insta photo
insta photo insta
T20

'தில்லுமுல்லு' பட பாணி: பொய் சொல்லி மேட்ச் பார்க்க லீவு.. நேரலையில் மேலாளரிடம் சிக்கிய RCB ரசிகை!

Prakash J

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம், ‘தில்லு முல்லு’. இதில் ரஜினிகாந்த் சந்திரன் கேரக்டரில் நடத்திருப்பார். தன்னுடைய முதலாளியை ஏமாற்ற நினைத்து மாட்டிக் கொள்வார். இந்தப் படத்தில் கால்பந்து ரசிகராக இருக்கும் ரஜினி, தன் நிறுவன உரிமையாளராக இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம், ‘தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ எனப் பொய் சொல்லிவிட்டுப் போய் கால்பந்து விளையாட்டை மைதானத்தில் கண்டுகளிப்பார்(முன்னதாக, நேர்முகத்தேர்வின் போது தனக்கு விளையாட்டே பிடிக்காது எனச் சொல்லியிருப்பார்).

பின்னர் அதே விளையாட்டைப் பார்க்கும் தேங்காய் சீனிவாசன், ரஜினியைப் பார்த்துவிடுவார். அதுகுறித்து, அவர் பின்னர் கேள்வி எழுப்பும்போது, ’தன்னுடைய தம்பி என்னைப் போலவே இருப்பதால், நீங்கள் அவனைப் பார்த்திருப்பீர்கள்’ எனச் சமாளித்துவிடுவார். இந்த நகைச்சுவை காட்சி படத்தில் மிகவும் அருமையாக இருக்கும். அப்படியான சம்பவம் ஒன்று, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனிலும் அரங்கேறி உள்ளது.

இதையும் படிக்க: ஹசரங்காவுக்குப் பதில் மாற்று வீரர்; சர்ஃப்ரைஸ் கொடுத்த சன்ரைசர்ஸ்! யார் இந்த விஜயகாந்த் வியஸ்காந்த்?

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் 15வது லீக் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் மோதின. இதில் லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், இப்போட்டிக்காக அலுவலகத்தில் பொய் சொல்லிவிட்டுப் பெண் ரசிகை ஒருவர் போயிருக்கிறார். அந்தப் போட்டிக்கு அவர் சென்றபோது, நேரலை ஒளிபரப்பின்போது அவர் வேலைசெய்யும் நிறுவனத்தின் மேலாளரிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து விசாரித்த நிறுவனத்தின் மேலாளர், ’நீங்கள் ஆர்சிபி ரசிகைதானே. போட்டி தோல்வியில் முடிந்ததால் நீங்கள் வருந்தியதை நான் டிவியில் பார்த்தேன்’ எனக் கேட்டுள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யத்தை அந்தப் பெண் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், லக்னோ - பெங்களூரு அணிகள் மோதிய போட்டியை நேரலையில் பார்க்கச் சென்றபோது, தனது மேலாளர் தன்னை டிவியில் பார்த்ததாகவும், தாங்கள் ஆர்.சி.பி. ரசிகையா என்றும் கேட்டார். அதற்கு தாம், ‘ஆம்’ என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதில், ”போட்டி தோல்வியில் முடிந்ததால் தாங்கள் கவலையுடன் அரங்கில் இருந்து வெளியேறியதை நான் பார்த்தேன்’’ என்று தனது மேலாளருடன் நடந்த அரட்டையின் ஸ்கிரீன் ஷாட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: மேற்கு வங்கம்: பரப்புரையில் மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்பி.. வெடித்த சர்ச்சை!