காஷ்மீரில் 8 லட்சம் பேரை கொண்ட ராணுவம் இருந்தும் தாக்குதலை தடுக்க முடியவில்லை என்றால், ராணுவம் பயனற்றது. ஒரு மணி நேரமாக பயங்கரவாதிகள் மக்களை கொன்றபோதிலும், 8 லட்சம் பேரில் ஒருவர்கூட அங்கு வரவில்லை, ஆனால் பாகிஸ்தானை மட்டும் குறை சொல்கிறார்கள். இந்தியாவே பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி சொந்த மக்களை கொன்றுவிட்டு, பாகிஸ்தான் மீது பழியைப் போடுகிறது” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய வீரர் ஷிகார் தவான் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அப்ரிடியின் கருத்து தொடர்பாக, உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் கௌரவ் பிதுரியும் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “பஹல்காமில் நடந்த தாக்குதல்களால் முழு நாடும் இன்னும் அதிர்ச்சியில் உள்ளது. இந்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தானியர்களை பைத்தியமாக்கியுள்ளன. எட்டு லட்சம் இந்திய வீரர்களால் தாக்குதலைத் தடுக்க எதுவும் செய்ய முடியவில்லை என்பது பற்றி ஷாஹித் அப்ரிடி பேசினார். ஆனால், 1971ஆம் ஆண்டில், 93,000 பாகிஸ்தான் வீரர்கள் நமது ராணுவத்திடம் சரணடைந்தனர். எனவே, தயவுசெய்து எங்களுக்குத் திறனைப் பற்றி கற்பிக்க முயற்சிக்காதீர்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எதையும், நாங்கள் ஏன் உங்களிடம் நிரூபிக்க வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பது உலகம் முழுவதும் தெரியும். பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' என்ற பினாமி குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
நீங்கள் விளையாட்டு ராஜதந்திரம் பற்றிப் பேசினீர்கள். எங்கள் நீரஜ் சோப்ராவே, சமீபத்தில் உங்கள் நாட்டு ஒலிம்பிக் சாம்பியனான நதீமை அழைத்ததை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே விளையாட்டுத் திறன் பற்றியும் எங்களிடம் பேச வேண்டாம். உங்களிடம் PSL உள்ளது; எங்களிடம் IPL உள்ளது. உலகம் எங்கே விளையாடுகிறது என்பதைப் பாருங்கள்; இந்தியாவில் உங்களுக்கு எப்படி அச்சுறுத்தல்கள் வந்தன என்பதைப் பற்றி நீங்கள் பேசினீர்கள். யாரும் உங்கள் நாட்டுக்கு வராதபோது, உலகமே இங்கே வந்து விளையாடுகிறது என்பதை தயவுசெய்து உணருங்கள். நீங்கள் வெளிப்படையாகவே பைத்தியம் பிடித்திருக்கிறீர்கள். ஆனால் பாகிஸ்தான் என்றால் என்னவென்று உலகிற்குத் தெரியும்" எனச் சாடியுள்ளார்.